சென்னை:தமிழக அரசின் சார்பில் ஆண்டுதோறும் பல ஆயிரக்கனக்கான இஸ்லாமியர்கள் புனித ஹஜ் பயணம் மேற்கொண்டு வருகின்றனர். இந்த ஆண்டிற்கான புனித ஹஜ் பயணம் கடந்த மே மாதம் 26-ஆம் தேதி முதல் பல குழுக்களாக தொடர் விமானங்கள் மூலம் தொடங்கியது. முதலில் சென்னையிலிருந்து விமானம் மூலம் சவுதி அரேபியாவின் ஜெட்டா நகருக்கு சென்று, அங்கிருந்து அவர்கள் மெக்காவுக்கும் மதினாவுக்கும் அழைத்து செல்லப்படுவர். இதுவரை இந்த ஆண்டில் 5801 பேர் சென்னை விமான நிலையத்தில் இருந்து அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
அமைச்சர் செஞ்சி மஸ்தான் (CREDITS- ETV Bharat Tamil Nadu) இந்நிலையில் இவர்கள் பயணத்தை முடித்துவிட்டு இன்று முதல் ஜூலை13 ஆம் தேதி வரை 17 சிறப்பு விமானங்களில் சென்னைக்கு திரும்ப உள்ளனர். இதில் 326 பயணிகள் இன்று பயணம் முடித்துவிட்டு சென்னைக்கு திரும்பிய நிலையில், அவர்களை வரவேற்க சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர்கள் நலன் அமைச்சர் செஞ்சி மஸ்தான் சென்னை விமானநிலையத்திற்கு வந்தார்.
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் கூறுகையில் “ புனித ஹஜ் பயணம் மேற்கொண்டு 5801 நபர்களில் 326 நபர்கள் அடங்கிய முதல் குழு பயணத்தை முடித்துவிட்டு திரும்பி வந்துள்ளார்கள், தமிழக அரசு சார்பாக அவர்களை வரவேற்கிறோம்.
இந்த ஆண்டில் இருந்து புனித ஹஜ் பயணம் மேற்கொள்கிற ஒவ்வொரு நபருக்கும் தலா 25 ஆயிரம் ரூபாய் இணை மானியம் வழங்குவதற்கு முதல்வர் ஒப்புதல் அளித்துள்ள நிலையில், அந்த திட்டத்தை செயல்படுத்த உள்ளோம். இந்த ஆண்டின் பயணித்தின்போது வெயிலின் தாக்கம் தாங்க முடியாமல் பத்து பேர் உயிரிழந்துள்ளனர்.மேலும் ஒருவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். மேலும் அந்த நாட்டில் நடைபெற்ற பேருந்து விபத்தில் தமிழ்நாட்டை சேர்ந்த ஒருவர் உயிரிழந்திருப்பது கவலை அளிப்பதாக இருகிறது. அவர்களுக்கு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. எதிர்காலத்தில் அவர்களுக்கு பிரச்சனைகள் ஏற்படாமல் இருப்பதற்கு ஒரு குழு அமைக்க இருக்கிறோம்" என்று அமைச்சர் தெரிவித்தார்.
இதையும் படிங்க:அப்புறம் திமுக ஆட்சி எதற்கு? - சாதிவாரி கணக்கெடுப்பு குறித்து ராமதாஸ் காட்டம்!