தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

"தமிழ்நாட்டில் மஞ்சள் காய்ச்சல் தடுப்பூசி செலுத்தப்படும் மூன்று மையங்கள் இவைதான்!" - TN YELLOW FEVER VACCINATION CENTER - TN YELLOW FEVER VACCINATION CENTER

Yellow Fever Vaccination Centers In TN: மஞ்சள் காய்ச்சலுக்கான தடுப்பூசியை செலுத்திக்கொள்ள தமிழகத்தில் மூன்று அங்கீகரிக்கப்பட்ட மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன என்று தமிழக சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

File photo of vaccination
தடுப்பூசி செலுத்துவது தொடர்பான கோப்பு படம் (Credits - ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : May 14, 2024, 12:05 PM IST

சென்னை: ஆப்பிரிக்கா மற்றும் தெற்கு அமெரிக்க நாடுகளில் மஞ்சள் காய்ச்சல் (Yellow Fever) நோய்த் தாக்கம் காணப்படுகிறது. இந்தக் காய்ச்சல் பரவலைத் தடுக்க இந்தியாவில் இருந்து அந்நாடுகளுக்குச் செல்வோர் மற்றும் அந்நாடுகளில் இருந்து இந்தியாவிற்கு வருவோர் மஞ்சள் காய்ச்சல் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என மத்திய சுகாதார அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.

இதையடுத்து மஞ்சள் காய்ச்சல் தடுப்பூசி செலுத்திக் கொள்வது தொடர்பாக, தமிழக பொதுச் சுகாதாரம் மற்றும் நோய்த் தடுப்பு மருத்துவத் துறை பத்திரிக்கை செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

அதில், "மஞ்சள் காய்ச்சல் தடுப்பூசி செலுத்திக் கொண்ட ஒருவர், பத்து நாட்களுக்கு பிறகே ஆப்பிரிக்கா மற்றும் தெற்கு அமெரிக்க நாடுகளுக்குப் பயணம் மேற்கொள்ளவும், அந்த நாடுகளில் இருந்து இந்தியாவிற்கு வருவதற்கும் அனுமதிக்கப்படுவர். இது, விமான நிலையங்கள் மற்றும் துறைமுகங்களில் மஞ்சள் காய்ச்சல் தடுப்பூசி செலுத்தியதற்கான சான்றிதழ் மூலம் கண்காணிக்கப்படுகிறது.

மேலும், இந்தியாவில் மஞ்சள் காய்ச்சல் பாதிப்பு விவரங்கள் மற்றும் தடுப்பூசி மையங்கள் குறித்த விவரங்களை https://ihpoe.mohfw.gov.in/index.php என்ற இணையதளத்தின் வாயிலாகத் தெரிந்து கொள்ளலாம். தமிழ்நாட்டில் மத்திய சுகாதார அமைச்சகம் அங்கீகரித்துள்ள மஞ்சள் காய்ச்சல் தடுப்பூசி செலுத்தும் மூன்று மையங்களில் அசல் கடவுச்சீட்டு, சுயவிவரங்கள் அடங்கிய தொகுப்பு, மருத்துவ சிகிச்சை விவரங்கள் (ஏதேனும் இருப்பின்) போன்ற ஆவணங்களைக் கொண்டு பதிவுசெய்து தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும்.

மத்திய சுகாதார அமைச்சகம் அங்கீகரித்துள்ள 3 மஞ்சள் காய்ச்சல் தடுப்பூசி செலுத்தும் மையங்கள்:

1. சென்னை கிண்டியில் உள்ள பன்னாட்டு தடுப்பூசி மையம் மற்றும் கிங் நோய்த்தடுப்பு ஆராய்ச்சி நிலையத்தில், அனைத்து செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் காலை 10 மணி முதல் 12 மணி வரை தடுப்பூசிகள் வழங்கப்படும். தடுப்பூசி செலுத்திக் கொள்ள விரும்புவோர் தினமும் காலை 9.30 முதல் 10.00 மணி வரை அதுகுறித்து பதிவுசெய்து கொள்ளலாம் அல்லது www.kipmr.org.in என்ற இணையதள முகவரியில் 24 x 7 தடுப்பூசி செலுத்திக் கொள்வது தொடர்பாக பதிவு செய்யலாம்.

தாமதமாக வரும் பயனாளிகளுக்கு தடுப்பூசி இருப்பை பொறுத்து அவை வழங்கப்படும். தடுப்பூசிகளுக்கான கட்டணமாக ரூ.300 செலுத்த வேண்டும். மேற்படி கட்டண தொகையினை வங்கி பரிவர்த்தனை மூலமாகவோ அல்லது ரொக்கமாகவோ செலுத்தலாம்.

2. சென்னை இராஜாஜி சாலையில் அமைந்துள்ள துறைமுக சுகாதார நிறுவனத்தில், அனைத்து திங்கள் மற்றும் புதன்கிழமைகளில் காலை 09.00 மணி முதல் 12.00 மணி வரை தடுப்பூசிகள் செலுத்தப்படும். இதற்கான பெயர் பதிவை பயனாளர்கள் நேரடியாக தினமும் காலை 8.00 முதல் 09.00 மணி வரை செய்து கொள்ளலாம்.

இதனைத் தவிர, porthealthofficechennai@gmail.com என்ற இணையதள முகவரியின் மூலம், காலை 09.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை பதிவு செய்யலாம். தடுப்பூசி வழங்கப்படும் நாட்களில் தாமதமாக வரும் பயனாளிகளுக்கு தடுப்பூசி வழங்க இயலாது. தடுப்பூசிகளுக்கான கட்டணம் ரூ.300-ஐ இணையம் மூலமாக செலுத்த வேண்டும்.

3. தூத்துக்குடி, உலக வர்த்தக அவென்யூ அருகே புதிய துறைமுகத்தில் அமைந்துள்ள துறைமுக சுகாதார அமைப்பில், அனைத்து செவ்வாய்கிழமைகளிலும் காலை 11 மணி முதல் 1.00 மணி வரை தடுப்பூசிகள் வழங்கப்படும்.

தடுப்பூசிக்கான செலுத்தி கொள்வதற்கான பெயர் முன்பதிவு தினமும் காலை 10.00 முதல் 11.00 மணி வரை மட்டும் நேரடியாக செய்து கொள்ளலாம். தடுப்பூசிகள் வழங்கப்படும் நாட்களில் தாமதமாக வரும் பயனாளிகளுக்கு மதியம் 12.00 மணி வரை மட்டுமே தடுப்பூசிகள் வழங்கப்படும். தடுப்பூசி கட்டணமான ரூ.300-ஐ ரொக்கமாக மட்டுமே செலுத்தப்பட வேண்டும்.

ஆகவே, ஆப்பிரிக்கா மற்றும் தெற்கு அமெரிக்க நாடுகளுக்குப் பயணம் செய்ய உள்ளவர்கள், மேற்கண்ட இடங்களில் உள்ள தடுப்பூசி மையங்களை அணுகி, மஞ்சள் காய்ச்சலுக்கான தடுப்பூசியை செலுத்திக் கொண்டு சான்றிதழ் பெற்று பயணம் செய்ய அறிவுறுத்தப்படுகிறார்கள்.

மேற்கண்ட மூன்று இடங்களைத் தவிர, தமிழ்நாட்டில் வேறு எந்த அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளிலும் மத்திய சுகாதார அமைச்சகம் அங்கீகரித்துள்ள மஞ்சள் காய்ச்சல் தடுப்பூசி செலுத்தப்படுவதில்லை என தெரிவித்துக்கப்படுகிறது" என்று பொது சுகாதாரத் துறையின் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:எச்.ஐ.வி மற்றும் பிறப்புறுப்பு தொற்றைக் கட்டுப்படுத்துமா மென்சுரல் கப்: ஆய்வு கூறுவது என்ன?

ABOUT THE AUTHOR

...view details