சென்னை:குரங்கம்மையால் பாதிக்கப்பட்டு வெளிநாட்டிலிருந்து வந்தவரின் உடல்நிலை சீராக உள்ளது என சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சை பெரும் நோயாளிகளின் வசதிக்கான சேவைகளை இன்று தொடங்கி வைத்த அமைச்சர் மா சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
அதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசியவர்,"வடசென்னை மக்களின் மருத்துவ தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் மருத்துவ கட்டமைப்புகள் தொடர்ந்து மேம்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் ஸ்டான்லி மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் பல்வேறு புதிய திட்ட பணிகள் தொடங்கி வைக்கப்பட்டிருக்கிறது. பல்வேறு பணிகள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளது.
ட்ரக் இன்பர்மேஷன் சென்டர்:இந்தியாவில் முதல் முறையாக அரசு மருத்துவமனைகளில் ட்ரக் இன்பர்மேஷன் சென்டர் என்கின்ற மருந்து தகவல் மையம் திறந்து வைக்கப்பட்டிருக்கிறது. இந்த ட்ரக் இன்பர்மேஷன் சென்டரின் மூலம் ஒவ்வொரு மருந்தையும் எப்படி உட்கொள்வது? எந்த அளவு உட்கொள்வது? என்னென்ன நோய்களுக்கு என்னென்ன மாதிரியான மருந்துகளை உட்கொள்வது? போன்ற விஷயங்களை நோயாளிகளுக்கு அறிவிப்பதற்கும் தெரிந்து கொள்வதற்கு உருவாக்கப்பட்டிருக்கிறது.
முழு உடல் பரிசோதனை:வடசென்னை பொறுத்தவரை தொழிலாளர்கள் மிகுந்து இருக்கக்கூடிய பகுதி என்பதால் முழு உடல் பரிசோதனை திட்டம் ஆயிரம் ரூபாய்க்கு தொடங்கி வைக்கப்பட்டு சிறப்பாக பயன்பாட்டில் இருந்து வருகிறது. மாணவர்களிடையே நல்ல ஒழுக்கத்தை உருவாக்குகின்ற வகையில் மாணவர்களிடையே தமிழ் பற்றை உருவாக்குகிற வகையில் தமிழ் மன்றம் உருவாக்கப்பட்டிருக்கிறது.