திருச்சி:இஸ்லாமியர்கள் ஐந்து கடமைகளில் ஒன்றாக கருதப்படும் புனித 'ஹஜ்' யாத்திரைக்காக தமிழ்நாட்டில் இருந்து, ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கான இஸ்லாமியர்கள் சவுதி அரேபியாவின் மெக்கா மற்றும் மதினா நகர்களுக்கு பயணம் மேற்கொள்வர். அவ்வாறு பயணம் மேற்கொள்ளும் தகுதியுள்ள நபர்களுக்கு தமிழக அரசின் சார்பில் மானியம் வழங்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், தமிழ்நாடு அரசு ஹஜ் கமிட்டியின் மூலம் கடந்த ஜூன் 10ஆம் தேதி திருச்சியில் இருந்து புனித ஹஜ் யாத்திரை மேற்கொண்டவர்கள் பயணம் முடிந்து இன்று திருச்சி வந்தடைந்தனர். அவர்கள் தங்களுக்கு சரியான முறையில் வசதிகளை ஹஜ் கமிட்டி ஏற்படுத்தி தரவில்லை என குற்றம் சாட்டினர்.
மேலும், இது குறித்து ஹஜ் பயணிகள் செய்தியாளர்களிடம் கூறுகையில், “கடந்த ஜூன் 10ஆம் தேதி ஹஜ் கமிட்டி மூலமாக 345 பேர் ஹஜ் பயணம் செய்தோம். பயணிகளுக்கு உதவியாக ஒரு குழுவிற்கு இரண்டு வழிகாட்டிகள் ஹஜ் கமிட்டி மூலம் நியமிக்கப்படுவார்கள். ஆனால், எங்களது விமானம் கடைசி விமானம் என்பதால் எங்களுக்கு வழிகாட்டிகள் நியமிக்கப்படவில்லை.
போதிய அளவில் தங்கும் இடம் மற்றும் கழிப்பிட வசதிகள் ஏற்படுத்தவில்லை. ஹஜ் கமிட்டி மூலம் சரியான வழிமுறைகள் இல்லை. பயணிகள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகினர். மேலும் 5 நாட்கள் எல்லையில்லா கஷ்டத்தை அனுபவித்தோம்" என்றனர். நாங்கள் கொண்டு வந்த ஜம்ஜம் நீர், வாசனை திரவியங்கள் உள்ளிட்ட பொருட்கள் திருடு போனது.