சென்னை: தமிழக அரசின் நிதிலை அறிக்கையை நிதி மற்றும் மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்துள்ளார். அதில், தமிழகத்தில் வறுமையை ஒழிக்க முதலமைச்சரின் தாயுமானவர் திட்டம் எனும் திட்டத்தை அறிவித்துள்ளார்.
அதில், "கடந்த ஒரு நூற்றாண்டு காலமாக நாட்டிற்கே முன்னோடியாக விளங்கிடும் வகையில், தமிழ்நாட்டில் அறிமுகப்படுத்தப்பட்ட பல சமூகநலத் திட்டங்களின் வாயிலாக வறுமையை குறைப்பதில் நமது மாநிலம் மிகச் சிறந்த முன்னேற்றத்தை அடைந்துள்ளது. அதை அங்கீகரிக்கும் வகையில் ஒன்றிய அரசின் 'நிதி ஆயோக்' சமீபத்திய தனது அறிக்கையில் பன்முக வறுமைக் குறியீட்டின்படி, தமிழ்நாட்டில் 2.2 சதவீதம் மக்களே வறுமைக் கோட்டிற்குக் கீழ் வாழ்கின்றனர் என அறிவித்துள்ளது.
இருப்பினும், தற்போது மிகவும் வறிய நிலையில் வாழ்ந்து கொண்டிருக்கும் கடைக்கோடி ஏழைக் குடும்பங்களையும் கண்டறிந்து, அவர்களின் வாழ்க்கைத் தரத்தை முன்னேற்றிட அரசு முடிவு செய்துள்ளது. அடுத்து வரும் இரண்டு ஆண்டுகளில் மிகவும் வறிய நிலையில் உள்ள சுமார் 5 லட்சம் ஏழைக் குடும்பத்தினருக்கு அரசின் உதவிகள் அனைத்தையும் ஒருங்கிணைத்து வழங்கி, விரைவில் அவர்களை வறுமையில் இருந்து மீட்டெடுத்திட அரசு உறுதியாக உள்ளது.