சென்னை: நாட்டின் 78வது சுதந்திர தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு அரசு சார்பாக நல்லாளுமை விருதுகளை, முதல்வரின் முகவரித்துறை அலுவலர், 4 ஐஏஎஸ் அதிகாரிகள், ஒரு மருத்துவர் ஆகியோருக்கு பல்வேறு பிரிவுகளில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
நல்லாளுமையில் சிறந்த பயன் எய்திட பணியாற்றியவர்கள், வெற்றிகரமாக புதிய உத்திகள், புதிய முயற்சிகள் மற்றும் சிறந்த வழிமுறைகளை செயல்படுத்தியதன் வாயிலாக, பொதுமக்களுக்கு சிறந்த சேவை கிடைக்க சக பணியாளர்களை வழிநடத்துவோர், அரசின் திட்டங்கள் மற்றும் சேவைகள் பொதுமக்களுக்கு முறையாக கிடைக்க பணிபுரிந்தோருக்கு ஆண்டுதோறும் இந்த நல்லாளுமைக்கான விருது தமிழக முதலமைச்சரால் சுதந்திர தினத்தன்று வழங்கப்படுகிறது. அரசு ஊழியர்கள், தனிநபர்கள், ஒரு குழு அல்லது அமைப்பு, நிறுவனம், அலுவலகம் என்ற அடிப்படையில் 3 பிரிவுகளாக வழங்கப்படுகிறது. இதில், விருதாளர்களுக்கு சான்றிதழுடன், ரூ.2 லட்சம் பரிசும் வழங்கப்படுகிறது.
நல்லாளுமை விருது பெற்ற அதிகாரிகள்:இந்த ஆண்டுக்கான தனி நபர் பிரிவில், தரவு தூய்மைத்திட்டம் வாயிலாக கலைஞர் மகளிர் உரிமைத் தொகை உள்ளிட்ட பல்வேறு திட்டங்களில் தகுதியான பயனாளிகளை தேர்வு செய்ததற்காக, முதல்வரின் முகவரித்துறையின், தலைமை தொழில்நுட்ப அலுவலர் த.வனிதா, உயர்கல்வியில் மாணவர்கள் சேர்க்கையை விகிதத்தை கணிசமாக உயர்த்தியதற்காக விருதுநகர் ஆட்சியர் வீ.ஜெயசீலனுக்கு நல்லாளுமை விருது வழங்கப்பட்டது.
அதேபோல், சென்னை பன்னாட்டுப் புத்தகக் கண்காட்சி வாயிலாக தமிழ் இலக்கிய படைப்புகளை உலக மொழிகளுக்கு எடுத்துச்செல்லவும், உலகின் சிறந்த நூல்களை தமிழில் மொழிபெயர்க்கவும் வழிவகை செய்ததற்காக பொது நூலகங்கள் துறை இயக்குநர் க.இளம்பகவத்துக்கு நல்லாளுமை விருது வழங்கப்பட்டது.
அமைப்பு என்ற பிரிவில் உறுப்பு மாற்று சிகிச்சை திட்டத்தை சிறப்பாக செயல்படுத்தியதற்காக தமிழ்நாடு உறுப்பு மாற்று ஆணைய உறுப்பினர் செயலர் ந.கோபால கிருஷ்ணனுக்கும், முதலமைச்சரின் காலை உணவுத்திட்டத்தை, மகளிர் சுய உதவிக்குழுக்களை கொண்டு சிறப்பாக செயல்படுத்தியதற்காக தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவன நிர்வாக இயக்குநர் ச.திவ்யதர்சினிக்கும், நான் முதல்வன் திட்டம் வாயிலாக இளைஞர்களுக்கான திறன் வளர்ப்பு பயிற்சி முறைகளில் புதுமை புகுத்தியதற்காக தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக்கழக மேலாண் இயக்குநர் ஜெ.இன்னசன்ட் திவ்யாவுக்கும் நல்லாளுமை விருது வழங்கப்பட்டது.