சென்னை:தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி இன்று (ஜூலை 15) காலை 11.25 மணிக்கு, விஸ்தாரா ஏர்லைன்ஸ் பயணிகள் விமானத்தில் சென்னையில் இருந்து டெல்லிக்கு புறப்பட்டுச் சென்றார். ஆளுநருடன் செயலாளர், பாதுகாப்பு அதிகாரி, உதவியாளர் ஆகியோரும் சென்றுள்ளனர். ஆளுநர் ஐந்து நாட்கள் பயணமாக டெல்லி சென்று விட்டு, ஜூலை 19 ஆம் தேதி மாலை 4.20 மணிக்கு விஸ்தாரா ஏர்லைன்ஸ் பயணிகள் விமானத்தில் டெல்லியில் இருந்து மீண்டும் சென்னைக்கு திரும்ப உள்ளார்
தமிழ்நாடு ஆளுநரின் இந்த டெல்லி பயணம் அவருடைய சொந்த பயணம் என்று கூறப்படுகிறது. ஆனாலும், 5 நாட்கள் டெல்லியில் தங்கியிருக்கும் ஆளுநர் ரவி, ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா மற்றும் பிரதமர் மோடியை சந்தித்து பேசுவதற்கு வாய்ப்புகள் உள்ளன என்று கூறப்படுகிறது. புதிதாக பிரதமராக மோடி பொறுப்பேற்ற பின்பு, ஆளுநர் ரவி ஒரு முறை டெல்லி சென்றார். ஆனால், அப்போது பிரதர் மோடியை அவர் சந்தித்து பேசவில்லை.
இந்த நிலையில் ஏற்கனவே சில மாநில ஆளுநர்கள், டெல்லிக்குச் சென்று பிரதமர் மோடியை மரியாதை நிமித்தமாக சந்தித்துப் பேசி உள்ளனர். எனவே, இம்முறை ஆளுநர் ரவியும், பிரதமர் மோடியை சந்தித்து பேசுவார் என்று கூறப்படுகிறது.