சென்னை: ஆசிரியர் தினத்தை முன்னிட்டு சென்னை ஆளுநர் மாளிகையில் 'எண்ணி துணிக' 16 வது நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என் ரவி கலந்துக் கொண்டு ஆசிரியர்களுக்கு பாராட்டு சான்றிதழை வழங்கி பேசினார்.
அப்போது அவர் பேசியதாவது; தமிழக முன்னாள் முதல்வர் காமராஜர், தனது சிறந்த தொலைநோக்குப் பார்வையுடன், தமிழ்நாடு முழுவதும் அரசுப் பள்ளிகளின் பெரிய வலையமைப்பை நிறுவி, மதிய உணவுத் திட்டத்தைத் தொடங்கினார். இந்த திட்டம் நமது மாநிலத்துக்கு ஒரு வலுவான அடித்தளத்தை அமைத்துடன் பல மாநிலங்களுக்கும் முன்னோடியாக உள்ளது. அந்த அடித்தளத்துடனேயே நாம் தொடர்ந்து முன்னேறினோம்.
ஆனால், துரதிருஷ்டவசமாக, அந்த அடித்தளம் பலவீனமடைந்துள்ளது. கல்வியின் தரத்தில் கடும் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. ஆய்வுகளின்படி, நமது அரசுப் பள்ளிகளில் கற்பித்தல் தரம் தேசிய சராசரியை விடக் குறைந்துள்ளது.
நமது ஒன்பதாம் வகுப்பு மாணவர்களில் 75% பேரால் இரண்டு இலக்க எண்ணை அடையாளம் காண முடியவில்லை, அவர்களில் 40% பேரால் இரண்டாம் வகுப்பு பாட புத்தகத்தைப் படிக்க முடியாததால் அவர்கள் வேலையின்றிப் போயிருக்கிறார்கள். இந்த விஷயத்தில் தொடர்ந்து நாம் மறுக்கும் நிலையிலேயே இருக்க முடியாது. இது சரி செய்யப்பட வேண்டும்.
தமிழகத்தில் கல்வித்தரம் குறைந்து, மாணவர் கற்கும் திறன் குறைந்தும், அவர்களுக்கு பட்டங்கள் வழங்கப்படுகின்றன. இதனால் வேலை வாய்ப்பின்மை ஏற்படுகிறது. பல அரசு பள்ளிகளில் உள்கட்டமைப்பு வசதிகள் இல்லை. ஆசிரியர் காலி பணியிடங்கள் அதிகமாக உள்ளன. மாணவர்கள் கஞ்சா மட்டுமில்லாமல் ஹெராயின், மெத்தாம்பேட்டமைன் போன்ற Chemical synthetic drugs க்கு அடிமையாக உள்ளனர்.
மாணவர்களை பெற்றோர்கள் விழிப்புணர்வுடன் பார்த்துக் கொள்ள வேண்டும். பள்ளி கல்லூரிகளில் போதை இல்லாத இடங்களாக மாற்ற வேண்டும். அனைத்து துறைகளிலும் நாம் பலமாக இருக்க வேண்டும், பலவீனமாக இருந்தால் யாரும் நம்மை மதிக்க மாட்டார்கள் என தெரிவித்தார். அதனைத் தொடர்ந்து ஆளுநர் ரவி ஆசிரியர்களுடன் கலந்துரையாடி ஆசிரியர்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதில் அளித்தார்.
கேள்வி: AI எதிர்காலத்தில் என்னென்ன பாதிப்புகளை ஏற்படுத்தும் என நினைக்கிறீர்கள்?
ஆளுநர் பதில்: இதற்கு பதில் கூறுவது கடினமானது, AI தொழில்நுட்பம் உலகளவில் வேகமாக வளர்ந்து வருகிறது. கடந்த 10 ஆண்டுகளில் இயந்திரங்களே இயந்திரங்களோடு கலந்துரையாடுவதெல்லாம் நடைபெற்று உள்ளது. மனித மூளையை விட பன்மடங்கு வேகமாக AI செயல்படுகிறது. ஆனால், இயந்திரங்களால் மனிதர்களின் உணர்வுகளை புரிந்து கொள்ள முடியாது. வருங்காலங்களில் AI தொழில் நுட்பத்தின் வளர்ச்சி இளைஞர்களிடம் வேலையிழப்பை ஏற்படுத்தும். இப்போதே பல தகவல் தொழில் நுட்ப பணிகளில் மனிதர்களின் வேலைகளை AI செயலிகள் செய்து வருகின்றன சமூக வலைதளங்களில் பொய்யான தகவல்கள், புகைப்படங்கள் அதிகமாக பரவ வாய்ப்பு உள்ளது என்கிறார்.
புதிய கல்வி கொள்கை பற்றிய கேள்விக்கு பதிலளித்து பேசிய ஆளுநர் ஆர். என் ரவி, புதிய கல்வி கொள்கைக்கு மாற்று கிடையாது. அதனை அனைவரும் ஏற்க வேண்டும். மத்திய அரசு சில பேரிடம் கருத்துக்களை பெற்று புதிய கல்விக் கொள்கையை கொண்டு வரவில்லை. பலதரப்பட்ட மக்கள் கல்வியாளர்களின் கருத்தினை பெற்று புதிய கல்விகொள்கை கொண்டு வரப்பட்டுள்ளது என்றார்.
பிஎம் ஸ்ரீ பள்ளிகள் திட்டம் பற்றி உங்களின் கருத்து என்ன? என்ற கேள்விக்கு பதிலளித்த ஆளுநர், பிஎம் ஸ்ரீ பள்ளிகள் திட்டம் என்பது கற்பித்தல் மற்றும் கற்றலுக்கான முன்னோக்கி செல்லும் திட்டம். இந்த திட்டம் மாணவர்களிடையே படைப்பாற்றலை தூண்டுகிறது. பிஎம் ஸ்ரீ பள்ளிகள் திட்டத்திற்கு மாநில அரசு புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து கொண்டால், மத்திய அரசு இத்திட்டத்திற்கான பணத்தை வழங்க தயாராக உள்ளது. இந்த திட்டத்திற்கு பெரும்பாலான மாநிலங்கள் ஒப்புக் கொண்டுள்ளன.
சில மாநிலங்களுக்கு இட ஒதுக்கீடு உள்ளது, பிஎம் ஸ்ரீ திட்டத்திற்கு முதலில் தமிழக அரசு புரிந்துணர்வுக்கு ஒப்புதல் தந்தனர். பின்னர் ஒப்பந்தம் கையெழுத்தாகும் வேளையில் சில மாற்றம் செய்ய வேண்டும் என தெரிவித்தனர். இதனை மத்திய அரசு ஏற்க மறுத்துவிட்டது. மற்ற திட்டங்களுக்கு மத்திய அரசு தொடர்ந்து நிதி வழங்கி வருகின்றது. இத்திட்டத்திற்கு தமிழக அரசு ஆதரவும் அளிக்கவில்லை, நிராகரிக்கவும் இல்லை என்றார்.
இதையும் படிங்க:பெண் குழந்தையை கொன்று புதைத்த கொடூர தம்பதி.. ஒன்பதே நாளில் நிகழ்ந்த துயரம்.. வேலூரில் நடந்தது என்ன?