சென்னை: காந்தியின் 156வது பிறந்தநாளை முன்னிட்டு, கிண்டி காந்தி மண்டபத்தில் உள்ள காந்தியின் திருவுருவச் சிலைக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி மரியாதை செலுத்தினார். தொடர்ந்து, மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் காந்தி சிலைக்கு மரியாதை செலுத்தினார்.
பின்னர் காந்தி மண்டபத்தில் நடைபெற்ற மாணவர்களின் கலைநிகழ்ச்சியை அவர் பார்வையிட்டார். அதன்பின் மாணவர்கள் மத்தியில் பேசிய ஆளுநர், "காந்திமண்டபம் உரிய பராமரிப்பு இல்லாமல் உள்ளது. ஆங்காங்கே குப்பைகளும், மதுபாட்டில்களையும் பார்த்து வேதனையடைந்தேன்.
நாட்டிற்கு சுதந்திரம் கிடைத்து 75 ஆண்டுகள் ஆனாலும், தலித் மக்களுக்கு எதிரான பாகுபாடு நீங்கவில்லை. தமிழ்நாட்டில் சமூகநீதி பேசுகிறார்களே தவிர நடைமுறையில் இல்லை. நாடு முழுவதும் தலித் மக்களுக்கு எதிரான குற்றங்கள் நடந்தாலும், தமிழ்நாட்டில் தலித் மக்களுக்கு எதிரான குற்றங்கள் கடந்த மூன்று ஆண்டுகளில் அதிகரித்துள்ளது.
கடந்த மூன்று ஆண்டுகளில் NCRB புள்ளிவிவரங்களின்படி தலித் மக்களுக்கு எதிரான குற்றங்கள் 40 சதவீதம் அதிகரித்துள்ளது. கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயம் மரணத்தில் 60 பேர் தலித் மக்கள் தான். தலித் மக்கள் பயன்படுத்தும் குடிநீர் தொட்டியில் மனிதக் கழிவுகள் கலக்கப்படுகிறது. கோயிலுக்குள் செல்ல அனுமதி மறுக்கப்படுகிறது. மேலும், தலித் மக்களுக்கு எதிரான குற்றங்களை பார்த்து வெட்கப்படுகிறேன். தலித் மக்களுக்கு எதிரான குற்றங்களில் உரிய நீதி கிடைப்பதில்லை" என தெரிவித்தார்.