சென்னை:புற்று நோயால் பாதிக்கபட்டவர்களின் மருத்துவ செலவுச்சுமையை குறைக்க மரபணு சிகிச்சை (CAR-T செல் சிகிச்சை) மீதான சரக்குகள் மற்றும் சேவைகள் வரிவிகிதத்தை 12%-இல் இருந்து பூஜ்யமாகக் குறைப்பதற்கு அமைச்சர் தங்கம் தென்னரசு ஆதரவு தெரிவித்தார்
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சால்மரில் 55-ஆவது சரக்குகள் மற்றும் சேவைகள் வரிமன்றக் கூட்டம் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் தலைமையில் நடைப்பெற்றது. இதில் அனைத்து மாநிலங்களை சேர்ந்த நிதி அமைச்சர்கள் பங்கேற்றனர். தமிழ்நாட்டின் சார்பில் நிதி மற்றும் சுற்றுச்சூழல் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு பங்கேற்று தமிழ்நாடு அரசின் கருத்துக்களை வலியுறுத்தினார்
அப்போதுபுற்றுநோய் சிகிச்சைக்கான மருந்துகளின் அதிக விலையைக் கருத்தில் கொண்டு, புற்று நோயால் பாதிக்கபட்டவர்களின் மருத்துவ செலவுச்சுமையை குறைக்க மரபணு சிகிச்சை (CAR-T செல் சிகிச்சை) மீதான சரக்குகள் மற்றும் சேவைகள் வரிவிகிதத்தை 12%-இல் இருந்து பூஜ்யமாகக் குறைப்பதற்கு தங்கம் தென்னரசு ஆதரவு தெரிவித்தார்.
இதையும் படிங்க:ஆளுநரை மாற்ற கோரிக்கை விடுக்கப்படுமா? சட்டத்துறை அமைச்சர் ரகுபதி சொன்ன பதில்!
இணக்க முறையில் வரி செலுத்தும் வணிகர்கள் வணிக இடங்களின் வாடகை மீது எதிரிடை கட்டண முறையில் வரி செலுத்துவதில் இருந்து விலக்களிப்பதற்கு அமைச்சர் தங்கம் தென்னரசு ஆதரவு தெரிவித்தார். பதிவு செய்யாத நபர்களுக்கு இணைய வழி சேவைகள் வழங்குகைகளின் சரியான மாநிலத்தை குறிப்பிடுவதை தெளிவு படுத்துவதற்கான சுற்றறிக்கையை திறம்பட செயல்படுத்த மேலாண்மை தகவல் தரவு அறிக்கைகளை உருவாக்கி அனைத்து மாநிலங்களுக்கும் பகிர்ந்து கொள்ள வேண்டியதன் அவசியத்தை அமைச்சர் தங்கம் தென்னரசு வலியுறுத்தினார்.
இக்கூட்டத்தில் வணிகவரி மற்றும் பதிவுத்துறை முதன்மை செயலாளர் பிரஜேந்திர நவ்னிட்,வணிகவரி ஆணையர் டி.ஜகந்நாதன், மற்றும் வணிகவரித் துறையின் உயர் அதிகாரிகள் கலந்துகொண்டனர். மேலும், இந்த கூட்டத்தில் புதிய மின்சார வாகனங்களுக்கு 5 சதவிகித ஜிஎஸ்டி விதிப்பது என முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் ஸ்விக்கி, சொமாட்டோ போன்ற உணவு விநியோக செயலிகளின் சேவைகளுக்கு ஜிஎஸ்டி வரி விதிப்பது குறித்து இந்த கூட்டத்தில் எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. அதே போல ஆன்லைன் விளையாட்டுகளுக்கு ஜிஎஸ்டி வரி விதிப்பது குறித்தும் இந்த கூட்டத்தில் முடிவுகள் எட்டப்படவில்லை.