சென்னை: பரந்தூர் விமான நிலையத்தை சென்னை விமான நிலையத்திற்கு அடுத்தபடியாக மிகப்பெரிய விமான நிலையமாக அமைக்க மத்திய அரசு முடிவு செய்திருந்தது. அதில், காஞ்சிபுரம் மாவட்டத்தில் பரந்தூர் மற்றும் அதனை சுற்றி இருக்கக்கூடிய 20 கிராமங்களை உள்ளடக்கிய சுமார் 5000க்கும் மேற்பட்ட ஏக்கர் பரப்பளவு பகுதிகளில் உள்ள நிலங்களை விமான நிலையம் அமைப்பதற்கு நடவடிக்கை மேற்கொண்டு வரப்பட்டு இருக்கிறது.
விமான நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஏகனாபுரம் உள்ளிட்ட கிராம மக்கள் கடந்த 765 நாளாக போராட்டம் நடைப்பெற்று வருகிறது. இந்த நிலையில், விமான நிலையம் அமைப்பதற்கான தேவையான நிலங்கள் எந்தெந்த கிராமங்களில் எவ்வளவு எடுக்கப்படுகிறது என வரையறுத்து நிலமெடுப்பு அறிவிப்புகளை தமிழ்நாடு அரசு தொழில் முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறை நாளிதழில் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
கடந்த நாட்களில் கையக படுத்த அறிவிக்கப்பட்ட நிலங்களை பார்வையிடுவதற்கும், அளவீடு செய்வதற்கும் அரசு அதிகாரிகளை கிராம மக்கள் அனுமதிக்காமல் இருந்து வந்துள்ளனர். இந்நிலையில் தமிழ்நாடு அரசு நாளிதழில் நிலம் கையகப்படுத்தும் அறிவிப்பை வெளியிட்டு இருப்பதால் அப்பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்திருக்கின்றனர்.
குறிப்பாக, அந்த அறிவிப்பில் நிலங்களின் வகைகள், சர்வே எண் மற்றும் கிராம மக்களின் பெயர்கள் உள்ளிட்டவை குறிப்பிட்டு அறிவிப்பு வெளியிடப்பட்டிருக்கிறது.