மதுரை:பழனியை சேர்ந்த செந்தில் குமார் என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில், இந்து சமய அறநிலையத்துறை ஆலய நுழைவு விதி 1947 படி இந்து அல்லாத சமயத்தினர் கோயிலில் நுழைவதை தடுக்கின்றது. எனவே இந்து அல்லாதவர்கள் கோயிலுக்கு நுழைய தடை என்ற பதாகையை வைக்க கோரி இருந்தார்.இந்த வழக்கில், இந்து அல்லாதவர்கள் மற்றும் இந்து மதக் கடவுள் மீது நம்பிக்கை இல்லாதவர்கள் பழனி கோயில் கொடிமரம் தாண்டி உள்ளே அனுமதிக்க கூடாது என உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
இந்த விவகாரத்திற்கு அருள்மிகு தண்டயுதபாணி கோயில் இணை ஆணையர் மாரிமுத்து தாக்கல் செய்த பதில் மனுவில், “பழனி முருகன் கோயிலுக்கு வருபவர்கள் தமிழ்நாடு மட்டுமின்றி, நாடு முழுவதும், வெளிநாட்டில் இருந்து வருகின்றனர். பல்வேறு மதத்தினர் முருகன் மீது நம்பிக்கை கொண்டுள்ள நிலையில் வழிபடுகின்றனர். அரசியலமைப்பு சட்டத்தின் கீழ் இந்து சமய முறை மீது நம்பிக்கை கொண்டவர்கள் கோயிலுக்கு சென்று வழிபடலாம்.
பல கோயில்களில் இந்து மதத்தை அல்லாதவர்களும் அனுமதிக்கப்படுகின்றனர். மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் வெளிநாட்டினர் 50 ரூபாய் கட்டணம் செலுத்தி கொடிமரம் வரை சென்று வருகின்றனர். ஸ்ரீரங்கம் ரங்கநாதஸ்வாமி கோயிலில் முகலாய மன்னர் பரம்பரையைச் சேர்ந்த பீபீ நாச்சியார் (துலுக்க நாச்சியார்) சன்னதி இருக்கின்றது. இங்கு தின வழிபாடாக காலையில் ரொட்டி மற்றும் வெண்ணெய் படைக்கப்படுகிறது. அதை போல தஞ்சாவூர் பிரகதீஸ்வரர் கோயிலில் வெளிநாட்டினருக்கு அனுமதி வழங்கப்படுகிறது.