சென்னை :தமிழ்நாடு அரசு மருத்துவர்கள் சங்கத்தின் மாநிலத் தலைவர் செந்தில் தமிழ்நாடு முதலமைச்சருக்கு அனுப்பி உள்ள கடிதத்தில், "தாங்கள் பதவியேற்ற உடன் எங்களது வெகு நாளைய கோரிக்கைகளான சம்பளம் மற்றும் பதவி உயர்வை அரசாணை 293 மற்றும் 2 மூலம் நிறைவேற்றி தந்துள்ளீர். இதற்கு நன்றியுடன் மருத்துவர்கள் பணியிடங்களில் பற்றாக்குறை இருந்தும் அதை சாக்காகவோ, குறையாகவோ எவரிடமும் தெரிவிக்காமல் அரசு மருத்துவமனைகளில் ஏழை, எளிய மக்களுக்கு மருத்துவ பணியினை எந்தவொரு குறையில்லாமல் தங்களது நல்லாட்சியில் செய்து வந்தோம்.
இந்த நிலையில் எங்களுக்கு போதிய வசதிகள் செய்து கொடுக்காமல், காலியிடங்களை நிரப்பாமல் வேலைக்கேற்ற பணியிடங்களை உருவாக்காமல் Maternal Death Audit, Insurance Targets, Ranking என்று பல வகையில் மாநில உயர் அதிகாரிகளும், மாவட்ட அளவில் ஆட்சியர்களும் எங்களை கடந்த ஒரு வருடமாக கொடுமைப்படுத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் சென்ற வாரத்தில் சென்னையில் ஒரு மருத்துவர் கத்திக்குத்து காயத்துடன் உயிர் பிழைத்து வந்தும் கூட அரசு டாக்டர்களை வில்லன்கள் போல சமூக ஊடகங்களிலும் சித்தரித்திருந்தனர். இது எங்களை மிகவும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
நாம் எங்கு தவறு செய்தோம் என்று நாங்கள் ஆராய்ந்து, கடைசியில் கனிவாகவும், விரிவாகவும் நோயாளிகளிடமும், உறவினர்களிடமும் பேசாததே காரணம் என்றும், நோயாளிகளிடம் குரலை உயர்த்தி பேசவோ, கடினமாக பேசவோ கூடாது என்பதே முக்கியம் என்பதை அறிந்தோம். லஞ்சம் வாங்காமல் இருப்பதோ, சிறந்த வகையில் மருத்துவ சேவை செய்வதோ பத்தாது என்றும் உணர்ந்து கொண்டோம்.
எதிர்காலத்தில் அவற்றை தவிர்க்க வேண்டும் என்றும் முடிவு செய்து அரசு மருத்துவர்களிடையே இந்த எதார்த்த்தை பரப்பியும் வருகிறோம். குறிப்பாக 12 வயதுக்கு மேல் உள்ள எந்த நோயாளியையும், உறவினரையும் "நீ வா போ' என்று பேசாமல், வயது குறைவானவராக இருந்தாலும் நீங்கள் வாங்கள் என்றே பேச வேண்டும் என்பதையும் வலியுறுத்தி வருகிறோம்.
அரசு மருத்துவர்கள் 99.9 சதவீதம் லஞ்சம் பெறுவதில்லை. இருக்கும் வசதிகளை கொண்டு பணிகளை செய்து வருகின்றனர். எப்போதும் அரசுடன் இணக்கமாகவே பணியாற்றி வருகின்றனர். மருத்துவமனைகளில் உள்ள குறைகளை பொதுவெளிக்கு சொல்லாமல் பணி செய்து வருகின்றனர்.