சென்னை: தமிழ்நாடு அரசு மருத்துவர்கள் சங்கத்தின் கோரிக்கைகளை அரசு ஏற்றுக்கொண்டதால் கடந்த ஐந்து நாட்களாக நடந்து வந்த போராட்டங்களையும் நாளை முதல் நடப்பதாக இருந்த போராட்டங்கள் அனைத்தையும் விலக்கிக் கொள்வதாக சங்கம் அறிவித்துள்ளது.
இது குறித்து தமிழ்நாடு அரசு டாக்டர்கள் சங்கத்தின் மாநிலத் தலைவர் செந்தில், மாநில பொதுச் செயலாளர் சீனிவாசன் ஆகியோர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது; '' நவம்பர் 26ந் தேதி மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை கூடுதல் தலைமைச் செயலாளருடன் நடந்த பேச்சுவார்த்தையில் பெரும்பாலான கோரிக்கைகளுக்கு சுமூக முடிவுகள் எடுக்கப்பட்டன.
தமிழக அரசு, மருத்துவர்கள் மரியாதையுடனும், கௌரவத்துடனும், உயர் அதிகாரிகளால் நடத்தப்பட வேண்டும் என்பதை முழு மனதுடன் ஏற்றுக் கொண்டது. எதிர்காலத்தில் அவை நடைமுறையில் பின்பற்ற உறுதி செய்யப்படும் என்றும் முடிவு ஏற்பட்டது. கர்ப்பிணி மரணம் குறித்த தணிக்கை ஆய்வு முறைகளை மாற்றி அமைக்க வேண்டும் என்பதையும், வல்லுநர்களால் மட்டுமே ஆய்வு நடத்தப்பட வேண்டும் என்பதையும் ஏற்றுக்கொண்டனர்.
மருத்துவர்களுக்கு நடத்தப்படும் ஆய்வுக் கூட்டங்கள் அவர்கள் பணி நேரத்திற்குள் முடிக்க அனைத்து அதிகாரிகளும் கேட்டுக் கொள்ளப்படுவார் என்றும் அவசர கூட்டங்கள் தேவைப்படும் நேரத்தில் நடத்தப்படும் என்றும் அரசு தெரிவித்தது.
இதையும் படிங்க:"நாளை காலை கரையை கடக்கும் ஃபெங்கல் புயல்": 7 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்!
மருத்துவர்கள் காலியிடங்களை நிரப்ப எல்லா நடவடிக்கைகளும் எடுக்கப்படுகின்றன. சிறப்பு எம்ஆர்பி தேர்வின் மூலம் மகப்பேறு மருத்துவர்கள் மற்றும் பிற சிறப்பு மருத்துவர்கள் தேர்வு செய்ய விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் உறுதி அளிக்கப்பட்டது. ஒழுங்கு நடவடிக்கை எடுக்கும் முறை, அதை தேவையின்றி வெளியிடுவதை தடை செய்ய வேண்டும் என்ற கோரிக்கையையும் ஏற்றுக்கொண்டார்.
தமிழ்நாடு அரசு டாக்டர்கள் சங்கத்துடன் இரண்டு மாதத்திற்கு ஒரு முறை துறை செயலாளர் குறைகள் குறித்து பேச ஒப்புக்கொண்டார். அவசரம் என்றால் நேரடியாக தொடர்பு கொள்ளலாம் என்றும் தெரிவித்துள்ளனர்.
இவை அனைத்தையும் விரிவாக பேசிய பின்னர் செயற்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில், சங்கத்தின் இப்போதைய கோரிக்கைகளை ஏற்றுக் கொண்டதற்கும், அரசு டாக்டர்களின் நலனுக்காக அரசாணை 293 மற்றும் 2 வெளியிட்டு நீண்ட நாள் கோரிக்கைகளை நிறைவேற்றிய முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு 15,000 அரசு டாக்டர்கள் சார்பாக நன்றியை தெரிவித்து கொள்கிறது.
தமிழ்நாடு அரசு சங்கத்தின் கோரிக்கைகளை ஏற்றுக்கொண்ட நிலையில் கடந்த ஐந்து நாட்களாக நடந்து வந்த போராட்டங்களையும் நாளை முதல் நடப்பதாக இருந்த போராட்டங்கள் அனைத்தையும் சங்கம் விலக்கிக் கொள்கிறது. அனைத்து மருத்துவமனைகளிலும், அனைத்து வேலைகளும் எப்போதும் போல் எந்த பாதிப்பும் இன்றி நடத்தப்படும்'' என அதில் கூறப்பட்டுள்ளது.
ஈடிவி பாரத் தமிழ்நாடு வாட்ஸ் சேனல் மூலம் செய்திகளை உடனுக்குடன் அறியஇங்கே க்ளிக் செய்யவும்