சென்னை: பொது சுகாதாரத் துறை இயக்குநர் அறிக்கையானது, பொதுமக்களுக்கு மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் சுகாதாரப் பணியாளர்கள் மீது நம்பகத்தன்மை குறையும் வகையில் உள்ளதாகவும், மக்களிடையே நம்பகத் தன்மையை குறைக்க கூடிய வகையில் ஏற்படும் இத்தகைய நிகழ்வுகளால் சின்ன விஷயங்களுக்கு கூட பொதுமக்களும், நோயாளிகளின் உறவினர்களும் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களை தாக்கக்கூடிய அசம்பாவிதங்கள் ஏற்படலாம் எனவும் தமிழ்நாடு அரசு மருத்துவர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
எனவே மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் பணியாளர்கள் தங்கள் பணியாற்றும் இடத்தில் அதீத எச்சரிக்கை உணர்வுடன் பணியாற்ற வேண்டும் என இச்சங்கம் அறிவுறுத்தியுள்ளது. தமிழ்நாடு அரசு டாக்டர்கள் சங்கத்தின் (TNGDA) ஆரம்ப சுகாதார நிலையங்கள் சங்க பிரிவு கூட்டம் ஆன்லைன் வாயிலாக மாநிலத் தலைவர் செந்தில் தலைமையில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் சுகாதாரத் துறை இயக்குநர் வெளியிட்டுள்ள அறிக்கை குறித்து விவாதிக்கப்பட்டது.
அப்போது பேசிய அரசு மருத்துவர்கள் சங்க பிரதிநிதிகள், "மூன்றரை ஆண்டுகள் சிறப்பாக ஆட்சி செய்து வரும் முதலமைச்சர் ஸ்டாலின் ஆட்சியை, இது ஓப்பியடிக்கும் ஆட்சி என்று குறை சொல்வது போல் இருக்கிறது. அரசு மருத்துவ மையங்களை, மருத்துவ அலுவலர்களை பிற பணியாளர்களை குறை சொல்லுவது; மாநில அரசின் ஆட்சியை குறை சொல்வது போன்றதாகும்."
"ஓ.பி அடிக்கும் மருத்துவர்களையும், செவிலியர்களையும் கண்காணிக்க, சிசிடிவி கேமரா பொருத்தப்படும் என்று பொது சுகாதாரத்துறை இயக்குநர் தெரிவித்துள்ளார். இச்செய்திக்கு சங்கம் கடும் எதிர்ப்பை தெரிவிக்கிறது. மருத்துவர்கள், செவிலியர்கள் பணிகளை குறை கூறுவது போல கண்காணிப்பு செய்யப்படும் என்று கூறியிருப்பது அனைவரும் மனதையும் புண்படுத்துவதாக உள்ளது."
"சமீபகாலத்தில் மருத்துவர்கள் பல இடங்களில் கொடூரமாக தாக்கப்படுகின்றனர். அந்தத் தாக்குதல்களுக்கு சமூக வலைத்தளங்களில் பலர் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். இதற்கு இதுபோன்று உயர் அலுவலர்கள், மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் வாங்கி கொடுக்கும் விருதுகளை பெற்றுக் கொண்டு, பொதுவெளியில் அவர்களின் பணிகளை குறைத்து மதிப்பிடுவதே காரணம் என்று சங்கம் நம்புகிறது."
பொதுமக்களின் மனதை மருத்துவர்கள் மற்றும் அரசு மருத்துவமனைகளுக்கு எதிராக திருப்புகிறது. இதன் ஒரு துரதிஷ்டவசமான வெளிப்பாடு மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் மீது தாக்குதல் என்பது. எனவே, வருங்காலத்தில் மருத்துவர், செவிலியர் பணிகளை பொதுவெளியிலும், குறை கூறுவதை சங்கம் வன்மையாக எதிர்க்கிறது. இவ்வாறு பேசுவது மருத்துவர்கள் மற்றும் பிற ஊழியர்களுக்கு எதிரான வன்முறையையும், எதிர்மறையான கருத்துக்களை பொதுமக்களிடையே தூண்டுவதாகவே சங்கம் கருதுகிறது.
தற்போது உள்ள பாதுகாப்பற்ற நிலையில் குறிப்பாக இரவு பணி நேரத்தில், பெண் மருத்துவர் ஒரு செவிலியர் வயது முதிர்ந்த ஒரு ஆயா இவர்கள் மட்டுமே அந்த நிலையத்திற்கு குடித்து விபத்துக்குள்ளாகி முதலுதவிக்கு வரும் பல பேரைக் கொண்ட கும்பலுக்கு சிகிச்சை அளிக்கின்றனர். கொல்கத்தா, கலைஞர் மருத்துவமனை போன்ற நிகழ்வுகள் ஏற்படாமல் தடுக்க தமிழ்நாடு அரசு மருத்துவர்கள் சங்கம் பின்வரும் தீர்மானங்களை நிறைவேற்றியது.
தமிழ்நாடு அரசு மருத்துவர்கள் சங்க கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் பின்வருமாறு:
உயர் அலுவலர்கள், அரசு மருத்துவர்களை குறித்தும், அரசு மருத்துவ நிலையங்களைக் குறித்தும், பிற சுகாதாரப் பணியாளர்களைக் குறித்தும் பொதுவெளியில் குறைத்து மதிப்பிட்டு பேசுவதைத் தவிர்க்க வேண்டும்.
தற்போது, மருத்துவப் பணியாளர்கள் மீது கொடூரத் தாக்குதல்கள் அதிகரித்து வருவதால், தற்போது நிறுவப்பட்டுள்ள கண்காணிப்புக் கேமராக்களை அவசர சிகிச்சை அளிக்கப்படும் மற்றும் பாதுகாப்புக்கான இடங்களில் மாற்றி அமைக்க வேண்டும்.
ஆயிரக்கணக்கில் காலியாக இருக்கும் மருத்துவ அலுவலர் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும்.
வரும் காலங்களில் மருத்துவர்களை மதிப்பீடு செய்யும் அப்ரைசல் படிவம் சமர்ப்பிக்கப்பட வேண்டாம்.
ஆரம்ப சுகாதார நிலையங்களில் பெரும்பாலும் பெண் மருத்துவர்கள், செவிலியர்கள் பணி செய்வதால் இரவு பணிகளில் பாதுகாப்புக்கு மாலை 6 மணியிலிருந்து காலை 6 மணி வரை ஒரு பாதுகாப்பு பணியாளரை (செக்யூரிட்டியை) நியமிக்க வேண்டும் எனவும் தீர்மானத்தில் கோரிக்கைப் வைக்கப்பட்டிருந்தது.
ஈடிவி பாரத் தமிழ்நாடு வாட்ஸ்ஆப் சேனல் (ETV Bharat Tamil Nadu)