சென்னை:தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பயிர்மான கழகம், மின் தொடரமைப்பு கழகம் ஆகியவற்றின் மூலமாக தமிழகத்தில் மின்சார இணைப்பு வழங்கப்படுகிறது. வீடுகள் மற்றும் தொழிற்சாலைகளுக்கு, உற்பத்தி செய்யும் இடங்களில் இருந்து கொண்டு வரப்படும் மின்சாரம் துணை மின் நிலையங்களில் சேமித்து வைக்கப்பட்டு பகிர்ந்து அளிக்கப்படுகிறது.
இந்நிலையில், இந்த துணை மின் நிலையங்களில், பராமரிப்பு பணிகளை மேற்கொள்ளும் பொறியாளர் பணியிடங்ளின் எண்ணிக்கை குறைத்துள்ளது. மேலும், இங்கு ஹவுஸ் ஒர்க்கிங் முறையில் ஓய்வு பெற்ற பணியாளர்களை நியமனம் செய்து பராமரிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
இது குறித்து, தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பின் பொதுச் செயலாளர் ராஜேந்திரன் ஈடிவி பாரத்திற்கு அளித்த பிரத்யேக பேட்டியில் கூறியதாவது, “ தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தில், 2020 ஆம் ஆண்டு 4 துணை மின் நிலைகள், பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள தனியாருக்கு ஒப்பந்தம் அளிக்கப்பட்டது. அப்பொழுது, அனைத்து தொழிற்சங்களும் போராடி அந்த ஒப்பந்தங்களை திரும்ப பெற வைத்தோம்.
கூடுதல் பணி:இதனையடுத்து, சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று திமுக ஆட்சி பொறுப்பேற்றதற்கு பின்னர், ஒன்றிய அரசின் கொள்கை அடிப்படையில் போக்குவரத்து மற்றும் மின் துறையிலும் ஒப்பந்தம் (contract) முறையை ஊக்குவித்து வருகின்றனர். மின்சார வாரியத்தில் தற்பொழுது வேலைப்பளு அதிகரித்துள்ளது. காலி பணியிடங்கள் நிரப்பப்படவில்லை. இதனால், பணியாளர்களுக்கு கூடுதல் பணியுடன் வேலை செய்ய வேண்டிய நிலைவந்துள்ளது.
துணை மின் நிலையங்களில், பணியிலிருந்து ஓய்வு பெற்றவர்களை நியமனம் செய்து பராமரிக்கும் பணியை மேற்கொண்டு வருகின்றனர். திமுக அரசு தொழிலாளர் நலன் காக்கும் அரசாக இருக்கும் என கருதி தொடர்ந்து வலியுறுத்தினோம். ஆனால், திமுக அரசு ஆட்குறைப்பு செய்வதற்கான நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். மறைமுகமாக அவுட்சோர்சிங்(Outsourcing) முறைக்கு செல்வதற்கான நடவடிக்கையாக இருக்கிறது.
இது குறித்து மின்துறை அமைச்சர் மற்றும் மின்வாரியத்திலும் தெரிவித்துள்ளோம். தமிழகத்தில் தற்போது அடிமட்ட நிலையில் 23 ஆயிரம் களப்பணியாளர் பதவிகளும், 8 ஆயிரம் வயர் மேன் பதவிகளும் காலியாக உள்ளன. அதேபோல் துணை மின் நிலையங்களை இயக்கவும், பராமரிக்கவும் படித்த இளைஞர்களின் காலிப் பணியிடங்களும் அதிகரித்து வருகின்றனர். காலி பணியிடங்கள் நிரப்பப்படாததால் வேலைபளுவுடன் பணி செய்து வருகிறோம்.
ஒப்பந்ததாரர்கள் பணி அமர்த்தல்: திமுக ஆட்சி அமைந்த பிறகு, 80 க்கும் மேற்பட்ட துணை மின் நிலையங்கள் பராமரிப்பதற்கு தனியாருக்கு டெண்டர் விடுத்துள்ளனர். பல கோடி மதிப்புள்ள துணை மின் நிலையங்களை பாதுகாப்புடன் பராமரிக்க வேண்டும். ஏற்கனவே மின்வாரியத்தில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர்கள் பராமரிப்பு பணியில் ஈடுபடும் போது எந்தவித பாதிப்பும் ஏற்படாது. புதிதாக படித்து விட்டு வருபவர்களை ஒப்பந்ததாரர்கள் பணியில் அமர்த்தினால் விபத்துக்கள் ஏற்படுவதற்கு வாய்ப்புள்ளது.
பயிற்சி: மின் கம்பிகள் பராமரிப்பு பணியின் பொழுது, துணை மின் நிலையத்தில் உள்ளவர்கள் சரியாக மின்சாரத்தை நிறுத்தவில்லை என்றால் அங்கு பணியில் உள்ள மின் ஊழியருக்கு உயிரிழப்பு ஏற்படவோ, மின்வாரியத்தின் சொத்து சேதமடைவோ வாய்ப்புள்ளது. என்வே, புதிதாக எடுப்பவர்களுக்கு தகுந்த பயிற்சி அளித்து பணியில் நியமிக்க வேண்டும்.
துணை மின் நிலையங்களில் பராமரிப்பு பணியை, உதவி பொறியாளர் தகுதிக்கு குறையாதவர்கள் பார்க்க வேண்டும் என விதிகள் உள்ளது. அவரின் கீழ் நான்கு இளநிலை பொறியாளர்கள் பணியில் இருப்பார்கள். ஆனால், தற்பொழுது தமிழ்நாடு மின் தொடரமைப்பு கழகம் 33 kV முதல் 765 kV வரை துணை மின் நிலையங்களை பராமரிக்கிறது.
முன்னதாக, 2020 ஆம் ஆண்டு பணி மறு சீரமைப்பிற்கு போடப்பட்ட குழுவில், அனுபவம் இல்லாத ஒருவரை நியமனம் செய்து உத்தரவு பிறப்பித்தது. அதன் அடிப்படையில், துணை மின் நிலையங்களை மேற்பார்வையிட நான்கு துணை மின் நிலையங்களுக்கு, ஒரு செயற் பொறியாளர் என நிர்ணயத்துள்ளனர். மின்சார வாரியத்தின் விதிகளை மதிக்காமல் அதிகாரிகளின் பணியிடங்களை குறைத்துள்ளனர்.