சென்னை: தமிழ்நாடு எம்.ஜி.ஆர் மருத்துவப் பல்கலைக் கழகத்தின் 36வது பட்டமளிப்பு விழாவானது பல்கலைக் கழக வெள்ளி விழா கலையரங்கத்தில் வரும் சனிக்கிழமை (ஜன.27) அன்று காலை 10 மணியளவில் நடைபெற உள்ளது.
தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி தலைமையேற்று பட்டங்களை வழங்குகிறார். மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சரும், தமிழ்நாடு எம்.ஜி.ஆர் மருத்துவப் பல்கலைக்கழக இணை வேந்தருமான மா.சுப்பிரமணியன் உள்ளிட்டோர் விழாவில் பங்கேற்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
புதுச்சேரி (ஜிப்மர்) ஜவஹர்லால் பட்ட மேற்படிப்பு மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் இயக்குநர் ராகேஷ் அகர்வால் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு பட்டமளிப்பு விழா உரை நிகழ்த்துகிறார். எம்.ஜி.ஆர் பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் நாராயணசாமி வரவேற்புரையாற்ற உள்ளார்.
இந்தப் பட்டமளிப்பு விழாவினை முன்னிட்டு, சிறப்பு உயர்நிலை படிப்பு, ஆராய்ச்சி படிப்பு, மருத்துவம், பல் மருத்துவம், இந்திய மருத்துவம் மற்றும் மருத்துவம் சார்ந்த 29,685 மாணவர்களுக்கு பட்டங்கள் வழங்கி கௌரவிக்கப்படுகிறது. இவற்றில், 134 மாணவர்களுக்கு நேரடியாகவும், 29,551 மாணவர்களுக்கு கல்லூரிகள்
மூலமாகவும் பட்டங்கள் வழங்கப்படுகிறது.
இவ்விழாவில், தமிழ்நாடு ஆளுநர் 15 மாணவர்களுக்கு முனைவர் பட்டங்களும், மருத்துவம் மற்றும் மருத்துவம் சார்ந்த படிப்பில் அதிக மதிப்பெண்கள் பெற்றுள்ள 119 மாணவர்களுக்கு தங்கம், வெள்ளி பதக்கங்களும் மற்றும் சான்றிதழ்களும் வழங்கி சிறப்பிக்கிறார்.
இப்பட்டமளிப்பு விழா நிகழ்ச்சிகள் முழுவதும் தமிழ்நாடு எம்.ஜி.ஆர் மருத்துவப் பல்கலைக் கழகத்தின் இணையதளத்தின் (www.tnmgrmu.ac.in) வலைதள ஒலிபரப்பு (web-streaming) மூலமாகவும் காண ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:குற்றங்களைக் குறைப்பதற்காக 3 செயலி.. மூத்த குடிமக்களுக்கு உதவும் திட்டத்தைத் துவங்கி வைத்த டிஜிபி சங்கர் ஜிவால்!