தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

"போக்குவரத்துக்கு கூட காசு இல்லை" - தமிழக மாற்றுத்திறனாளி கிரிக்கெட் வீரர்களின் அவலநிலை! - Wheelchair Cricket

Wheelchair Cricket :தமிழ்நாட்டில் வீல் சேர் கிரிக்கெட் வீரர்களுக்கு தேவையான விளையாட்டு உபகரணங்கள், மைதானங்களை போன்றவற்றை ஏற்படுத்தி தரவேண்டும் என இந்திய அணிக்காக விளையாடி வரும் மாற்றுத்திறனாளி கிரிக்கெட் வீரர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

மாற்றுத்திறனாளி கிரிக்கெட் வீரர்கள் ஜெயின் ஆல்ட், சுரேஷ் செல்வம்
மாற்றுத்திறனாளி கிரிக்கெட் வீரர்கள் ஜெயின் ஆல்ட், சுரேஷ் செல்வம் (Credits - ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jun 18, 2024, 11:15 AM IST

சென்னை:உத்தரப்பிரதேச மாநிலம் நொய்டாவில் கடந்த 11-ஆம் தேதி முதல் 15ஆம் தேதி வரை இந்தியா - இலங்கை நாடுகளுக்கு இடையே டி20 'வீல்சேர் கிரிக்கெட்' போட்டி நடைபெற்றது. இதில் 5-க்கு பூஜ்ஜியம் என்ற கணக்கில் இந்தியன் அணி தொடரை கைப்பற்றி கோப்பையை வென்றது.

இலங்கை உடனான 20 ஓவர் கிரிக்கெட் கோப்பையை கைப்பற்றிய வீல் சேர் இந்திய அணியில் கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த ஜெயின் ஆல்ட், திருவண்ணாமலை சேர்ந்த சுரேஷ் செல்வம் ஆகியோர் இடம் பெற்றிருந்தனர்.

மாற்றுத்திறனாளி கிரிக்கெட் வீரர்கள் பேட்டி (Credits - ETV Bharat Tamil Nadu)

இதில் முதல் போட்டியில் சிறப்பாக பேட்டிங் செய்த சுரேஷ் செல்வம் ஆட்டநாயகன் விருது பெற்றுள்ளார். சிறப்பாக பந்து வீசியதற்காக ஜெயின் ஆல்ட் சிறந்த பந்துவீச்சாளருக்கான விருதைப் பெற்றுள்ளார். இந்த நிலையில் வீல் சார் கிரிக்கெட் தொடரை முடித்துக் கொண்டு டெல்லியிலிருந்து இன்று விமானம் மூலம் தமிழகத்தைச் சேர்ந்த இரண்டு வீரர்களும் சென்னை வந்தடைந்தனர்.அப்போது அவர்களை சென்னை விமான நிலையத்தில் வரவேற்க தமிழ்நாட்டில் உள்ள வீல்சேர் கிரிக்கெட் சங்கம், அரசு சார்பில் யாரும் வரவில்லை.

சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய சுரேஷ் செல்வம் கூறுகையில், "தமிழ்நாட்டிலிருந்து நாங்கள் இருவரும் இந்தியா இலங்கை இடையே நடைபெற்ற வீல்சேர் கிரிக்கெட்தொடரில் இந்திய அணிக்காக தேர்வாகி விளையாடி உள்ளோம். நான் சிறப்பாக பேட்டிங் செய்ததால் முதல் போட்டியில் ஆட்டநாயகன் விருதை வென்றேன்.

வெற்றி பெற்ற இந்திய அணியை டெல்லி முதல்வர், ஐபிஎல் வீரர் ராகுல் தெவேட்டியா உள்ளிட்டோர் பாராட்டினர். நாங்கள் திறமையாகவும் உறுதியாகவும் தொடர்ந்து விளையாடி வருகிறோம். நாங்கள் இந்திய அணியில் விளையாடுவதற்கு தங்கள் சொந்த செலவில் பயணம் செய்கிறோம். எங்களுக்கான சரியான வசதிகள் எதுவும் இதுவரை கிடைக்கவில்லை.

வீல்சேர் கிரிக்கெட் வீரர்களுக்கான அனைத்து வசதிகளையும் தமிழக அரசு செய்து கொடுத்தால் நாங்கள் இன்னும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவோம். நாங்கள் தமிழ்நாடு அளவில் விளையாடும் பொழுது அரசிடம் பல்வேறு கோரிக்கை வைத்துள்ளோம். மேலும் ஆசிய விளையாட்டுகளில் வீல் சார் கிரிக்கெட் போட்டியும் கொண்டு வந்தால் நன்றாக இருக்கும்" என்றார்.

இதனைத் தொடர்ந்து ஜெயின் ஆல்ட் கூறுகையில், "நான் கடந்த 2017 ஆம் ஆண்டு முதல் இந்தியாவில் வீல்சேர் கிரிக்கெட் அணியில் இடம் பெற்று விளையாடி வருகிறேன். இந்தியா -பங்களாதேஷ், இந்தியா- பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போட்டிகளில் பங்கேற்று விளையாடி உள்ளேன். தற்பொழுது இலங்கை அணி உடனான வீல்சேர் கிரிக்கெட் போட்டியில் வெற்றி பெற்றது மகிழ்ச்சி அளிக்கிறது.

தற்போது இரண்டு பேர் இந்திய அணியில் இடம் பிடித்து விளையாடி வருகிறோம். இந்திய அணியில் பேட்டிங் மற்றும் பந்துவீச்சில் திறமையாக செயல்பட்டு உள்ளோம். தமிழ்நாட்டில் வீல்சார் கிரிக்கெட் வீரர்களுக்கு போதிய அடிப்படை வசதிகள் எதுவும் இல்லை. விளையாடுவதற்குச் சரியான உபகரணங்கள், மைதானங்கள் போன்ற எதுவும் இல்லை. இவையனைத்தும் தமிழ்நாடு அரசு எங்களுக்கு செய்து கொடுத்தால் நன்றாக இருக்கும். விரைவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்துப் பேசுவதற்கு நடவடிக்கை எடுத்து வருகிறோம்" என தெரிவித்தனர்.

இதையும் படிங்க:தூய்மை பணியாளர் மகள் டூ நகராட்சி ஆணையர்.. குடும்பத்தின் அடையாளத்தை மாற்ற போராடிய திருவாரூர் பெண்!

ABOUT THE AUTHOR

...view details