தஞ்சாவூர்:கும்பகோணம் அருகே தத்துவாஞ்சேரியில் முன்னாள் எம்.எல்.ஏ.ராமாமிர்த தொண்டைமான் சிலையை இன்று (ஜனவரி 23) முன்னாள் மத்திய அமைச்சர் மணிசங்கர் அய்யர் முன்னிலையில் தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி திறந்து வைத்தார்.
இந்நிகழ்வில் எம்பி-க்கள், எம்எல்ஏ-க்கள் மற்றும் திமுக காங்கிரஸ் கூட்டணிக் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் பொது மக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர். இதனையடுத்து, கே.எஸ்.அழகிரி பேசியதாவது "அயோத்தியில் 3,200 ராமர் கோயில்கள் உள்ளது. இதில் மோடி நேற்று (ஜனவரி 22) திறந்து வைத்தது 3201 என்ற ஒற்றை பெருமை கொண்டதே தவிர வேறு எந்த மாற்றத்தையும் இதுதராது.
மனைவியைக் கூட கவனிக்காத ஒருவர். ராமர் சிலையைப் பிரதிஷ்டை செய்வது தவறு. வழக்கமாக ராமர் கோயில் என்றால் அது பட்டாபிஷேக கோலத்திலோ அல்லது சீதா தேவியுடன் இணைந்த ராமர் கோயிலாகத் தான் இருக்கும். ஆனால், அயோத்தியில் அமைத்துள்ள குழந்தை இராமர் சிலை மோடிக்காக அமைக்கப்பட்டது. சங்கராச்சாரியார் சிலர் கோயில் திருப்பணி முழுமை பெறாமல் கோயிலைத் திறக்கக் கூடாது. கும்பாபிஷேகத்தை அரசியல் ஆக்கக் கூடாது என்று கூறியும் கோயிலை வேண்டும் என்று திறந்துள்ளனர்.
அயோத்தி ராமர் கோயிலுக்கு யாரும் எதிராக இல்லை. அமைதியாகவும் மகிழ்ச்சியாக நடைபெற வேண்டிய கும்பாபிஷேகம் பதற்றத்துடன் நடந்து முடிந்துள்ளது. ராமர் கோயில் வேண்டாம் என்று யாரும் சொல்லவில்லை. நீங்கள் தான் மசூதியை இடித்து விட்டு அந்த இடத்தில் ராமருக்குக் கோயில் கட்டுவோம் என்று கூறினீர்கள்.