செல்வப்பெருந்தகை பேட்டி (Video Credits - ETV Bharat Tamil Nadu) வேலூர்:யாரும் கை மற்றும் கால்களை கட்டிக்கொண்டு தற்கொலை செய்ய மாட்டார்கள். தற்பொழுது கிடைத்துள்ள தகவல்களைப் பார்க்கும்போது நெல்லை ஜெயக்குமார் மரணம் மரணம் முழுக்க முழுக்க கொலை தான் என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் மாவட்ட நிர்வாகிகள் மற்றும் செயல் வீரர்கள் கலந்தாய்வுக் கூட்டம் வேலூரில் நேற்று நடைபெற்றது. இதில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை பங்கேற்றுப் பேசினார். பின்னர் செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்த அவர், “காங்கிரஸ் கட்சி தொண்டர்கள் 57 ஆண்டுக் காலம் ஆட்சி இழந்து பணியாற்றிக் கொண்டிருக்கிறார்கள்.
அதனால் தமிழகத்தில் காங்கிரஸ் கட்சியைப் பலப்படுத்தும் வகையில், காமராஜர் ஆட்சி அமைப்பதற்கு மக்களோடு மக்களாக காங்கிரஸ் கட்சியின் கொள்கை, கோட்பாடு, காங்கிரஸ் கட்சி என்னென்ன சட்டங்கள் திட்டங்கள் கொண்டு வந்துள்ளது என்பதை மக்களிடம் சென்று சேர்க்க உள்ளோம்” என்றார்.
தற்கொலை இல்லை: அதனைத் தொடர்ந்து நெல்லை ஜெயக்குமார் மர்ம மரணம் குறித்து பேசிய அவர், “திருநெல்வேலி மாவட்ட காங்கிரஸ் கட்சித் தலைவர் ஜெயக்குமார் தற்கொலையா? என்பதை முடிவு செய்ய முடியவில்லை என வடக்கு மண்டல ஐஜி கண்ணன் தெரிவித்துள்ளார். தற்பொழுது கிடைத்துள்ள தகவல்களைப் பார்க்கும்போது அது முழுக்க முழுக்க கொலை தான். அவர் இறந்ததைப் பார்க்கும் பொழுது அதை தற்கொலை என்று சொல்ல முடியாது.
அறிவியல் பூர்வமான ஆதாரம் இல்லை:யாரும் கை மற்றும் கால்களை கட்டிக்கொண்டு தற்கொலை செய்ய மாட்டார்கள். ஜெயக்குமாரின் கொலைக்கு அறிவியல் பூர்வமான ஆதாரம் இல்லை என்பதால் வடக்கு மண்டல ஐஜி அதை கொலையா? தற்கொலையா? என கேள்வி எழுப்பி உள்ளார். மேலும், இந்த கொலை வழக்கு தொடர்பாக இன்னும் உடற்கூறு ஆய்வின் முடிவுகள் முழுவதுமாக கிடைக்கவில்லை என்றும் கூறியிருக்கிறார்.
அவருடைய விசாரணையில் அவர் அப்படி கூறி இருக்கலாம். ஆனால் பொதுமக்கள் பார்வையில் அது கொலை தான். தேவைப்பட்டால் தமிழக சட்டப்பேரவை சபாநாயகர் அப்பாவு இடம் விசாரணை நடத்தப்படும் என்று கூறியுள்ளனர். தற்பொழுது புலன் விசாரணை நடந்து கொண்டிருப்பதால் அதில் நாம் தலையிடக் கூடாது. அப்படி ஏதாவது தகவல் தெரிவித்தால் அது விசாரணைக்குக் குந்தகம் ஏற்படும். எங்களைப் பொறுத்தவரை ஜெயக்குமார் மரணம் தற்கொலை இல்லை.
முழு ஆய்விற்கு பின் தெரிய வரும்: காவல் துறை இதுவரை 10 படைகள் அமைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். புலன் விசாரணை நடைபெறும் பொழுது அதில் நாம் தலையிடக்கூடாது. தமிழக காவல்துறை சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது. இன்றுடன் ஒன்பது நாட்கள் ஆகிவிட்டது. முழுமையான உடற்கூறு ஆய்வு வந்த பிறகு காவல்துறையினர் தெரிவிப்பார்கள்” என்று கூறினார்.
இதையும் படிங்க:பட்டாசு ஆலை வெடிவிபத்து: "உரிமையாளர்கள் மீது குண்டர் சட்டத்தில் நடடிவக்கை எடுக்க வேண்டும்" - துரை வைகோ வலியுறுத்தல்! - Sivakasi Firecracker Explosion