சென்னை:சென்னை, கதீட்ரல் சாலையில் ரூ.46 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ள "கலைஞர் நூற்றாண்டு பூங்காவை" தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார். இந்நிகழ்வின் போது அமைச்சர்கள், சென்னை மாநகராட்சி மேயர், நாடளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சென்னை, கதீட்ரல் சாலையில் தோட்டக்கலைத் துறையின் 6.09 ஏக்கர் நிலத்தில், 46 கோடி ரூபாய் செலவில் தோட்டக்கலை அருங்காட்சியகம் உள்ளிட்ட பல்வேறு பொழுதுபோக்கு அம்சங்களுடன் நவீன முறையில் அமைக்கப்பட்டுள்ள உலகத்தரத்திலான கலைஞர் நூற்றாண்டு பூங்காவை பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார்.
பூங்காவின் உள்ளே அமைக்கப்பட்டுள்ள இசை நீரூற்று (Credits- udhayanidhi stalin x page) பல்வேறு பூங்காங்கள் திறப்பு:தமிழ்நாட்டின் இயற்கை சூழலை பாதுகாத்திடவும், வனப்பரப்பை அதிகப்படுத்தும் நோக்கிலும், 2 கோடியே 80 லட்சம் மரக்கன்றுகளை நட்டு, பசுமை தமிழ்நாடு இயக்கத்தை தொடங்கி வைத்தது, பள்ளிக்கரணையில் 2.5 ஹெக்டேர் நிலப்பரப்பில் 20 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட சதுப்புநில சூழலியல் பூங்கா, சென்னை செனாய் நகரில் மெட்ரோ இரயில் கட்டுமானத்திற்குப் பின்னர் 18 கோடி ரூபாய் செலவில் மறுசீரமைக்கப்பட்ட திரு.வி.க. பூங்கா, சென்னை கிண்டியில் 30 கோடி ரூபாய் செலவில் புனரமைக்கப்பட்ட கிண்டி சிறுவர் இயற்கை பூங்கா, திருவண்ணாமலை, ஆதி அண்ணாமலை மலையின் அடிவாரத்தில் கலைஞர் நூற்றாண்டு தோட்டக்கலை பூங்கா ஆகிய பூங்காக்கள் திறந்து வைக்கப்பட்டுள்ளது.
மேலும் கோயம்புத்தூர், காந்திபுரம் மத்திய சிறைச்சாலை வளாகத்தில் 165 ஏக்கர் பரப்பளவிலான செம்மொழிப் பூங்கா, சென்னை –புழல், ரெட்டேரி மற்றும் கொளத்தூர் ஏரிக்கரைகளில் புதிய பூங்காக்கள் அமைத்து ஏரிக்கரைகளை மேம்படுத்தும் பணிகள், ஏற்காடு மற்றும் மாதவரம் பூங்காக்களை தலா ரூ.5 கோடி மதிப்பீட்டில் மேம்படுத்தும் பணிகளுக்கு அடிக்கல் நாட்டப்பட்டு, அங்கு பணிகள் துரிதமாக நடைபெற்று வருகின்றன.
இவைமட்டுமின்றி பெருநகர சென்னை மாநகராட்சி, நகராட்சி நிர்வாகத் துறை, சுற்றுச்சூழல் துறை, தோட்டக்கலை துறைகளின் வாயிலாகவும் புதிய பூங்காங்களை உருவாக்குதல், பழைய பூங்காங்களை புனரமைத்தல் போன்ற பல்வேறு முனைப்பான நடவடிக்கைகளை தமிழ்நாடு அரசு மேற்கொண்டு வருகிறது.
கலைஞர் பூங்கா (Credits- mk stalin x page) இதையும் படிங்க:மதுரை மீனாட்சி அம்மன் பக்தர்களின் நீண்ட நாள் கோரிக்கை நிறைவேற்றம்!
கலைஞர் நூற்றாண்டு பூங்காவின் சிறப்பம்சங்கள்:இயற்கை எழில்மிகு சூழலுடன் கூடிய இப்பூங்காவின் நுழைவாயில் அருகில் உயர்தர தோட்டக்கலை அருங்காட்சியகம், 500 மீட்டர் நீளமுடைய ஜிப்லைன், பார்வையாளர்களை படம்பிடிக்கும் கலைஞர்களின் கலைக்கூடம், தொடர் கொடி வளைவுப்பாதை, 120 அடி நீளமுடைய பனிமூட்டப் பாதை, 2600 சதுர அடியில் அமைக்கப்பட்டுள்ள ஆர்க்கிட் குடில், அரிய வகை மற்றும் கண்கவர் பூச்செடிகளால் காட்சிப்படுத்த 16 மீட்டர் உயரமுடைய 10,000 சதுர அடிப் பரப்பில் அமைக்கப்பட்டுள்ள கண்ணாடி மாளிகை, அயல்நாட்டு பறவைகளை கொண்ட பறவையகம், 23 அலங்கார வளைவு பசுமை குகை, சிற்றுண்டியகம், சூரியகாந்தி கூழாங்கல் பாதை, மர வீடு, அருவி, இசை நீரூற்று, குழந்தைகள் விளையாடும் இடம், பசுமை நிழற்கூடாரம் பாரம்பரிய காய்கறித்தோட்டம் ஆகிய சிறப்பு அம்சங்களுடன் அமைக்கப்பட்டுள்ளது. இவற்றுடன் இப்பூங்காவில் உள்ள சுவர்களில் தீட்டப்பட்டுள்ள சுவரோவியங்கள் பூங்காவை மேலும் அழகுபடுத்துகின்றன.
நுழைவுக்கட்டணம் எவ்வளவு?இப்பூங்காவினை பார்வையிட நுழைவுக்கட்டணம் பெரியவர்களுக்கு
ரூ.100/-, சிறியவர்களுக்கு ரூ.50/- என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதர சிறப்பு அம்சங்களை பார்வையிட தனியே கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
ஜிப்லைனில் ஏறி சாகச பயணம் மேற்கொள்ள பெரியவர்களுக்கு ரூ.250/- சிறியவர்களுக்கு ரூ.200/-, என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
பறவையகத்தில் பல்வேறு வெளிநாட்டு பறவைகளை பார்வையிட மற்றும் உணவளித்து மகிழ்ந்திட பெரியவர்களுக்கு ரூ.150/- சிறியவர்களுக்கு ரூ.75/- மற்றும் மாலை நேரத்தில் இசை நீருற்றின் கண்கவர் நடனத்தை காண பெரியவர்களுக்கு ரூ.50/- சிறியவர்களுக்கு ரூ.50/-, கண்ணாடி மாளிகையில் அரிய வகை செடிகளை பார்வையிட பெரியவர்களுக்கு ரூ.50/- சிறியவர்களுக்கு ரூ.40/- என கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இது மட்டும் அல்லாது குழந்தைகள் பங்குபெறும் ஒரு சவாரி விளையாட்டுக்கு ரூ.50/- எனவும், புகைப்பட கருவிகளுக்கு (Camera) ரூ.100/- எனவும், ஒளிப்பதிவு கருவிகளுக்கு (Video Camera) ரூ.5000/- எனவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்நுழைவுக்கட்டணங்கள் மூன்று மணி நேரத்திற்கு மட்டுமே செல்லதக்கது என்பது குறிப்பிடதக்கது.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணையஇங்கே க்ளிக் செய்யவும்