தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மழை குறித்த வதந்திகளை நம்ப வேண்டாம்; பொதுமக்களுக்கு முதல்வர் அறிவுறுத்தல்..!

கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில், தமிழக முதல்வர் ஸ்டாலின் பொதுமக்களுக்கு பல்வேறு அறிவுறுத்தல்களை கூறியுள்ளார்.

மழை குறித்த கோப்புப்படம்
மழை குறித்த கோப்புப்படம் (credit - ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 14, 2024, 3:48 PM IST

சென்னை: கனமழை எச்சரிக்கையை தொடர்ந்து தமிழகத்தில் நாளை (அக். 15) சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை வழங்க முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

மேலும், நாளை முதல் 18 ஆம் தேதி வரை தனியார் தகவல் தொழில்நுட்ப நிறுவன ஊழியர்கள் வீட்டில் இருந்தே பணியாற்ற வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளார். மேலும், மேற்கண்ட மாவட்டங்களில் அக்.15 முதல் 17 வரை கனமழை பெய்யும் என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்தள்ளதால், அதற்கான முன்னேற்பாடுகளை குறித்து அதிகாரிகளுடன் இன்று ஆய்வு கூட்டம் நடத்திய முதல்வர், பொதுமக்களுக்கும் முக்கிய அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளார்.

  • அதன்படி, விவசாயிகள், மீனவர்கள், நான்கு சக்கர மற்றும் இரு சக்கர வாகன உரிமையாளர்கள், விடுதிகளில் தங்கி இருப்பவர்கள், பயணங்களை திட்டமிட்டுள்ளவர்கள், அடுக்குமாடிக் குடியிருப்புகளில் வசிப்பவர்கள், தொழிற்பேட்டைகள், வணிக நிறுவனங்கள், தனியார் நிறுவனங்கள், நடைபாதை வியாபாரிகள், கட்டுமானப் பணியை மேற்கொள்பவர்கள் கனமழைக்கான திட்டமிடுதலையும், முன்னேற்பாடுகளையும் செய்து கொள்ள வேண்டும்.
  • தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் மாநகராட்சி மற்றும் மாவட்ட நிர்வாகத்தின் அறிவுரையின்படி முன்கூட்டியே நிவாரண முகாம்களுக்கு செல்ல வேண்டும்.
  • முக்கியப் பொருட்கள் மற்றும் ஆவணங்களை நீர் புகா வண்ணம் பாதுகாப்பாக வைக்க வேண்டும். கனமழை எச்சரிக்கையை முன்னிட்டு பொதுமக்கள் கடற்கரை, சுற்றுலா தலங்கள், வழிபாட்டு தலங்கள், நீர்நிலைகள் ஆகிய பகுதிகளில் கூடவேண்டாம்.
  • அறுந்து கிடக்கும் மின் கம்பிகளிலிருந்து விலகி இருக்க வேண்டும். கர்ப்பிணிப் பெண்கள், நோயாளிகள், முதியவர்கள் ஆகியோருக்கு தேவையான முன்னேற்பாடுகளைச் செய்து கொள்ள வேண்டும்.
  • பொதுமக்கள் சமூக வலைதளங்களில் பரவும் வதந்திகளை நம்ப வேண்டாம். அலுவலர்கள் அளிக்கும் முறையான முன்னெச்சரிக்கைகளின்படி நடந்து கொள்ள வேண்டும் என்று முதலமைச்சர் ஸ்டாலின் கேட்டுக்கொண்டுள்ளார்.

ஈடிவி பாரத் தமிழ்நாடு வாட்ஸ் சேனல் மூலம் செய்திகளை உடனுக்குடன் அறியஇங்கே க்ளிக் செய்யவும்

ABOUT THE AUTHOR

...view details