சென்னை: தமிழ்நாடு அரசின் அமைச்சரவைக் கூட்டம் இன்று (ஜன.23) காலை கூடியது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்று வரும் இந்தக் கூட்டத்தில், இந்த ஆண்டுக்கான சட்டப்பேரவை கூட்டத்தொடர் நடத்துவது தொடர்பாக முடிவெடுக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
அது மட்டுமல்லாமல், தற்போது வரை ஆளுநர் - தமிழ்நாடு அரசு மோதல் உள்ள நிலையில், ஆளுநரை கூட்டத் தொடருக்கு அழைப்பது தொடர்பாகவும் இந்த கூட்டத்தில் முடிவெடுக்கலாம் என தெரிவிக்கப்படுகிறது. ஒருவேளை, அவ்வாறு ஆளுநரை அழைத்தால், ஆளுநரின் உரையில் இடம்பெற வேண்டிய முக்கிய அம்சங்கள் குறித்தும் விவாதிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஏனென்றால், முந்தைய ஆளுநர் ஆர்.என்.ரவியின் உரையின்போது ஏற்பட்ட பரபரப்பால், ஆளுநர் கூட்டத்தொடர் நடைபெறும் போதே வெளியேறிச் சென்றது குறிப்பிடத்தக்கது. மேலும், தொழில் முதலீடுகளை தமிழ்நாட்டிற்கு கொண்டு வருவதற்காக ஸ்பெயின், ஆஸ்திரேலியா உள்ளிட்ட வெளிநாடுகளுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் செல்ல உள்ள நிலையில், புதிய தொழில் முதலீடுகளுக்கான ஒப்புதல் அளிப்பதற்கும், தொழில் முதலீட்டாளர்கள் மாநாட்டில் பெறப்பட்ட முதலீடுகள் குறித்தும் விவாதிக்கப்படலாம் எனவும் கூறப்படுகிறது.
அது மட்டுமல்லாமல், நாடாளுமன்றத் தேர்தல் வர உள்ள நிலையில், பட்ஜெட் தாக்கல் செய்வது குறித்தும், பட்ஜெட்டில் இடம் பெற வேண்டிய புதிய திட்டங்கள் குறித்தும் முடிவெடுக்கப்படும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க:பற்கள் பிடுங்கப்பட்ட விவகாரம்; பல்வீர் சிங் ஐபிஎஸ்-ன் சஸ்பெண்ட் ரத்து! - பின்னணி என்ன?