கோயம்புத்தூர்: நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், பாஜக சார்பில் மாவட்டம், வேட்பாளர் தேர்வு குறித்து கருத்துக் கேட்புக் கூட்டம் மாவட்டந்தோறும் நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக, கோவை ராம் நகர் பகுதியில் உள்ள தனியார் மண்டபத்தில் கருத்துக் கேட்புக் கூட்டம் நடைபெற்றது.
பாஜக மாநிலச் செயலாளர் எஸ்.ஜி.சூர்யா தலைமையில் நடைபெற்ற இந்த கருத்துக் கேட்புக் கூட்டத்தில், கோவை மாவட்டத்தைச் சேர்ந்த பாஜக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டு, தங்களது கருத்துகளை வழங்கினர். இதனையடுத்து செய்தியாளர்களைச் சந்தித்த எஸ்.ஜி.சூர்யா பேசுகையில், “வரவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் அதிகமான தொகுதிகளில் போட்டியிட உள்ளதால் தொண்டர்கள் உற்சாகமாக உள்ளனர்.
அனைவரையும் கலந்தாலோசித்து, வேட்பாளர் குறித்து முடிவு செய்யலாம் என தலைமை முடிவு செய்துள்ளது. அதன்படி, தமிழகம் முழுவதும் அந்தந்த மாவட்டங்களில் வேட்பாளர் தேர்வு குறித்து கருத்துக் கேட்புக் கூட்டம் நடைபெறுகிறது. இந்த கருத்துக்களைச் சேகரித்து தலைமையிடம் ஒப்படைக்க வேண்டும்.
பாஜகவில் பல்வேறு கட்சிகள் இணைந்துள்ளனர். தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை ஒருபுறமும், கருத்துக் கேட்புக் கூட்டம் ஒருபுறம் நடைபெறுகிறது” என்றார். இதனையடுத்து எஸ்.பி.வேலுமணியின் விமர்சனத்திற்கு பதிலளித்த அவர், “செல்லாத ஓட்டாக இருந்தவர்கள்தான் 2014ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் மூன்றாவது அணி அமைத்து, 20 சதவிகித வாக்குகளைப் பெற்றோம்.