தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஆளுநர் உரையில் உள்ளது மட்டுமே அவைக் குறிப்பில் இடம்பெறும் - சிறப்புத் தீர்மானம் - TN ASSEMBLY SPECIAL RESOLUTION

தமிழ்நாடு சட்டப்பேரவையில் ஆளுநர் உரையில் அச்சிடப்பட்டவை மட்டுமே அவை குறிப்பில் இடம்பெற வேண்டும் என்ற தீர்மானம் முன்மொழியப்பட்டு, ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.

சபாநாயகர் அப்பாவு, தமிழ்நாடு தலைமைச் செயலகம்
சபாநாயகர் அப்பாவு, தமிழ்நாடு தலைமைச் செயலகம் (ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 6, 2025, 12:36 PM IST

சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் இன்று ஆளுநர் ஆர்.என். ரவி உரையுடன் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவர் உரை நிகழ்த்தாமல், பேரவையை விட்டு வெளியேறினார். இதற்கு, "தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று மீண்டும் பாரதத்தின் அரசியலமைப்பு மற்றும் தேசிய கீதம் அவமதிக்கப்பட்டன," என ஆளுநர் மாளிகை விளக்கம் அளித்துள்ளது.

இதனையடுத்து, ஆளுநர் உரையின் தமிழாக்கத்தை சபாநாயகர் அப்பாவு பேரவையில் வாசித்தார். தொடர்ந்து, ஆளுநர் உரையில் உள்ளது மட்டும் அவை குறிப்பில் ஏற்ற வேண்டும் என தீர்மானம் கொண்டுவரப்பட்டு நிறைவேற்றப்பட்டது.

சிறப்பு தீர்மானம் கொண்டு வந்து பேசிய அவை முன்னவர் துரைமுருகன், அரசியலமைப்புச் சட்டம் 176-ஆவது பிரிவின் கீழ் ஆண்டின் தொடக்கத்தில் ஆளுநர் உரை நிகழ்த்துவார். முன்னாள் முதலமைச்சர் கருணாநிதிக்கு ஆளுநர் பதவி குறித்த மாறுபட்ட கருத்துகள் இருந்தன.

ஆனால், ஆளுநர் பதவி உள்ளவரை அப்பதவியில் இருப்பவருக்கு உரிய மரியாதை கொடுக்க வேண்டும் என்ற கருத்து கொண்டவர். பேரவைக் கூட்டத்தொடரை முடித்து வைக்காமல், ஆளுநர் உரையைத் தவிர்த்து, மற்ற சில மாநிலங்களில் முடிவெடுப்பது போன்று, நிதிநிலை அறிக்கையை சமர்ப்பிக்கலாம்.

ஆனால், முதலமைச்சர் வரம்பு மீறக்கூடாது எனும் பண்போடு போரவையைக் கூட்ட யோசனை வழங்கினார். இந்நிலையில், ஆளுநர் முந்தைய ஆண்டுகளில் செய்ததைப் போலவே திரும்ப செய்திருக்கிறார். அதாவது, ஆளுநரை உரையை முழுமையாகப் படிக்காமல் சென்றிருக்கிறார். ஆளுநரின் உண்மையான நோக்கம் என்ன என்பது கேள்விக் குறியாகியுள்ளது.

கடந்த ஆண்டிலும் தமிழ்த்தாய் வாழ்த்து குறித்து ஆளுநருக்கு பதில் அனுப்பபட்டிருந்தது. சட்டப்பேரவை கண்ணியத்தை காக்கும் வகையில் பேரவை விதி 17-ஐ தளர்த்தி தீர்மானத்தை முன்மொழிய அனுமதிக்க வேண்டும்.

தொடக்கத்தில் தமிழ்த்தாய் வாழ்த்தும், இறுதியில் தேசிய கீதமும் பாடப்படும். பேரவையின் மரபை காக்க அச்சிடப்பட்ட ஆளுநர் உரையில் இடம்பெற்ற பதிவுகளே அவைக் குறிப்பில் இடம் பெற வேண்டும், என்ற தீர்மானம் முன்மொழியப்பட்டது.

இதனைத் தொடர்ந்து முன்மொழியப்பட்ட தீர்மானம் பேரவை முடிவுக்கு விடப்பட்டு, மறுப்போர் இல்லை என்பதால் தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.

தொடர்ந்து பேசிய சபாநாயகர், ஆளுநர் உரையில் அச்சிடப்பட்ட பகுதிகள் மட்டுமே அவைக் குறிப்பில் இடம்பெறும். வேறு எவையும் அவைக்குறிப்பில் இடம் பெறாது என தெரிவித்தார். ஆளுநர் உரையின் நிறைவாக தேசிய கீதம் பாடப்பட்டது.

ABOUT THE AUTHOR

...view details