கோயம்புத்தூர்:இந்தியா போன்று மக்கள் தொகை அதிகமாக உள்ள நாடுகளில் விவசாயத்திற்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. மேலும், விவசாயத்தை ஊக்குவிக்க அரசால் பல்வேறு வரிச் சலுகைகளும் வழங்கப்பட்டு வருகின்றன.
அண்மையில் தாக்கல் செய்யப்பட்ட மத்திய நிதி நிலை அறிக்கையில் விவசாயத் துறைகளில் டிஜிட்டல் புரட்சி செய்ய அனைத்து கட்டமைப்புகளும் தயாராக உள்ளதாகவும், 32 தோட்டக் கலைகளில் 109 வகையான அதிக மகசூல் தரும் பயிர்கள் அறிமுகம் செய்யப்பட இருப்பதாகவும் அறிவித்திருந்தனர். மேலும், இதற்கென வேளாண்மைத் துறைக்கு ரூ.1.52 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்தார்.
இது ஒருபுறம் இருக்க, விவசாயிகளுக்கு இயற்கை பேரிடர், புழுக்களின் தாக்கம் போன்றவற்றால் எதிர்பாராத இழப்புகள் ஏற்படும் போது கடுமையான சவால்களை எதிர்கொள்ள வேண்டியுள்ளது. அந்த வகையில், இமாச்சலப் பிரதேசத்தில் பரவி உள்ள ராணுவ புழு எனப்படும் மக்காச்சோள படைப்புழுவால் அங்குள்ள விவசாயிகள் கடுமையான இழப்புகளைச் சந்தித்து வருகின்றனர். இந்த படைப்புழுவால் மக்காச்சோள விவசாயம் முழுவதுமாக பாதிக்கப்பட்டு வருவதால் செய்வதறியாது விவசாயிகள் திணறி வருகின்றனர்.
இந்நிலையில் கோவையில் உள்ளா தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழக பயிர் பாதுகாப்பு துறை இயக்குநர் சாந்தி ஈடிவி பாரத் வாயிலாக விவசாயிகளுக்கு பல்வேறு ஆலோசனைகளை வழங்கியுள்ளார்.
ஆரம்பத்திலேயே கண்டறிதல்:தானியங்களின் ராணி என்று கருதப்படும் மக்காச்சோளம் உலகெங்கிலும் பயிரிடப்பட்டு வருகிறது. அதில் இந்தியாவில் 90 லட்சம் ஏக்கர் பரப்பளவில் உற்பத்தி திறனுடன் பயிரிடப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டில் 3.2 லட்சம் பரப்பளவில் 25.9 லட்சம் டன் மக்காச்சோளம் உற்பத்தி செய்யப்படுகிறது. இதில் அதிகமான மக்காச்சோளம் பூச்சிகளால் பாதிக்கப்பட்டு வந்தாலும், கடந்த 2018ஆம் ஆண்டு முதல் மக்காச்சோள படைப்புழு பெரும் சேதத்தை ஏற்படுத்தி வருவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், இந்த மக்காச்சோள படைப்புழு உலகெங்கிலும் மக்காச்சோளம் மட்டுமின்றி 180 வகையான பயிர்களை தாக்கி சேதத்தை உண்டாக்குவதும் கண்டறியப்பட்டுள்ளது. ஆனால், தமிழ்நாட்டைப் பொறுத்தவரை சோளம், கேழ்வரகு, குதிரைவாலி, கம்பு உள்ளிட்ட சில பயிர்களே குறைந்த அளவில் படைப்புழுவின் தாக்குதலுக்கு உள்ளாகி வருகிறது. இந்த மக்காச்சோள படைப்புழுவை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்தால் சேதத்தை தவிர்க்க முடியும்.
கடந்த இரண்டு ஆண்டுகளாக தமிழகத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின்படி பார்த்தால், மக்காச்சோளத்தை தவிர வேறு பயிர்களிலும் படை புழுக்கள் பெரிய அளவில் பாதிப்பினை ஏற்படுத்தவில்லை என கண்டறிந்துள்ளனர். மேலும், இந்த ஆய்வில் இந்த புழுக்கள் 10 முதல் 45 சதவீதம் வரை மகசூல் இழப்பை ஏற்படுத்தி உள்ளது. தோராயமாக ஏக்கருக்கு 2,000 முதல் 2,500 கிலோ வரை மகசூல் குறைவதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.