G.K.Vasan election campaign கரூர்: தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் கரூர் நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் செந்தில்நாதனுக்கு, கிருஷ்ணராயபுரம் சட்டமன்றத் தொகுதி புலியூர் பகுதியிலும், அரவக்குறிச்சி சட்டமன்றத் தொகுதி தென்னிலை பகுதியிலும், தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் இன்று(ஏப்.6) வாக்கு சேகரித்தார்.
இந்த பிரச்சார கூட்டத்தில் பேசிய ஜி.கே.வாசன், "வாக்காளர்களாகிய நீங்கள் உங்கள் தொகுதியில் நல்லவர்களுக்கு வாக்களிக்க வேண்டும். உங்கள் வாக்கு வீணாகக் கூடாது. உங்களுடைய வாக்கு உண்மையான வாக்காக இருக்க வேண்டும். பிரயோஜனமான வாக்காக இருக்க வேண்டும். அப்படிப்பட்ட வாக்கு அடிப்படையில் தான் நீங்கள் முன்னேற முடியும். உங்கள் குடும்பம் முன்னேறும் உங்களுடைய வாழ்க்கைத் தரம் முன்னேறும்.
மகளிர் நிறைய இருக்கிறீர்கள், தொட்டிலை ஆட்டும் கை, தொழிலகை ஆளுங்கை என்று சொல்லுவோம். நம்முடைய பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு மகளிருக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கிறார்கள்.
அதன் அடிப்படையில், மகளிர்க்குப் பெருமை சேர்க்கும் வகையில், ஐந்து நாட்களுக்கு முன்பு கூட 100 நாள் வேலைத் திட்டம் மகளிர்க்கு ரூபாய் 319 சம்பளம் உயர்த்தி அறிவிப்பைப் பிரதமர் வெளியிட்டுள்ளார். அதனை நீங்கள் மறந்து விடக்கூடாது.
கரூர் மாவட்டத்தில் திமுக ஊராட்சி மன்ற தலைவர்கள் உள்ள பகுதியில் ஒரு ரூபாய் குறைத்து வழங்கினால் கூட நீங்கள் தட்டி கேட்டுப் பெற வேண்டும். கரூர் தொகுதிக்கு ஒரு தனி முக்கியத்துவம் உள்ளது. தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்றத் தொகுதிகளில் கோயமுத்தூர் தொகுதி தான் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த தொகுதியாக தற்பொழுது உள்ளது.
காரணம் இந்த தொகுதியின் மண்ணின் மைந்தர் தமிழக பாஜக தலைவர் கோவை தொகுதியில் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுகிறார். பாஜக தலைவர் நடத்திய 'என் மண் என் மக்கள்' யாத்திரை மூலம் திமுகவின் வண்டவாளங்களைத் தண்டவாளங்களாக ஏற்றிக் கொண்டு இருப்பவர். திமுகவின் ஊழல்களையும் குடும்ப ஆட்சியையும் யாத்திரை மூலம் அண்ணாமலை வெளிக்கொண்டு வந்து மக்களுக்கு உணர்த்தினார்.
கரூர் மாவட்டத்தின் வளர்ச்சிக்காக திமுகவில் உள்ள சட்டமன்ற உறுப்பினர்கள், கூட்டணியில் உள்ள காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினரும் எவ்வித வளர்ச்சித் திட்டங்களையும் மேற்கொள்ளவில்லை. மக்களின் வரிப்பணத்தைச் செலவிட்டுச் சுரண்டலில் மட்டுமே ஈடுபட்டனர். வாக்களித்த மக்களுக்கு நன்றிக் கடனாக திமுகவும் அதன் கூட்டணிக் கட்சியைச் சேர்ந்த எம்.பியும் இல்லை என்பதை நீங்கள் மனதில் வைத்து வாக்களிக்க வேண்டும்.
கரூரில் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்வு செய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதி மணி தொகுதிக்காக, எந்த பிரச்னையையும் நாடாளுமன்றத்தில் பேசியது இல்லை. அவர் டெல்லியில் இருப்பார், சில நாட்கள் சென்னையில் இருப்பார் அல்லது வேறு மாநிலங்களில் தேசிய அரசியலில் நேரம் செலவிடுவார். ஆனால் அவருக்கு வாக்களித்த மக்களோடு சொந்தத் தொகுதியில் இருக்கும் காலம் மிக மிகக் குறைவாக இருந்தது.
அதனால்தான், உங்களில் ஒருவராக உள்ள பாஜக கரூர் நாடாளுமன்றத் தொகுதி வேட்பாளர் செந்தில்நாதன் மக்களோடு மக்களாக குடும்பத்தோடு வசித்து வருகிறார். அவரை நீங்கள் வெற்றி பெறச் செய்ய வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன் என்று பேசினார்.
இதையும் படிங்க:கட்டாயப்படுத்தி குழந்தை திருமணம் செய்து வைத்ததாகப் புகார்.. போக்சோவில் கணவர் கைது! - Forced Child Marriage