தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

Fact Check: மதுரை மீனாட்சி அம்மன் கோயில் அருகே வெட்டப்பட்டது ஆடு! - MADURAI MEENAKSHI AMMAN FACT CHECK

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு அருகில் வெட்டப்பட்டது ஆடு எனவும், இது ஒரு இந்து சாமியாடியால் மேற்கொள்ளப்படும் அன்னதான சடங்கு எனவும் கண்டுபிடிக்கப்பட்டது.

மதுரை மீனாட்சி அம்மன் கோயில் அருகே மாடு வெட்டப்பட்டதாக பரவும் வீடியோவின் ஸ்கிரீன்ஷாட்
மதுரை மீனாட்சி அம்மன் கோயில் அருகே மாடு வெட்டப்பட்டதாக பரவும் வீடியோவின் ஸ்கிரீன்ஷாட் (TeluguPost FactCheck)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Feb 21, 2025, 11:51 AM IST

Claim:
மதுரை மீனாட்சி அம்மன் கோயில் அருகே மாடு வெட்டப்படுகிறது எனவும் இது இந்துக்களை புண்படுத்தும் நோக்கில் செய்யப்படுகிறது எனப் பரவும் வைரல் வீடியோ.
Fact:
வெட்டப்படுவது ஆடு எனவும், பல ஆண்டுகளாக இருக்கும் ஒரு வழக்கத்தை போலியாக சித்தரித்து பதிவு வெளியிடப்பட்டுள்ளது கண்டுபிடிக்கப்பட்டது.

உலகளவில் பிரசித்தி பெற்ற ஆன்மீக தலமாக மதுரை மீனாட்சி அம்மன் கோயில் உள்ளது. இந்தியா மட்டுமின்றி, உலக நாடுகளைச் சேர்ந்த பக்தர்கள் இங்குவந்து சாமி தரிசனம் செய்துவிட்டு செல்வதுண்டு. இங்கும், இதை சுற்றியும் பல வழக்க முறைகள் உள்ளன. சமீபத்தில் திருப்பரங்குன்றம் கோயில் அருகே இருக்கும் மலை தர்காவில் இறைச்சி வெட்டப்பட்டது என பிரச்னைகள் கிளம்பி தமிழ்நாடே பரபரப்புக்குள்ளானது.

அதேபோல, தற்போது மதுரை மீனாட்சி அம்மன் கோயில் அருகே ஒருவர் மாடுகளை வெட்டுகிறார் எனக் கூறும் வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பரவி வருகிறது. கே.சத்திரியன் (Kshatriyan / @Tnagainstnaxals) எனும் எக்ஸ் பயனர் இது தொடர்பான ஒரு வீடியோவைப் பகிர்ந்துள்ளார்.

அவர் தன் பதிவில், “மதுரை மீனாட்சி அம்மன் கோயில் மிக அருகில் இரவு நேரங்களில் மாடுகளை வெட்டும் மர்ம கும்பலுக்கு யார் அனுமதி கொடுத்தது @mkstalin ? @PKSekarbabu அவர்களே இந்துக்கள் பாவத்தை சேர்த்து கொண்டே போகாதீர்கள்” என்று குறிப்பிட்டுள்ளார். அவர் அதில் இணைத்துள்ள வீடியோவில், கட்டடத்தின் மொட்டை மாடியில் வைத்து இறைச்சி வெட்டுவது போன்றும், அதன் அருகே கோயில் கோபுரம் தெரிவது போன்றும் உள்ளது.

இதே வீடியோவைப் பகிர்ந்திருக்கும் மற்றொரு எக்ஸ் பயனர் அனில், (MR.Anil / @Saffron_Anil_) இந்துக்களின் எழுச்சியை பார்த்து திருப்பரங்குன்றம் விவகாரத்தில் இப்பதான் முடிட்டு இருந்தா*ங்க மர்ம கும்பல். இப்போது திரும்ப மர்ம கும்பல் புனித இடமான‌ மதுரை மீனாட்சி அம்மன் கோயில் அருகில் இரவு நேரங்களில் மாடு வெட்டுகிறார்கள்.

மதுரை இந்துக்களிடம் மட்டுமே பிரச்சனை பண்ண வேண்டும் என்ற ஒரே நோக்கத்தோடு இருப்பதாக தெரிகிறது இது. எல்லை மீறி போகிறார்கள் மர்ம நபர்கள். இந்துக்களை வம்பு இழுக்காமல் இருங்கள், இல்லை, எதிர்வினை வந்தால் அழுக கூடாது.” என்று குறிப்பிட்டுள்ளார். மேலும், ஒரு எக்ஸ் பயனர் Voice of Hindus / @Warlock_Shubh வெளியிட்டுள்ள பதிவில், இதே வீடியோவைக் காணமுடிந்தது.

வைரல் பதிவின் இணைப்பு இங்கே உள்ளது.

பகிரப்படும் தகவலின் ஸ்கிரீன்ஷாட்டை கீழே காணலாம்.

வைரலாகும் போலி சமூக வலைத்தள செய்தி (X / @Tnagainstnaxals)

உண்மைத் சரிபார்ப்பு:

மேற்கூறப்பட்ட தகவல்கள் குறித்து TeluguPost உண்மை கண்டறியும் குழு விசாரணை நடத்தியதில், இந்த செய்தி தவறாக பரப்படுவது கண்டுபிடிக்கப்பட்டது.

இதனைத் தணிக்கை செய்யும் விதமாக, “மீனாட்சி அம்மன் கோயில் அருகே மாடு வெட்டப்பட்டது” என்ற வாக்கியத்தைக் கொண்டு சமூக வலைத்தளங்களில் தேடினோம். அப்போது, தமிழ்நாடு அரசின் உண்மை கண்டறியும் குழுவின் இயக்குநர் அயன் கார்த்திகேயன் எக்ஸ் பதிவு கிடைத்தது.

அதில், மீனாட்சியம்மன் கோயில் மேல கோபுரம் அருகில் மாட்டை உரிப்பதாக பரவும் தகவல் தவறானது. சிவராமன் ஒரு சாமியாடி. ஆடு அறுத்து வழிப் போக்கர்களுக்கும், உணவின்றி தவிப்பவர்களுக்கு அன்னதானம் செய்வதும் வழக்கம். ஒவ்வொரு ஆண்டும் காணிக்கையை சேர்த்து வைத்துக் கொண்டு, ஆடுகளை அறுத்து அன்னதானம் கொடுத்து வருவது வழக்கமாக தெரிகிறது. இந்த வருடம் அவ்வாறு செய்ததை மாட்டை அறுக்கிறார்கள் என்றும், கோயில் புனிதம் கெட்டது என்றும் வதந்தியை பரப்பிவருகிறார். பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் வதந்தி பரப்பப்படுகிறது. அவ்வாறு செய்வது சட்டப்படி குற்றம்,” என்று குறிப்பிட்டுள்ளார்.

வேறு யாரேனும் இது தொடர்பாக செய்தி வெளியிட்டுள்ளனரா என்று சோதனை செய்து பார்க்கப்பட்டது. அப்போது புதிய தலைமுறையின் எக்ஸ் தளப் பக்கத்தில் பிப்ரவரி 18 அன்று ஒரு பதிவு போடப்பட்டிருந்தது. அதில், மீனாட்சியம்மன் கோயில் அருகே இறைச்சி வெட்டப்படுவதாக வெளியான வீடியோ: உளவுத்துறையினரும், காவல்துறையினரும் நடத்திய விசாரணையில், ‘நான் மறைமுகமாக ஆடுகளை பலி கொடுக்காதது தவறுதான்; ஆனால் அதில் எனக்கு எந்த உள்நோக்கமும் கிடையாது’ என சமயகருப்பன், சங்கிலி கருப்பனை வைத்து குறிபார்த்து அருள்வாக்கு சொல்லும் நபர் விளக்கம்,” என்று கூறப்பட்டிருந்தது.

மேலும், அரசுத் தரப்பில் ஏதேனும் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளதா என ஆராய்ந்து பார்க்கும்போது, தமிழ்நாடு அரசின் உண்மை கண்டறியும் குழுவும் ‘TN Fact Check’, இது போலியானப் பதிவு என விளக்கம் அளித்துள்ளது.

முடிவு:

மேற்கொண்ட தணிக்கையில், மதுரை மீனாட்சி அம்மன் கோயில் அருகே வெட்டப்பட்டது மாடு இல்லை என்பதும் உறுதியானது. அதுமட்டுமில்லாமல், இது பல ஆண்டுகளாக கோயில்களில் சாமியாடு இந்து நபரால் மேற்கொள்ளப்படும் அன்னதான வழிமுறை எனவும் கண்டுபிடிக்கப்பட்டது. எனவே, செய்திகளை பகுப்பாய்வு செய்த பின் பகிரும் படி TeluguPost உண்மை கண்டறியும் குழு இதன் வாயிலாக கேட்டுக்கொள்கிறது.

(குறிப்பு: இது முதலில் TeluguPost-இல் வெளியிடப்பட்டது. போலி செய்திகளை ஒழிக்கும் 'சக்தி கலெக்டிவ்' (Sakthi Collective) திட்டத்தின் ஒரு பகுதியாக, ஈடிவி பாரத் தமிழ்நாடு செய்தித் தளத்தில் மறு வெளியீடு செய்யப்பட்டது)

Fact Check

Claim:மதுரை மீனாட்சி அம்மன் கோயில் அருகே மாடு வெட்டப்படுகிறது எனவும் இது இந்துக்களை புண்படுத்தும் நோக்கில் செய்யப்படுகிறது எனப் பரவும் வைரல் வீடியோ.

Claimed By:Social Media Users

Claim Reviewed By:TeluguPost FactCheck

Claim Source:Social Media

Fact Check:Misleading

ABOUT THE AUTHOR

...view details