சென்னை :தமிழ்நாட்டுக்கு முதலீடுகளை ஈர்ப்பதற்காக 17 நாள் அரசு முறைப் பயணமாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அமெரிக்கா சென்றுள்ளார். இந்த பயணத்தின்போது பல முக்கிய நிறுவனங்களின் தொழிலதிபர்களைச் சந்திக்கிறார். அப்போது பல்வேறு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி உள்ளன.
இந்நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (செப் 3) சான்பிரான்சிஸ்கோவில் இருந்து சிகாகோ வந்தடைந்தார். முதலமைச்சருக்கு சிகாகோவிற்கான துணைத் தூதர் சோம்நாத் கோஷ் மலர்கொத்து வழங்கி வரவேற்றார்.
சிகாகோ விமான நிலையத்தில், முதலமைச்சருக்கு, வட அமெரிக்க தமிழ் சங்கங்களின் கூட்டமைப்பு (FETNA), தமிழ்நாடு அறக்கட்டளை, சிகாகோ தமிழ் சங்கம், மில்வாக்கி தமிழ் சங்கம், அறம் குழு, ப்ளூமிங்டன் தமிழ் சங்கம், அன்னை தமிழ் பள்ளி, மேடிசன் தமிழ் சங்கம் மற்றும் பியோரியா தமிழ் சங்கம் ஆகிய தமிழ்ச் சங்கங்களின் சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
தமிழ்நாடு முதலமைச்சர் சிகாகோவில் பல்வேறு தொழில் நிறுவனங்களின் உயர் அலுவலர்களை சந்தித்து தமிழ்நாட்டில் முதலீடுகளை மேற்கொள்ள அழைப்பு விடுக்கவுள்ளார். இந்நிகழ்வின்போது, தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா, தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறை செயலாளர் வி.அருண் ராய், தொழில் வழிகாட்டி நிறுவனத்தின் மேலாண்மை இயக்குனர் மற்றும் தலைமைச் செயல் அலுவலர் வே.விஷ்ணு மற்றும் அரசு உயர் அலுவலர்கள் உடனிருந்தனர்.