திருச்சி:திருச்சி காவேரி ஆற்று மேம்பாலம் காலை மற்றும் மாலை நேரங்களில் பொதுமக்கள் நடைபயிற்சி செய்ய பயன்படுத்தும் இடமாகவும், அய்யாளம்மன் படித்துறை, அம்மா மண்டபம் படித்துறை குளிப்பதற்கும், பொழுதுபோக்கு இடமாகவும் இருந்து வருகிறது. இந்நிலையில், சிந்தாமணி அருகே காவிரி ஆறு மற்றும் அதன் கரையோரப் பகுதியில் அடிக்கடி முதலைகள் நடமாட்டம் உள்ளதாக நீண்ட காலமாக வனத்துறை அதிகாரிகள் பொதுமக்களுக்கு தொடர்ந்து எச்சரிக்கை விடுத்து வந்தனர்.
இதனிடையே, கடந்த சில நாட்களாக மாலை நேரங்களில் முதலைகள் ஆற்றின் மணல் திட்டுகளில் வந்து படுத்திருப்பதும், அதனை பொதுமக்கள் கண்டு அச்சமடைந்து தீயணைப்புத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கொடுப்பதும் தொடர்கதையாக இருந்து வந்தது. இதனிடையே, காவிரி ஆற்றின் தண்ணீரில் கரையோரம் வசிக்கக்கூடிய மக்கள் சிலர் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், அப்பகுதி மக்களுக்கு காவிரி ஆற்றில் குளிப்பதற்கும், துணி துவைக்கவும் இறங்கக்கூடாது என்று ஏற்கனவே வனத்துறை, தீயணைப்புத்துறை அதிகாரிகளும் எச்சரிக்கை விடுத்திருந்தனர். இதற்கிடையே, நேற்று காவிரி ஆற்று மணல் திட்டில் முதலை படுத்திருப்பதை சிலர் பார்த்ததைத் தொடர்ந்து, சிறிது நேரத்தில் காவிரி பாலத்தில் செல்லக்கூடிய வாகன ஓட்டிகள் ஏராளமானோர் அங்கே வாகனங்களை நிறுத்திவிட்டு முதலையை வேடிக்கைப் பார்க்க துவங்கினர்.