டெல்லி:கஞ்சா வைத்திருந்ததாக கடந்த மே மாதம், பிரபல யூடியூபர் சவுக்கு சங்கர் மீது பதியப்பட்ட வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் மீண்டும் அவர் கடந்த திங்கள்கிழமை ( ஆகஸ்ட் 12) கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். தமிழக காவல் துறையின் இந்த நடவடிக்கையை எதிர்த்து சவுக்கு சங்கர் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனுவை இன்று விசாரணைக்கு ஏற்றுகொண்ட உச்ச நீதிமன்றம், "மனுதாரர் (சவுக்கு சங்கர்) மீது பதியப்பட்ட 16 வழக்குகளிலும் எவ்வித கடுமையான நடவடிக்கைகளை போலீசார் எடுக்காத வண்ணம் சட்ட பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது. தற்போது அவர் மீது பதியப்பட்டுள்ள வழக்கு உட்பட அனைத்து வழக்குகளின் விரிவான முதல் தகவல் அறிக்கையை (எஃப்ஐஆர்) தமிழ்நாடு காவல் துறை சமர்பிக்க வேண்டும்" என்று உத்தரவிட்டுள்ளது.
முன்னதாக, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி. ஒய்.சந்திரசூட், நீதிபதிகள் ஜே.பி.பர்டிவாலா மற்றும் மனோஜ் மிஸ்ரா ஆகியோர் அடங்கிய அமர்வு முன் இவ்வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, "உச்ச நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுகளின்படி சவுக்கு சங்கர் சிறையிலிருந்து வெளியே வந்துள்ளார். மேலும் அவர், தன் மீதான அனைத்து வழக்குகளிலும் அவர் ஜாமீன் பெற்றுள்ளார். இந்த நிலையில் அவரை தமிழ்நாடு காவல் துறை கைது செய்து மீண்டும் சிறையில் அடைத்துள்ளது" என்று முறையிட்டார்.
சவுக்கு சங்கரை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய, சென்னை மாநகர காவல் ஆணையர் அண்மையில் பிறப்பித்திருந்த உத்தரவை கடந்த 9 ஆம் தேதி (ஆகஸ்ட் 9) ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டிருந்தது. அத்துடன், கோவை சிறையில் அடைக்கப்பட்டுள்ள சவுக்கு சங்கரை, வேறு எந்தவொரு வழக்கிலும் தேவையில்லாதபட்சத்தில் சிறையிலிருந்து விடுவிக்கலாம் என்றும் தமது உத்தரவில் உயர் நீதிமன்றம் குறிப்பிட்டிருந்தது.
இதையும் படிங்க:'இதற்கு தானே சுதந்திரம் பெற்றோம்'.. மக்களின் குரலை ஒடுக்க வேண்டுமா? - நீதிபதிகள் சரமாரி கேள்வி!