தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

"ஈஷாவை விட பெண்களுக்கு பாதுகாப்பான இடம் உலகத்திலேயே இருக்க முடியாது" - பெண் துறவிகள்! - ISHA FOUNDATION CASE

ஈஷா பெண் துறவிகள் தொடர்பான ஆட்கொணர்வு மனுவை தள்ளுபடி செய்து உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ள நிலையில், ஈஷாவை விட பெண்களுக்கு பாதுகாப்பான இடம் உலகத்திலேயே இருக்க முடியாது என இரு பெண் துறவிகள் தெரிவித்துள்ளனர்.

பெண் துறவிகள் மா மதி மற்றும் மா மாயு
பெண் துறவிகள் மா மதி மற்றும் மா மாயு (Credits - ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 20, 2024, 7:59 AM IST

கோயம்புத்தூர்:கோவை ஈஷா யோகா மையத்தின் மீது நிலுவையில் உள்ள வழக்குகளை விசாரிப்பதற்கு எந்த தடையும் இல்லை என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. அதேவேளையில், துறவறம் பூண்டுள்ள மகள்களை மீட்டு ஒப்படைக்க வேண்டும் என்று தந்தை தொடர்ந்த ஆட்கொணர்வு மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.

இந்நிலையில் அந்த இரு பெண் துறவிகளும் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளனர். அதில் ‘இந்த தீர்ப்பு தங்களுக்கு மகிழ்ச்சி அளிப்பதாகவும், ஈஷாவை விட பெண்களுக்கு பாதுகாப்பான இடம் உலகத்திலேயே இருக்க முடியாது’ என்றும் தெரிவித்துள்ளனர்.

கோவை ஈஷா மையத்தில் படிக்க சென்ற தங்களது இரு மகள்களையும் மீட்டுத் தருமாறு, கோவை வடவள்ளியைச் சேர்ந்த காமராஜ் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனுத் தாக்கல் செய்திருந்தார்.இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், கோவை ஈஷா யோகா மையம் மீது எத்தனை வழக்குகள் நிலுவையில் உள்ளன என்பது குறித்த அறிக்கை தாக்கல் செய்யுமாறு கோவை மாவட்ட போலீசாருக்கு உத்தரவிட்டு இருந்தது. இதையடுத்து, ஈஷா யோகா மையத்துக்கு சென்று போலீசார் மற்றும் சமூக நலத்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர்.

பெண் துறவிகள் பேட்டி வெளியிட்டுள்ள வீடியோ (Credits - ETV Bharat Tamil Nadu)

ஈஷா யோகா மையம் தொடர்பான அறிக்கை அளிக்க, சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் விதித்த உத்தரவுக்கு தடை விதிக்க வேண்டும் என ஈஷா சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. அந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான அமர்வு, ஈஷா யோகா மையத்துக்கு எதிராக, சென்னை உயர் நீதிமன்ற உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்து அங்குள்ள வழக்கை உச்ச நீதிமன்றத்திற்கு மாற்றிக் கொள்வதாக தெரிவித்தது.

மேலும், இந்த விவகாரம் தொடர்பாக போலீசார் நிலையறிக்கை தாக்கல் செய்யுமாறும் உத்தரவிட்டிருந்தது. அதன்படி, தமிழக அரசு தரப்பில், உச்ச நீதிமன்றத்தில் ஈஷா யோகா மையம் தொடர்பான நிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. இந்நிலையில், இந்த வழக்கு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான அமர்வில் மீண்டும் விசாரணைக்கு வந்தது.

இதையும் படிங்க:ஈஷா மையத்துக்கு எதிரான ஆட்கொணர்வு மனுவை முடித்து வைத்த உச்ச நீதிமன்றம் தமிழக அரசுக்கு கூறியது என்ன?

அப்போது, ஈஷா யோகா மையத்துக்கு எதிரான ஆட்கொணர்வு மனுவை தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார். மேலும், ஈஷா யோகா மையத்துக்கு எதிராக ஏற்கெனவே நிலுவையில் உள்ள வழக்குகள் மீதான புலன் விசாரணைக்கு எந்த தடையும் இல்லை என்று உத்தரவிட்டுள்ளனர்.

இந்நிலையில் அந்த இரு பெண் துறவிகளும் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளனர். அவர்கள் வெளியிட்டுள்ள வீடியோவில் முதலில் பேசியுள்ள மா மதி கூறுகையில், ” உச்சநீதிமன்ற தீர்ப்பிற்கு எங்களின் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். எங்களுக்கு மிகவும் ஆதரவாக இந்த தீர்ப்பு இருக்கிறது. 2016-ஆம் ஆண்டில் இருந்து, நாங்கள் எங்களின் சொந்த விருப்பத்தில் இருக்கிறோமா? அல்லது பிறரின் வற்புறுத்தலின் பேரில் இங்கு இருக்கிறோமா? என்று ஊடகங்கள் மற்றும் பலர் தற்போது வரை, இந்த சூழ்நிலையை மிகவும் பெரிதுபடுத்தி திரித்து பேசிக்கொண்டு இருக்கிறார்கள்.

நாங்கள் விருப்பப்பட்டு தான் இந்த முடிவை தேர்ந்தெடுத்தோம். யாருடைய கட்டாயத்தின் பெயரிலோ அல்லது வற்புறுத்தலின் பெயரிலோ நாங்கள் இங்கு வரவில்லை. நாங்கள் இந்தப் பாதையில் இருக்க வேண்டும் என்று நீண்ட வருடங்களாக இருந்த ஆசையினால் எடுத்தோம்” என்று கூறினார்.

இதனையடுத்து, மற்றொரு பெண் துறவியான மா மாயு கூறுகையில், “ யார் கூறியும் நான் ஈஷா யோகா மையத்திற்கு தன்னார்வலராக வரவில்லை. 2009ல் இங்கு முழுநேர தன்னார்வ தொண்டராக வந்து, 2011ல் பிரம்மச்சரிய பாதையை தேர்ந்தெடுத்தேன். பெண்களுக்கு இங்கு பாதுகாப்பு இருக்கிறதா? என்று கேட்டால், இதை விட பாதுகாப்பான இடம் உலகத்திலேயே இருக்க முடியாது.

ஏனென்றால், இங்கு நீங்கள் வந்தால், நீங்கள் ஆண் அல்லது பெண் என்று இங்கு இருப்பவர்களுக்கு சிந்தனை இருக்காது. பெண்ணை ஒரு உயிராக பார்ப்பதை விட பெரிய மரியாதை இருக்க முடியாது. இங்கு துறவிகளாக இருப்பது 215 பேர். திருமணம் செய்து கொண்டவர்கள் ஆயிரக்கணக்கில் இருக்கிறார்கள். இங்கு இருக்கின்றவர்களில் திருமணம் வேண்டும் என்கிறவர்களுக்கு திருமணம். துறவறம் வேண்டும் என்கிறவர்களுக்கு துறவறம். இதற்கு சத்குருவிற்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்” என அவர் கூறியுள்ளார்.

ஈடிவி பாரத் தமிழ்நாடு (ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் தமிழ்நாடு வாட்ஸ்அப் சேனலில் இணையஇங்கே கிளிக் செய்யவும்

ABOUT THE AUTHOR

...view details