டெல்லி: சட்டவிரோத பணப் பரிவர்த்தனை தடைச் சட்ட வழக்கில், கடந்த ஆண்டு ஜூன் 14ஆம் தேதி செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை கைது செய்தது. இதனையடுத்து, அவருக்கு எதிராக கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் அமலாக்கத்துறை சார்பில் 3 ஆயிரம் பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்யப்பட்டது.
தொடர்ந்து, அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டுள்ள செந்தில் பாலாஜி ஜாமீன் வழங்கக் கோரி உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். இந்த மனு மீதான விசாரணை நிறைவுற்ற நிலையில், இன்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.
அதில், முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது. இதனால் 471 நாட்களுக்கு பிறகு சிறையில் இருந்து வெளியே வருகிறார்.
நீதிமன்றம் விதித்த நிபந்தனைகள் என்ன?:நீதிமன்ற தீர்ப்புக்கு பிறகு செந்தில் பாலாஜி தரப்பு வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ உச்ச நீதிமன்ற வளாகத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், திங்கள் மற்றும் வெள்ளிக்கிழமை என வாரத்திற்கு இரு நாட்கள் அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும், ரூ.25 லட்சம் ரூபாய்க்கு இருவர் உத்திரவாதம் வழங்க வேண்டும், சாட்சிகளை கலைக்க எவ்வித முயற்சிகளிலும் ஈடுபடக் கூடாது உள்ளிட்ட நிபந்தனைகளுடன் செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
செந்தில் பாலாஜி மீண்டும் அமைச்சராக பொறுப்பேற்க ஏதேனும் தடை விதிக்கப்பட்டுள்ளதாக செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அமைச்சராக பொறுப்பேற்க எவ்வித தடையும் விதிக்கவில்லை என்று வழக்கறிஞர் என்.ஆர். இளங்கோ கூறினார்.
கரூரில் கொண்டாட்டத்தை வெளிப்படுத்திய திமுகவினர் புகைப்படம் (Credit - ETV Bharat Tamil Nadu) இதனிடையே, முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு உச்ச நீதிமன்றம் ஜாமீன் வழங்கியதை தொடர்ந்து தமிழகம் முழுவதும் திமுகவினர் பட்டாசு வெடித்தும் இனிப்பு வழங்கியும் கொண்டாடி வருகின்றனர். குறிப்பாக அவரது சொந்த மாவட்டமான கரூர் மற்றும் பொறுப்பு அமைச்சராக இருந்த கோவையில் திமுக நிர்வாகிகள் சாலைகளில் செல்லும் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
ஈடிவி பாரத் வாட்ஸ்அப் சேனலில் இணையஇங்கே கிளிக் செய்யவும்