தமிழ்நாடு

tamil nadu

By ETV Bharat Tamil Nadu Team

Published : 11 hours ago

Updated : 10 hours ago

ETV Bharat / state

மீண்டும் அமைச்சர் ஆவாரா செந்தில் பாலாஜி.? கோவையில் அடுத்து என்ன.? கப்சிப் ஆன உள்ளாட்சி பிரதிநிதிகள்! - v senthil balaji

திமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமீனுக்கு பிறகு அவர் உள்ளாட்சி அளவில் கோவையை மீண்டும் கட்டமைக்க வாய்ப்புள்ளதாக அவரது ஆதரவாளர்கள் தெரிவிக்கின்றனர். மேலும், முதல்வர் டெல்லி சென்று திரும்பிய ஓரிரு நாட்களில் செந்தில் பாலாஜிக்கு மீண்டும் அமைச்சர் பதவி வழங்க அதிக வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி (கோப்புப்படம்)
முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி (கோப்புப்படம்) (credit - V Senthilbalaji x page)

சென்னை: சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டு ஓராண்டுக்கு மேல் சிறையில் இருந்து வந்த முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு உச்ச நீதிமன்றம் இன்று நிபந்தனை ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது. இதனை தொடர்ந்து, செந்தில் பாலாஜியின் பிணை உத்தரவாதத்தை ஏற்றுக்கொண்ட சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம், அவரை சிறையில் இருந்து விடுவிக்க உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்த செந்தில் பாலாஜி இன்று மாலை 7:15 மணியளவில் வெளியே வந்தார்.

முதல்வர் ரியாக்ஷன்:செந்தில் பாலாஜி ஜாமீனில் வெளியே வந்துள்ளதை, தமிழகம் முழுவதும் உள்ள அவரது ஆதரவாளர்கள் பட்டாசு வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் கொண்டாடி வருகின்றனர். குறிப்பாக, திமுக தலைவரும், தமிழக முதல்வருமான மு.க. ஸ்டாலின் தமது எக்ஸ் பக்கத்தில், ''சகோதரர் செந்தில் பாலாஜிக்கு 471 நாட்களுக்குப் பிறகு, உச்ச நீதிமன்றத்தால் பிணை கிடைத்திருக்கிறது. எமர்ஜென்சி காலத்தில் கூட இவ்வளவு நாட்கள் சிறை வாழ்க்கை கிடையாது. அரசியல் சதிச் செயல்கள் 15 மாதங்கள் தொடர்ந்தன. அமலாக்கத் துறையானது, அரசியல் எதிரிகளை ஒடுக்கும் துறையாக மாற்றப்பட்ட தற்போதைய சூழலில், அதற்கு உச்சநீதிமன்றம் ஒன்றே விடியலாக இருக்கிறது. சிறையில் இருந்து வெளியில் வரும் சகோதரர் செந்தில் பாலாஜியை வருக வருக என வரவேற்கிறேன்'' என பதிவிட்டிருந்தார்.

அமைச்சராக தடையா?:செந்தில் பாலாஜியின் வருகையை முன்னிட்டு அவருக்கு மீண்டும் அமைச்சர் பதவி வழங்கப்படுமா? அவர் ஏற்கனவே கவனித்து வந்த மின்துறை மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வைத் துறை அளிக்கப்படுமா? என்பன போன்ற கேள்விகள் எழுந்துள்ள நிலையில், செய்தியாளர்களிடம் பேசிய திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, ''செந்தில் பாலாஜி அமைச்சராவதற்கு எவ்வித தடையும் இல்லை எனவும், எந்த விதமான முகாந்திரமும் இல்லாமல் 15 மாத காலம் செந்தில் பாலாஜி சிறையில் இருந்துள்ளார்'' என்றும் தெரிவித்தார்.

அதனை தொடர்ந்து கோவையில் பேசிய அமைச்சர் முத்துசாமி, ''செந்தில் பாலாஜியின் அமைச்சர் பொறுப்பு குறித்து தலைமைதான் முடிவெடுக்கும்'' என கூறினார். அதேபோல, திமுக செய்தி தொடர்பாளர் குழு தலைவர் டி.கே.எஸ்.இளங்கோவன் கூறும்போது, செந்தில் பாலாஜிக்கு வழங்கப்பட்டுள்ள ஜாமீன் காலதாமதமாக வழங்கப்பட்ட நீதியாகவே பார்க்கிறேன் என்றும் செந்தில் பாலாஜி அமைச்சர் ஆவதற்கு எந்த தடையும் இல்லை என நீதிமன்றம் கூறியுள்ளதால், இதுகுறித்து திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் முடிவு செய்வார்" என்று தெரிவித்தார்.

வானதி சீனிவாசன் எச்சரிக்கை: இந்த பரபரப்புக்கு மத்தியில் கோவையில் செய்தியாளர்களை சந்தித்த பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன், ''செந்தில் பாலாஜி மீது என்னென்ன குற்றச்சாட்டுகள் இருக்கின்றன என்பதை தற்போதைய முதல்வரே முன்பு பேசி இருக்கிறார். செந்தில் பாலாஜி அரசின் முழு ஆதரவைப் பெற்ற, வலுவான அமைச்சராக இருந்தவர். அவர் உள்ளே இருந்தாலும் கூட கோவை மாநகராட்சியில் யார் மேயராக வேண்டும் என்பதை முடிவு செய்தார் என கூறப்படுகிறது. மீண்டும் அதே போன்ற ஒரு முக்கியத்துவமோ, அதே செல்வாக்கு இருந்தால் அது சாட்சிகளைப் பாதிக்கும். மாநில முதல்வர் இதில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்'' என கூறினார்.

திமுகவின் செல்வாக்குமிக்க அமைச்சராக இருந்து வரும் செந்தில் பாலாஜிக்கு மீண்டும் அமைச்சர் பொறுப்பு அளிப்பதில் எந்த தடையும் இல்லை என்று திமுகவின் மூத்த நிர்வாகிகள் கருத்து தெரிவித்து வரும் நிலையில், செந்தில் பாலாஜி தற்போது ஜாமீன் கட்டுப்பாட்டில் இருப்பதால் கட்சித் தலைமை என்ன முடிவெடுக்கும் என்ற கேள்வியும் எழுகிறது.

சட்ட ரீதியாக தடை இல்லை: இதுகுறித்து மூத்த பத்திரிகையாளர் துரை கருணா ஈடிவி பாரத்திடம் பேசியபோது, ''பொன்முடி வழக்கில் தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டபோது, அவருக்கு மீண்டும் அமைச்சர் பதவி வழங்க முடிவு செய்யப்பட்டது. ஆனால், ஆளுநர் அதற்கு ஒப்புதல் அளிக்கவில்லை. பொன்முடி அமைச்சராக சட்ட ரீதியாக எந்த தடையும் இல்லை என்ற அடிப்படையில், பொன்முடிக்கு ஆளுநர் அமைச்சராக பதவி பிரமாணம் செய்து வைத்தார். அதாவது, இதுபோன்ற சூழலில் தார்மீக அடிப்படையில் வேண்டுமானால் வழங்கப்படாமல் இருக்கலாம், ஆனால் சட்ட ரீதியாக எந்த தடையும் இல்லை. மேலும், முதல்வர் டெல்லி சென்று திரும்பிய உடனேயே செந்தில் பாலாஜிக்கு அமைச்சர் பதவி வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் ஏற்கனவே கவனித்து வந்த மின்துறை மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வைத் துறையே மீண்டும் அவருக்கு அளிக்கப்படலாம்'' எனவும் அவர் கூறினார்.

கோவையில் அடுத்து என்ன?:செந்தில் பாலாஜியின் விடுதலைக்கு பிறகு கோவை உள்ளாட்சி அமைப்பை மீண்டும் கட்டமைக்க வாய்ப்புள்ளதாகவும் அவரது ஆதரவாளர்கள் தெரிவிக்கின்றனர். சிறை செல்வதற்கு முன்பாக செந்தில் பாலாஜியால் பலனடைந்தவர்களில் பெரும்பாலானோர், கடந்த ஓராண்டாக அவரை நேரில் சென்று பார்க்கவில்லை. தற்போது செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் கிடைத்துள்ளதால் அது அவர்களுக்கு கலக்கத்தை கொடுத்திருப்பதாகவும் கூறுகின்றனர்.

இது குறித்து செந்தில் பாலாஜி ஆதரவாளர்கள் கூறுகையில், ''2022ல் செந்தில் பாலாஜி தலைமையில் நடைப்பெற்ற கோவை நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்ற திமுக மாமன்ற உறுப்பினர்கள் 73 பேர், நகராட்சி உறுப்பினர்கள் 159 பேர், பேரூராட்சி உறுப்பினர்கள் 378 பேர் என மொத்தம் 610 பேர் செந்தில் பாலாஜியால் பலனடைந்தவர்கள்.

இவர்களை வெற்றி பெற வைக்க காலை கோவை, மாலையில் கரூர், இரவில் சென்னை என வாகனத்திலேயே உணவு, தூக்கமின்றி செந்தில் பாலாஜி பயணித்திருந்தார். தேர்தல் அறிவிப்பு நாளில் கூட கோவையில் தான் இருந்தார். ஆனால், இவர் கைதான நாளிலிருந்து ஆறு முறை நேரடியாக நீதிமன்றத்திற்கும், மூன்று முறை மருத்துவமனைக்கும் வந்த இவரை ஒரு நாள் செலவழித்து அந்த 610 பேரில் 60 பேர் கூட அவரை சென்று சந்திக்கவில்லை. ஒரு சிலர் மட்டுமே நேரில் சென்று பார்த்தனர்.

மேலும், கடந்த ஓராண்டாக கோவையில் உள்ள ஆதரவாளர்களின் செயல்பாடுகளை கரூரை சார்ந்த செந்தில் பாலாஜியின் ஆதரவாளர்கள் கண்காணித்து வந்தனர். செந்தில் பாலாஜி சிறையில் இருந்து வெளியே் வந்தவுடன் அமைச்சர் பொறுப்பு ஏற்று மீண்டும் கோவையின் பொறுப்பு அமைச்சராக வருவார் என்றும் மீண்டும் கோவையை கட்டமைத்து திமுக கோட்டையாக வைத்திருப்பார்'' எனவும் அவரது ஆதரவாளர்கள் தெரிவித்தனர்.

Last Updated : 10 hours ago

ABOUT THE AUTHOR

...view details