தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஆளுநர் ஆர்.என்.ரவி அய்யா வைகுண்டர் பற்றி பேசிய கருத்துகளுக்கு கிளம்பிய எதிர்ப்புகளும், ஆதரவுகளும்!

Tamil Nadu Governor About Ayya Vaikundar: அய்யா வைகுண்டர் பற்றி கடந்த மார்ச்.4ஆம் தேதி தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி பேசியதற்கு எதிர்ப்பும், ஆதரவு பற்றியும் சுருக்கமாக விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு.

Etv Bharat
Etv Bharat

By ETV Bharat Tamil Nadu Team

Published : Mar 8, 2024, 8:50 PM IST

Updated : Mar 8, 2024, 11:04 PM IST

ஆளுநர் ஆர்.என்.ரவி அய்யா வைகுண்டர் பற்றி பேசிய கருத்துகளுக்கு கிளம்பிய எதிர்ப்புகளும், ஆதரவுகளும்

கன்னியாகுமரி:அய்யா வைகுண்டரின் 192வது அவதாரத் தின விழா மற்றும் வைகுண்டசாமி அருளிய சனாதன வரலாறு என்ற புத்தக வெளியீடு நிகழ்ச்சிகள் சென்னை கிண்டியில் உள்ள ராஜ் பவனில் மார்ச் 4ஆம் தேதி அன்று நடைபெற்றது.

அந்த நிகழ்ச்சியின் போது தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, அய்யா வைகுண்டர் தோன்றிய காலகட்டம் சனாதன தர்மத்திற்குப் பாதிப்பு ஏற்பட்ட காலம், சனாதன தர்மத்தைக் காப்பதற்கே அய்யா வைகுண்டர் தோன்றினார் என பேசி உள்ளார்கள்.

இதுதொடர்பாக ஆளுநர் அலுவலகத்தின் அதிகாரப்பூர்வ X பக்கத்தில், " அய்யா வைகுண்டர் சனாதன தர்மத்துக்குப் புத்துயிரூட்டி, பெரிதும் வளப்படுத்தினார். சமூக பாகுபாடுகளுக்கு எதிராகப் போராடி, விளிம்புநிலை மற்றும் ஒடுக்கப்பட்டவர்களுக்குச் சமூக நீதியை உறுதி செய்தார்" என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

தமிழக ஆளுநரின் இந்த பேச்சுக்குத் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து கண்டன குரல்கள் எழுந்த வண்ணம் உள்ளன. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, மதிமுக கட்சி உட்படப் பல்வேறு கட்சித் தலைவர்களும் தங்களது எதிர்ப்பைத் தெரிவித்து வருகின்றனர்.

ஆளுநர் பேச்சுக்கு எதிர்ப்பு:

சாமித்தோப்பு பதியின் பால பிரஜாபதி அடிகளார் கூறுகையில், "அய்யா வைகுண்டர் குறித்து புத்தகம் வெளியிடுவது போல் வரலாற்றைத் திரித்து ஆரியக் கோட்பாட்டிற்கு அணி சேர்ப்பது போல் ஆளுநர் பேசி உள்ளது வருந்தத்தக்கது. அய்யா வைகுண்டர் குறித்து ஆளுநர் புரிந்து பேச வேண்டும். உருவ வழிபாடு, மொழி பேதம், ஆண் பெண் பேதம், சாதிகள் இல்லை எனப் பல கோட்பாடுகளைக் கூறியவர் அய்யா வைகுண்டர்.

நாராயணன் அவதாரம் என்று ஆளுநர் கூறுகிறார். ஆனால் எல்லா புராணங்களிலும் வரலாறு திரிக்கப்பட்டு உள்ளது என்று கூறியவர் அய்யா வைகுண்டர். அய்யா சிவ சிவ அர கர என்று நாங்கள் சொல்கிறோம். நாராயணர் அவதாரம் என்று கூறி வழித் தேங்காயை எடுத்து கோயிலில் உடைக்கக் கூடாது.

ராமன் நாராயணன் அவதாரம், அவர் சமத்துவத்தை எடுத்துரைத்தவர். அவரையும் யாரும் சனாதனத்திற்குள் கொண்டு வர முடியாது. குமரிக்கண்டம் மூழ்கி இமயமலை உருவாகியது. இவர்கள் இமயமலையை முன்னிலைப்படுத்திக் கூறுகின்றனர்.

வைகுண்டர் கூறிய தென் கடலை ஆய்வு செய்ய வேண்டும் என்று கூறினால் அதனை ஏற்றுக் கொள்வோம். அதை விட்டு விட்டு வடநாட்டில் இருப்பதை இவர்கள் கூறினால் ஏற்றுக் கொள்ள முடியாது. சாதியை வகுத்தவனை நீசன் என்று கூறுகிறார் அய்யா வைகுண்டர்.

அப்படிப் பட்ட இடத்தில் சனாதனத்தை ஆதரித்தவர் அய்யா என்பதை ஏற்றுக் கொள்ள முடியாது. அய்யா வைகுண்டரை தனதாக்கிக் கொண்டு பட்டா போடுவதற்காக அவர்கள் பேசுவதைக் கண்டிக்கிறோம். யார் ஆட்சிக்கு வரவேண்டும் என்பதைத் தீர்மானிக்கும் மக்களாக அய்யா வழி மக்கள் இருக்கிறார்கள்.

ஆளுநர் வரலாற்றைத் தெரியாமல் பேசவில்லை, யாரையோ திருப்தி படுத்த சுயலாபத்துக்காக வரலாற்றைத் திரித்துப் பேசுகிறார். ஆளுநர் அவரது வேலையை மட்டும் பார்த்தால் போதும். ஆன்மீகப் பணிகளை மேற்கொள்ள வேண்டாம்" என தனது எதிர்ப்பைத் தெரிவித்து உள்ளார்.

சாமித்தோப்பு தலைமை குரு என்ன கூறுகிறார்?

அதே போல், ஆளுநர் பேச்சுக்கு சாமித்தோப்பு தலைமை குருவான வழக்கறிஞர் பால ஜனாதிபதி கூறுகையில், "ஒரு சில யூதாஸ்கள் எழுதிய புத்தகத்தை வைத்துக் கொண்டு சனாதன கோட்பாடு தான் அகிலத்திரட்டு என்று வெளியிட்டு அய்யா வைகுண்டரின் கோட்பாடுகளுக்கு எதிர்மறையாக ஆளுநர் செயல்பட்டு இருக்கிறார். இது கண்டனத்துக்குரியது. தண்டனைக்குரியது.

அய்யா வைகுண்டர் குறித்து புத்தகம் வெளியிடுவதற்கு யாரிடம் ஒப்புதல் பெற்றார்கள்? ஆளுநர் மறுப்பு அறிக்கை வெளியிடாவிட்டால் பல எதிர் விளைவுகளைச் சந்திக்க நேரிடும். ஆளுநர் ஒரு 420 ஆக மாறக்கூடாது. அய்யா அருளியது அகிலத்திரட்டு அம்மானை. ஆனால் ஏதோ ஒரு புத்தகத்தை வெளியிட்டு வைகுண்டர் அருளியது என்று கூற இவருக்கு யார் அதிகாரம் கொடுத்தது.

உலகத்தை அன்புக்குள் அரவணைத்து ஒருகுடைக்குள் கொண்டுவரும் தர்ம ஆட்சி கிடைக்கும் போது இது போன்று மதத்தை வைத்து ஆட்சி செய்பவர்கள் அடித்து விரட்டப்படுவார்கள். மீண்டும் ஆளுநர் சாமித்தோப்புக்கு வரட்டும். அப்போது அவர் சந்திப்பார்.

அய்யா வைகுண்டர் கலியுகத்தை மாற்றி தர்ம யுகத்தைக் காக்க வந்த கடவுள் என்று ஆளுநர் கூறினால் அடுத்த நொடி ஆளுநர் தூக்கி வீசப்படுவார். இது அனைத்தும் மோடியின் மோசடி. ஆளுநர் ஆர்.என்.ரவி ஒரு கிலுப்பை காரன்" என தெரிவித்து உள்ளார்.

ஆளுநர் பேச்சுக்கு ஆதரவு:

அய்யா வழி மக்கள் ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர் சிவச்சந்திரன் கூறுகையில், "அய்யா வைகுண்டரின் 192வது அவதாரத் தின விழாவை ஆளுநர் மாளிகையில் நடத்தியதற்காக ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு அய்யா வழி சேவை அமைப்பின் சார்பில் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

அய்யா வைகுண்டர் கடவுள் என்பதை ஆளுநர் உணர்ந்து இருக்கிறார். அகிலத்திரட்டு அம்மானையில் எங்குமே சனாதனம் பற்றி குறிப்பிடவில்லை. சனாதனம் என்பது மக்களின் வாழ்வியல். மக்கள் எவ்வாறு வாழ வேண்டும் என்பதைப் போதிப்பது தான் சனாதனம்.

இந்துக்களின் தர்மம் சனாதனம். இதனை எந்த நிலையிலும் அகிலத்திரட்டு அம்மானை கண்டிக்கவோ, வேறுபடுத்தவோ இல்லை. இதனை பிரச்சனை ஆக்குவது தனி நபர்கள் தான் சாமித்தோப்பு என்பது தலைமைப் பதி அல்ல. பஞ்சபதிகள் என்று அழைக்கப்படுவதில் ஒரு பதி தான் சாமித்தோப்பு.

உலக மக்கள் அனைவருமே அய்யாவின் வாரிசுகள் தான். இந்த உண்மைக்கு மாறாகப் பொய் பேசி முன்னுக்குப் பின் முரணாகப் பேசுவதே சிலரின் வழக்கம். அய்யாவை பின்பற்றும் 7 ஆயிரம் பதிகள் உள்ளன. இதில் சாமித்தோப்பு என்பது அய்யா தவம் இருந்த இடம் என்பதால் முக்கியமான இடமாகத் திகழ்கிறது.

அகிலத்திரட்டு அம்மானையில் யாரிடமும் பாகுபாடு காட்டக் கூடாது என்றுதான் போதித்து இருக்கிறது. அப்படி என்றால் மனிதர்கள் அனைவரும் ஒருவருக்கு ஒருவர் நாமம் இட்டுக் கொள்ளலாம். தெய்வ நம்பிக்கை இல்லாதவர்களை சாமித் தோப்புக்கு வரவழைத்து அவர்கள் பின்பற்ற வேண்டிய நடைமுறைகளைத் தவிர்த்து அவர்களுக்கு வரவேற்பு அளிக்கிறார்கள். இதனை நாங்கள் கண்டிக்கிறோம்" என தெரிவித்து உள்ளனர்.

இதையும் படிங்க:"காலில் விழும் அரசியலே எனக்கு பிடிக்காது" - தமிழ்நாட்டுப் பெண்ணிடம் மோடி கூறியது என்ன?

Last Updated : Mar 8, 2024, 11:04 PM IST

ABOUT THE AUTHOR

...view details