ஈரோடு:ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் அருகே உள்ள கடம்பூர் மலைப்பகுதியில் 50க்கும் மேற்பட்ட குக்கிராம மக்கள் உள்ளனர். இங்குள்ள பெரும்பான்மையான கிராம மக்கள் விவசாயம் செய்து வருகின்றனர்.
இன்னும் சிலர் காட்டுப்பகுதியில் உள்ள சிறு வனப் பொருட்களைச் சேகரித்து, அதனை விற்பனை செய்து பொருளாதாரம் ஈட்டி வருகின்றனர். இந்த கிராமத்தில் உள்ள குழந்தைகள் பலருக்கும் கல்வி குறித்த போதுமான விழிப்புணர்வு இல்லாமல் இருந்து வந்தனர். இதனையடுத்து, தமிழ்நாடு அரசு மற்றும் 'பரண்' எனக்கூடிய சமூக நலன் அமைப்பு ஆகியவை இணைந்து ஏற்படுத்திய விழிப்புணர்வு காரணமாக, தற்போது இந்த கிராமத்தில் உள்ள 30க்கும் மேற்பட்ட குழந்தைகள் கல்வி பயின்று வருகின்றனர்.
அதிலும் குறிப்பாக, பழங்குடியினத்தைச் சேர்ந்த மாணவி ஒருவர் நீட் தேர்வு எழுதி மருத்துவக் கல்லூரியில் சேர்ந்துள்ளார். இது அங்குள்ள கிராம மக்களிடையே ஒரு மைல்கல்லாக பார்க்கப்படுகிறது. இந்த நிலையில், கோடை விடுமுறையை கொண்டாத்துடன் மாணவர்கள் செலவழிக்க வேண்டும் என்பதற்காக, இலவச கோடை கால பயிற்சி முகாம் ஒன்றை ஏற்பாடு செய்ததுள்ளது பரண் அமைப்பு.
கடந்த ஏப்ரல் 26ஆம் தேதி தொடங்கிய இந்த கோடை கால பயிற்சி முகாமில் குழந்தைகள் நாடாளுமன்றம், சிலம்பம், நாடகம் நடிப்பது, மேடைப்பேச்சு மற்றும் கைவினைப் பொருட்கள் தயார் செய்வது உள்ளிட்ட பயிற்சிகளை வழங்கியுள்ளனர்.