சென்னை: இந்தியாவில் நாடாளுமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு 2 கட்டங்கள் நிறைவடைந்துள்ளது. இந்த நிலையில், சென்னை விமான நிலையம் வந்த பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார்.
அப்போது பேசிய அவர், "நடைபெற்று வரும் நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவிற்கு தனி மெஜாரிட்டி கிடைக்கும் என நம்புகிறேன். ஆனால், கடந்த முறையை விட தற்போது 25 இடங்கள் குறைந்து, 275 இடங்களில் வெற்றி பெறும். தமிழ்நாட்டைப் பொறுத்தவரை, திருநெல்வேலி நாடாளுமன்றத் தொகுதி பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரன் வெற்றி பெறலாம். மற்ற வேட்பாளரைப் பற்றி எனக்குத் தெரியாது.
பாஜக வெற்றி பெற்றால் யார் பிரதமர் ஆவது என்பது குறித்து இதுவரை முறையாக எந்த ஒரு அறிவிப்பும் தெரிவிக்கப்படவில்லை. கட்சிக்குள் தேர்தல் நடத்தியும் முடிவெடுக்கப்படவில்லை. நாடாளுமன்ற உறுப்பினர்கள் வெற்றி பெற்ற பின்பு தான் யார் பிரதமர் என முடிவெடுக்க முடியும். கடந்த பாஜக ஆட்சியில், பொருளாதாரத்தில் எந்த மாற்றமும் வரவில்லை. பிரதமர் மோடி பொருளாதார ஞானம் இருக்கும் யாரையும் சந்தித்துப் பேசவில்லை, எல்லாம் எனக்குத் தெரியும் என்ற பெருமையில் இருந்தார்.
அதேபோல், சீன நாட்டு ராணுவம் நமது நாட்டில் 4 ஆயிரம் சதுர அடி ஆக்கிரமிப்பு செய்துள்ளது. உலக நாடுகளில் பெரிய நாடுகள் எதுவும் நமக்கு தற்போது உதவியாக இல்லை. என்னைப் பொறுத்தவரை, மோடிக்கு 2 முறை வாய்ப்பு கிடைத்துவிட்டது. மூன்றாவது முறை வேறு யாராவது பிரதமராக வர வேண்டும். தேர்தலுக்கு முன்பு ரயிலில் 4 கோடி ரூபாய் கைப்பற்றப்பட்ட பணம் நயினார் நாகேந்திரனுக்குச் சொந்தமானது என உறுதி செய்யப்பட்டால் தமிழ்நாடு பாஜக தலைமையில் மாற்றம் வர வேண்டும், இது எனது கருத்து.