வேலூர்: நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு, அனைத்து துறை அரசு அதிகாரிகளும் பணியிட மாற்றம் செய்யப்பட்டு வருகின்றனர். அந்த வகையில், கடந்த ஜன.27 ஆம் தேதி 12 ஐஏஎஸ் அதிகாரிகளை பணியிடமாற்றம் செய்து தலைமைச் செயலாளர் உத்தரவிட்டார்.
அதனடிப்படையில், வேலூர் மாவட்டத்தில் கடந்த 3 ஆண்டுகளாக ஆட்சியராக பொறுப்பு வகித்து வந்த குமரவேல் பாண்டியன் இடமாற்றம் செய்யப்பட்டு, அவருக்கு பதிலாக சுப்புலட்சுமி ஐஏஎஸ் வேலூர் மாவட்டத்தின் புதிய ஆட்சியராக அறிவிக்கப்பட்டார். இந்த நிலையில், இன்று காலை 10.30 மணியளவில், சுப்புலட்சுமி ஐஏஎஸ் பொறுப்புகளை ஏற்றுக் கொண்டார். மாற்றலாகி செல்லும் ஆட்சியர் குமரவேல் பாண்டியன் பூங்கொத்து கொடுத்து வரவேற்று, பொறுப்புகளை அவரிடம் ஒப்படைத்து சிறப்பாக செயல்பட வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த வேலூர் மாவட்ட புதிய ஆட்சியர் சுப்புலட்சுமி, "வேலூர் மாவட்டத்தின் சமூக பொருளாதார முன்னேற்றத்திற்காக, வேலூர் மாவட்ட நிர்வாகம் பாடுபடும். பத்திரிகையாளர்கள் அரசின் ஒரு அங்கம். அரசின் பல்வேறு நலத் திட்டங்களை மக்களுக்கு கொண்டு சேர்ப்பதில் முக்கிய பங்கு வகிக்கும் பத்திரிகையாளர்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்படும்" எனவும் தெரிவித்தார்.