புதுச்சேரி:புதுச்சேரி முத்தியால்பேட்டையை சேர்ந்த 9 வயது சிறுமி கடந்த 2ஆம் தேதி மாயமான நிலையில், கழிவுநீர் வாய்க்காலில் 5ம் தேதி சடலமாக மீட்கப்பட்டச் சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. சிறுமி பாலியல் வன்கொடுமை முயற்சியில் கொள்ளப்பட்டது விசாரணையில் தெரியவந்ததை அடுத்து இருவர் கைது செய்யப்பட்டனர்.
இந்நிலையில், சிறுமியின் கொலைக்கு நீதி வழங்க வேண்டியும், புதுச்சேரியில் போதைப் பொருள் ஒழிக்க வேண்டி பல்வேறு அரசியல் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். நேற்றைய தினம் இந்தியா கூட்டணிக் கட்சிகள், அதிமுக, சமூக பொதுநல அமைப்புகள் சார்பில் பந்த் போராட்டம் நடத்தப்பட்டது.
இந்நிலையில் காங்கிரஸ், கம்யூனிஸ்ட், விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சிகளின் இளைஞர், மாணவர்களின் கூட்டியக்கம் என்ற அமைப்பை உருவாக்கி இன்று ஊர்வலம், ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என அறிவித்தனர். இதற்காக அண்ணா சிலை அருகே திரண்ட இளைஞர்கள் ஊர்வலமாகச் சட்டசபை நோக்கிச் சென்றனர்.