சென்னை/ தருமபுரி:இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வு, தேசிய தேர்வு முகமையால் இன்று நடத்தப்பட்டது. இதில் நாடு முழுவதும் 557 தேர்வு மையங்களில் 24 லட்சம் மாணவர்கள் எழுதுவதற்கு அனுமதிக்கப்பட்டனர். இவற்றில், தமிழகத்தில் 1.5 லட்சம் மாணவர்கள் தேர்வு எழுதியுள்ளனர். அதிலும், அரசுப் பள்ளிகளில் படித்த 3 ஆயிரத்து 647 மாணவர்களும், 9 ஆயிரத்து 54 மாணவிகளும் நீட் தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டனர்.
இதன்படி, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் அமைக்கப்பட்டிருந்த தேர்வு மையங்களில் மாணவர்கள் நீட் தேர்வை எழுதினர். இன்று பிற்பகல் 2 மணிக்கு தொடங்கிய நீட் தேர்வு மாலை 5.20 மணி வரை நடைபெற்றது. இதில் 720 மதிப்பெண்களுக்கு 200 கேள்விகளுக்கு மாணவர்கள் விடை அளிக்கும் வகையில் வினாத்தாள் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், தேர்வு எழுதிவிட்டு வெளியே வந்த மாணவர்கள், தேர்வில் உயிரியல் பாடப்பிரிவு தொடர்பான கேள்விகள் எளிதாகவும், இயற்பியல் பாடப்பிரிவில் கேட்கப்பட்ட கேள்விகள் சற்று கடினமாகவும் இருந்ததாக கூறினர். சில மாணவர்கள், வினாத்தாள் நடுநிலையாக அமைக்கப்பட்டிருந்ததாகவும், வேதியியல், உயிரியல், விலங்கியல், தாவரவியல் ஆகிய படங்களில் இருந்து கேட்கப்பட்ட கேள்விகள் எழுதும் வகையில் இருந்ததாகவும் தெரிவித்துள்ளனர்.