வேலூர்: வேலூர் மாவட்டம், தொரப்பாடி எழில்நகரில் செயல்பட்டு வரும் பிரபல தனியார் பள்ளியில் வேலூர் சாய்நாதபுரம் கலைவாணர் நகரைச் சேர்ந்த செல்வி (41) என்பவர், கடந்த 2017ஆம் ஆண்டு தட்டச்சராக பணியில் சேர்ந்துள்ளார். சுமார் 6 ஆண்டுகள் பணிபுரிந்த நிலையில், கடந்தாண்டு செப்டம்பர் மாதம் அவர் காசாளர் (Cashier) பணிக்கு மாற்றப்பட்டுள்ளார்.
பள்ளி மாணவர்களின் பெற்றோர் செலுத்தும் கல்விக் கட்டணத்தை செல்வி பெற்றுக் கொண்டு, அதற்கான ரசீது வழங்கி, மறுநாள் அந்த பணத்தை சென்னையில் உள்ள பள்ளியின் அலுவலக வங்கிக் கணக்கில் வரவு வைப்பது வழக்கம். இந்த நிலையில், கடந்தாண்டு செப்டம்பர் முதல் ஜனவரி 3ஆம் தேதி வரை மாணவர்களின் கல்விக் கட்டண ரசீது மற்றும் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்ட பணத்துக்கும் நிறைய வேறுபாடுகள் இருந்துள்ளது.
இதையடுத்து, சென்னையில் உள்ள பள்ளி நிர்வாகத்தின் தணிக்கை குழுவினர், வேலூரில் உள்ள பள்ளியில் மாணவர்கள் செலுத்திய கல்விக் கட்டண ரசீது, வங்கியின் வரவு உள்ளிட்டவற்றை தணிக்கை செய்ததில், காசாளர் செல்வி, மாணவர்களின் கல்விக் கட்டணம் 26 லட்சத்து 90 ஆயிரத்து 127 ரூபாய்க்கு ரசீது வழங்கி விட்டு, அதனை பள்ளியின் வங்கிக் கணக்கில் செலுத்தாமல் கையாடல் செய்தது தெரிய வந்துள்ளது.