தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பள்ளி செல்ல 10 கி.மீ. நடைபயணம்... சாலைப் போக்குவரத்து துண்டிக்கப்பட்டதால் அவலம்

தேனியில் பெய்த கனமழை காரணமாக, மலை கிராம சாலைகளில் நிலச்சரிவு ஏற்பட்டு போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளதால், உடனடியாக சீரமைத்துத் தருமாறு அப்பகுதி மக்கள் மாவட்ட நிர்வாகத்திடம் கோரிக்கை வைத்துள்ளனர்.

hill road damage for rain  theni rain  Agamalai Village  அகமலை
நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட சாலை (Credits - ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 4, 2024, 4:49 PM IST

தேனி: மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் பெய்த கனமழையால், தேனி மாவட்டத்தில் உள்ள அகமலை செல்லும் சாலை துண்டிக்கப்பட்டுள்ளது. இதனால், பள்ளி மாணவ மாணவியர் 10 கி.மீ தூரத்திற்கு மேல் நடந்தே பள்ளிக்குச் சென்றனர். அதுமட்டுமல்லாது, சாலைத் துண்டிப்பால் அத்தியாவசிய பொருட்கள், விவசாய பொருட்கள் கொண்டு செல்ல முடியாத நிலையில் மலைக் கிராம மக்கள் அவதிக்கு உள்ளாகியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து அங்கு வசிக்கும் மலைக் கிராம மக்கள் கூறுகையில், "தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் அகமலை ஊராட்சி அமைந்துள்ளது. இந்த ஊராட்சி போடிநாயக்கனூர் தாலுகாவிற்கு உட்பட்டது என்றாலும், சாலை வசதி என்பது பெரியகுளம் சோத்துப்பாறை அணை வழியாகவே உள்ளது.

இந்த ஊராட்சியில் கண்ணகரை, அலங்காரம், பட்டூர், பரப்பம்பூர், அண்ணா நகர், கரும்பாறை, குறவன் குழி உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட மலைக் கிராமங்கள் உள்ளன. இந்த மலைக் கிராமங்களுக்கு செல்லும் சாலையில் கடந்த இரண்டு தினங்களாக பெய்து வரும் கனமழையால் 10க்கும் மேற்பட்ட இடங்களில் மண் சரிவு ஏற்பட்டு சாலை முற்றிலும் துண்டிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:உத்தரகாண்ட்: 200 அடி பள்ளத்தில் விழுந்த பேருந்து.. 7 பயணிகள் உயிரிழப்பு.. பலர் கவலைக்கிடம்!

அதனால், 2 கி.மீ தூரத்திற்கு வாகனங்கள் செல்ல முடியாமல் சாலை வசதி துண்டிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், தீபாவளி பண்டிகை விடுமுறை முடிந்து இன்று (நவ.04) பள்ளிகளுக்கு செல்லும் மலைக் கிராம பள்ளி மாணவ, மாணவிகள் சாலையில் தேங்கியுள்ள மண் மற்றும் சகதிகளை கடந்தும், சாலையில் சரிந்துள்ள புதர்கள் மற்றும் மரங்களைக் கடந்தும் சுமார் 10 கி.மீ தொலைவுக்கு மேல் நடந்தே செல்லும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.

இதுமட்டுமின்றி, மலைக் கிராம மக்களின் அத்தியாவசிய உணவுப் பொருட்களை வாங்குவதற்கும், விவசாய விளை பொருட்களை விற்பனைக்காக பெரியகுளத்திற்குக் கொண்டு செல்லவும் முடியாத நிலை ஏற்பட்டுள்ளதோடு, நடந்து செல்லவும் வழியில்லாத நிலை ஏற்பட்டு, அப்பகுதி மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. எனவே, மலைக் கிராம மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளதால், மலைக் கிராமச் சாலையில் ஏற்பட்டுள்ள நிலச்சரிவை அப்புறப்படுத்தி சாலையை சீரமைக்க மாவட்ட நிர்வாகம் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஈடிவி பாரத் தமிழ்நாடு (Credits - ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணையஇங்கே க்ளிக் செய்யவும்

ABOUT THE AUTHOR

...view details