சென்னை: தமிழ்நாட்டில் தொடக்கக்கல்வித் துறையின் கீழ் 31 ஆயிரத்து 336 பள்ளிகளும், பள்ளிக்கல்வித்துறையின் கீழ் 6 ஆயிரத்து 29 உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளும் செயல்பட்டு வருகிறது. வரும் கல்வியாண்டில் அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிப்பதற்கு தமிழ்நாடு அரசு முடிவு செய்து, 2024-25ஆம் கல்வியாண்டில் முன்னதாக மார்ச் 1ஆம் தேதி முதல் சேர்க்கைப் பணிகளை துவங்கியது.
அதன்படி, மார்ச் 1ஆம் தேதி முதல் 27ஆம் தேதி வரையில் 2 லட்சத்து 84 ஆயிரத்து 443 மாணவர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். மார்ச் 31ஆம் தேதிக்குள் 3 லட்சம் மாணவர்கள் சேர்க்கை இலக்கை எட்ட பள்ளிக்கல்வித்துறை திட்டமிட்டுள்ளது.
தமிழ்நாட்டில் 5 வயது பூர்த்தி அடைந்த அனைத்து குழந்தைகளும் பள்ளியில் சேர்க்கப்பட வேண்டும். ஐந்து வயது பூர்த்தி அடைந்த குழந்தை பள்ளியில் சேர்க்காமல் விடுப்பட்டுள்ளதா? என்பதை தொண்டு நிறுவனங்கள் மூலமாக இரண்டு வாரங்களில் சர்வே எடுக்கும் பணியும் நடைபெற உள்ளது. இது குறித்து அனைத்து தொடக்க, நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு, மாவட்டக் கல்வி அலுவலர்கள் தெரிவிக்கவும் பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது.
தமிழ்நாட்டில் உள்ள 6 ஆயிரத்து 29 உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில், தனியார் பள்ளிகளுக்கு இணையாக, நவீன தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி கம்ப்யூட்டர் ஆய்வகங்கள் துவக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. நடப்பாண்டில் 20 ஆயிரம் தொடக்கப் பள்ளிகளில் திறன்மிகு வகுப்பறைகள் (smart classroom) அமைக்கும் பணிகளை பள்ளிக்கல்வித்துறை தீவிரமாக செய்து வருகிறது.
கோடை விடுமுறை முடிவடைந்து பள்ளிகள் திறக்கும் திறன்மிகு வகுப்பறைகள் செயல்பாட்டில் இருக்கும். அதேபோல் அரசுப் பள்ளி ஆசிரியர்கள் 80 ஆயிரம் பேருக்கு டேப் வழங்கப்பட உள்ளது.
7 ஆயிரத்து 956 அரசு நடுநிலை, உயர்நிலைப் பள்ளிகளில் உயர் தொழில்நுட்ப ஆய்வகங்கள் அமைக்கப்பட உள்ளது.