தஞ்சாவூர்:இளநிலை மருத்துவ படிப்பில் சேருவதற்கான, தேசிய அளவிலான தேசிய மருத்துவ நுழைவுத் தேர்வான, நீட் தேர்வு இன்று (மே 5) நாடு முழுவதும் பிற்பகல் 2 மணி முதல் 5.30 மணி வரை நடைபெறுகிறது. தேர்வு விதிமுறைப்படி 1.30 மணி வரை மட்டும் தேர்வர்கள் தேர்விற்கு அனுமதிக்கப்படுவார்கள்.
இந்நிலையில், தஞ்சை மாவட்டத்தில் தாமரை சர்வதேச பள்ளி என்ற ஒரே பெயரில் தஞ்சாவூர் மற்றும் கும்பகோணம் என 40 கி.மீ தூர இடைவெளியில் இரு பள்ளிகள் இயங்குகிறது இவ்விரு பள்ளிகளுமே நீட் தேர்வு மையங்களாக உள்ளது.
ஆண்டு தோறும் தஞ்சை செல்ல வேண்டியவர்கள் கும்பகோணத்திற்கும், கும்பகோணத்திற்கு வர வேண்டியவர்கள் தவறுதலாகத் தஞ்சைக்கும் செல்வதால் பல மாணவர்கள் நேரம் கடந்து வந்து தேர்வு எழுத முடியாமல் கண்ணீருடன் வீடு திரும்புவதும் வாடிக்கையாக இருந்து வருகிறது. அது இந்தாண்டும் தொடர்ந்துள்ளது.
இந்நிலையில், இன்றும், தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டையை அடுத்துள்ள ஊரணியைச் சேர்ந்த மாணவி ரிஹானா, தனக்கு ஒதுக்கப்பட்ட கும்பகோணம் மையத்திற்குப் பதிலாகத் தவறுதலாகத் தஞ்சாவூர் தேர்வு மையமான தாமரை பள்ளிக்குச் சென்று விட்டு அவசர அவசரமாக காரில் 1.40 மணிக்குக் கும்பகோணம் மையத்திற்குத் தனது பெற்றோருடன் வந்தார். இருப்பினும் தேர்வு மையத்திற்கு நுழையக் கடைசி நேரம் 1.30 என்பதால் மாணவி தேர்வு மையத்திற்குள் செல்ல அனுமதி மறுக்கப்பட்டது.
இதனால், அந்த மாணவி வேதனையுடன் தேர்வு எழுத முடியாமல் மீண்டும் பெற்றோருடன் சோகத்துடன் வீடு திரும்பினார். அதே வேளையில், தஞ்சையைச் சேர்ந்த மற்றொரு மாணவி தஞ்சை தேர்வு மைய தாமரைக்குச் சென்று அங்கு, கும்பகோணம் தாமரை மையம் தனக்கு ஒதுக்கப்பட்டிருப்பது கண்டு அதிர்ச்சியடைந்து, அங்கிருந்து நண்பர் உதவியோடு, கும்பகோணத்திற்கு இருசக்கர வாகனத்தில் பயணித்து, சரியாக 1.25 மணிக்கு வந்து சேர்ந்ததால் அந்த மாணவி தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டார்.
ஒரே மாவட்டத்தில், 40 கி.மீ தொலைவிற்கு அப்பால், இரு வேறு இடங்களில் ஒரே பெயரில் தேர்வு மைய குளறுபடி ஆண்டு தோறும் தொடர்கதையாகிறது, இதனை முடிவிற்குக் கொண்டு வர சம்மந்தப்பட்ட தேர்வுத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் அல்லது ஒரு தேர்வு மையத்திற்கு வேறு பள்ளி நிர்வாகத்திற்கு வழங்க வேண்டும் என கோரிக்கை தொடர்ந்து எழுந்து வருகிறது.
மேலும், கும்பகோணம் தாமரை தேர்வு மையத்தில், மாணவ மாணவியர்களுடன் வரும் பெற்றோர்களைப் பாதுகாவலர்கள் தேர்வு மையத்திலிருந்து 200 மீட்டருக்கு அப்பால் தடுத்து நிறுத்தி விடுகின்றனர். இதனால் அவர்கள் கடும் வெய்யிலில் ஒதுங்கக் கூட இடம் இன்றி தவிக்கும் சூழல் நிலவுவதாகப் பெற்றோர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
தஞ்சை மாவட்டத்தில் மட்டும், தஞ்சாவூர், கும்பகோணம், பட்டுக்கோட்டை என 3 இடங்களில், மொத்தம் 5 ஆயிரத்திற்கும் மாணவ மாணவியர்கள் நீட் தேர்வு எழுதுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: ஆஹா கல்யாணம்.. மழை வேண்டி பஞ்ச கல்யாணிகளுக்கு கல்யாணம்! - Donkey Marriage For Rain