தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

17 வருட கனவை நனவாக்கிய ஸ்டாலின்.. டெல்லியின் திமுக முகமாக மாறுகிறாரா கனிமொழி? - KANIMOZHI KARUNANIDHI

Kanimozhi Karunanidhi: மக்களவை, மாநிலங்களவை என இரண்டுக்கும் சேர்த்து திமுக நாடாளுமன்ற குழுத் தலைவராக கனிமொழியை நியமித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

கனிமொழி கருணாநிதி
கனிமொழி கருணாநிதி (Credit - Kanimozhi X Page)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jun 11, 2024, 3:52 PM IST

சென்னை:திமுக நாடாளுமன்றக் குழு நிர்வாகிகள் பட்டியலை திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் அறிவித்தார். அதில் மக்களவை, மாநிலங்களவை இரண்டு அவைகளுக்கும் சேர்த்து திமுக நாடாளுமன்றத்தின் குழுத் தலைவராக அக்கட்சியின் துணை பொதுச்செயலாளர் கனிமொழி கருணாநிதி நியமிக்கப்பட்டுள்ளார்.

நாடாளுமன்றத் தேர்தலில் தூத்துக்குடி தொகுதியில் போட்டியிட்ட கனிமொழி, தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட அனைத்து வேட்பாளர்களையும் டெபாசிட் இழக்க வைத்து வெற்றி பெற்றார். மேலும், நடைபெற்று முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் தான் போட்டியிட்ட தொகுதிகளில் மட்டும் இல்லாமல், தமிழகம் முழுவதும் இந்தியா கூட்டணி வேட்பாளர்களுக்காகவும் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு அவர்களின் வெற்றிக்கும் பங்காற்றியுள்ளார்.

எம்.பி டூ நாடாளுமன்ற குழுத் தலைவர்:மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் மகளான கனிமொழி, தீவிர அரசியலில் நுழைவதற்கு முன்பாக தனியார் நாளேட்டிலும், சிங்கப்பூரில் இயங்கி வந்த ஒரு இதழிலும் பணியாற்றினார். இந்த நிலையில்தான், 2007ஆம் ஆண்டு மாநிலங்களவை உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டார். அப்போது, இந்திய அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தத்தை மையப்படுத்தி ஆற்றிய இவரது உரை கவனிக்க வைத்தது.

2019 நாடாளுமன்றத் தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட்ட கனிமொழி, 5 லட்சத்து 63 ஆயிரத்து 143 வாக்குகளை பெற்று வெற்றி பெற்றார். அதேபோல், பெண்ணியக் கருத்துக்கள், ஆண் பெண் சமத்துவம் பற்றி வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் மேடைகள், கவிதைகள் மூலம் பேசி வருகிறார் கனிமொழி. மேலும், 2007 முதலே அவருடைய நாடாளுமன்ற உரைகள் அதிகம் கவனிக்கப்படுகின்றது.

இதன் காரணமாகவே அவர் டெல்லியின் திமுக முகமாக மாற்றப்படுகிறார் என்ற கருத்தும் பரவாலாக இருந்து வருகிறது. 2019 முதல் 2024 வரை மக்களவையின் திமுக தலைவராக டி.ஆர்.பாலுவும், துணைத் தலைவராக கனிமொழி கருணாநிதியும், கொறடாவாக ஆ.ராசாவும் செயல்பட்டனர். அப்பதவியை வகித்து வந்த கட்சியின் பொருளாளர் டி.ஆர்.பாலு மீண்டும் தனக்கே வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தாகவும், அதன் அடிப்படையில்தான் அவருக்கு அப்போது பதவி வழங்கப்பட்டதாகவும் கூறப்பட்டது.

மு.க.ஸ்டாலின் எடுத்த முடிவு:நீண்ட நெடுங்காலமாக டெல்லி அரசியலில் கோலோச்சி விட்டார் டி.ஆர்.பாலு, அதனால் புதிதாக ஒருவரை நியமிக்க வேண்டும் என்று மு.க.ஸ்டாலின் விரும்பியுள்ளதாகத் தெரிகிறது. மேலும், நடைபெற்று முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியுடனான தொகுதிப் பங்கீட்டை சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தியுடன் பேசி முடித்தது.

அதேபோல், கடந்த வருடம் சென்னையில் நடைபெற்ற மகளிர் உரிமை மாநாட்டில் சோனியா காந்தி, பிரியங்கா காந்தி, தேசியவாத காங்கிரஸின் செயல் தலைவர் சுப்ரியா சுலே உள்ளிட்ட இந்தியா கூட்டணிக் கட்சியின் பல பெண் தலைவர்களை கலந்து கொள்ள வைத்தது உள்ளிட்ட பல்வேறு பணிகளில் கனிமொழி செயல்பட்டார்.

இதன் காரணமாகவே திமுக மட்டுமல்லாது, இந்தியா கூட்டணிக் கட்சித் தலைவர்கள் பலரும் கனிமொழி தான் நாடாளுமன்றக் குழுத் தலைவராக நியமிக்கப்பட வேண்டும் என்று விருப்பம் தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில்தான், திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின், கனிமொழியை நாடாளுமன்றத்தின் குழுத் தலைவராக நியமித்து இருப்பதாகக் கூறப்படுகிறது.

இதையும் படிங்க:கர்நாடகாவை சேர்ந்த சோமண்ணாவுக்கு நீர்வளத்துறை அமைச்சர் பொறுப்பு.. தமிழ்நாட்டில் வலுக்கும் எதிர்ப்பு!

ABOUT THE AUTHOR

...view details