சென்னை: அடுத்த மாதம் இதே நாளில் (ஏப்ரல் 19, 2024) தமிழ்நாட்டு மக்கள் நாடாளுமன்றத் தேர்தலில் வாக்களித்துக் கொண்டிருப்பார்கள். கூட்டணிக் கணக்குகள் ஏறத்தாழ முடிவுக்கு வந்துவிட்டன. மாநிலத்தில் ஆளும் கட்சியான திமுக, தனது கூட்டணி முடிவை உறுதி செய்து, தொகுதிப் பங்கீட்டையும் அறிவித்து விட்டது. கிட்டத்தட்ட 2019ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் இருந்த அதே கூட்டணிதான் தற்போதும் அமைந்துள்ளது. கடந்த முறை 20 தொகுதிகளில் போட்டியிட்ட திமுக, இந்த முறை 21 தொகுதிகளில் போட்டியிடுகிறது. காங்கிரஸ் கட்சி 2019ல் சில தொகுதிகள் மாற்றங்களோடு, அதே 10 எண்ணிக்கையில் தொகுதிகளைப் பெற்றுள்ளது.
எடப்பாடி பழனிசாமி மற்றும் அண்ணாமலையின் சொந்த தொகுதிகள் கொங்கு மண்டலத்தில் வருவதால், அங்கே தனது பலத்தைக் காட்டும் வகையில் ஈரோடு, கோவை தொகுதிகளைக் கூட்டணிகளிடமிருந்து பெற்றுள்ளது திமுக. பாஜக கூட்டணிக்கு தாவிய ஐ.ஜே.கே.வின் பெரம்பலூர் தொகுதியிலும் திமுகவே போட்டியிடுகிறது. இது தவிர 2019-இல் திமுக கூட்டணி தோல்வியடைந்த ஒரே தொகுதியான தேனியும் திமுகவின் ஹிட்லிஸ்ட்டில் உள்ளது. தொகுதிப்பங்கீடு சுமூகமாக முடிவடைந்த நிலையில், விறுவிறுப்பாக பிரசார பணிகளைத் துவக்கியுள்ளது திமுக கூட்டணி.
கடந்த சட்டமன்றத் தேர்தலின்போது அதிமுக மற்றும் பாஜக கூட்டணியில் இருந்தாலும், மக்களவைத் தேர்தலுக்கு முன்பாகவே அதிமுக மீதான அண்ணாமலையின் ஆர்வம் குறைந்தது. அதிமுக முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவை விமர்சித்தது, கூட்டணியில் தர்மசங்கடத்தை ஏற்படுத்திய நிலையில், கடந்த அக்டோபர் மாதம் பாஜகவுடனான கூட்டணியை முறித்துக் கொள்வதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தது அதிமுக. கடந்த 2019ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் அதிமுக, பாஜக, பாமக, தேமுதிக, புதிய தமிழகம் என மெகா கூட்டணி அமைக்கப்பட்டது. தேசிய அளவில் பாஜக வெற்றி பெற்றிருந்தாலும், தமிழ்நாட்டில் இந்த கூட்டணிக்கு தேனி தொகுதி மட்டுமே கிடைத்தது.
தோல்வியடைந்திருந்தாலும் வாக்கு வங்கி அடிப்படையில் இந்த கூட்டணியின் செயல்பாடுகளைக் காணலாம். பாரம்பரியமான இரட்டை இலை சின்னத்தில் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமி ஒன்றாக இணைந்து களம் கண்ட இந்த தேர்தலில், 20 தொகுதிகளில் களமிறங்கிய அதிமுக 18.7 % வாக்குகளைப் பெற்றது. பாமக 5.5 சதவீத வாக்குகளும், பாஜக 3.7 சதவீத வாக்குகளும், தேமுதிக 2.2 சதவீத வாக்குகளும் பெற்றன.
நடப்பு தேர்தலில் இதே கூட்டணிதான் 2 ஆக பிரிந்திருக்கிறது என கருத்தில் கொள்ளலாம். முதல் கட்டமாக அதிமுகவில் கிளர்ச்சி செய்த ஓ.பன்னீர்செல்வம், இனி இரட்டை இலை சின்னத்தைப் பயன்படுத்த முடியாது என உயர்நீதிமன்றம் கூறியிருக்கிறது. இவர் தற்போது பாஜக அணியில் இருக்கிறார். அதிமுகவுடன் 2 நாட்களுக்கு முன்பு வரையிலும் பேச்சுவார்த்தை நடத்திய பா.ம.க., பாஜக கூட்டணியில் சேர்ந்து விட்டது. சேலத்தில் பிரதமர் மோடி பங்கேற்ற பொதுக்கூட்டத்தில் ராமதாஸ் மற்றும் அன்புமணி ராமதாஸ் என இருவருமே பங்கேற்றனர். தேமுதிக தற்போது (19.03.2024) வரையிலும் தனது கூட்டணி நிலைப்பாட்டை அறிவிக்கவில்லை.
இந்த சூழலில் புதிய தமிழகம் கிருஷ்ணசாமியைத் தவிர்த்து அதிமுக கூட்டணியில் வேறு கட்சிகள் ஏதும் இணையவில்லை. வடக்கு மாவட்டங்களைப் பொறுத்த வரையிலும் பா.ம.க. மற்றும் தேமுதிக கட்சிகள் அடிப்படையான வாக்குவங்கியைக் கொண்டுள்ளன. பாமக வன்னியர் சாதி அடிப்படையிலான வாக்குவங்கியைக் கொண்டுள்ளது. தேமுதிக நிறுவனரான மறைந்த விஜயகாந்த் ஆரம்பக் காலம் முதலே தனது ரசிகர் மன்றங்களின் செயல்பாடுகளை வட மாவட்டங்களில் இயல்பாகவே வலுப்படுத்தியிருந்தார். இதுதான் மதுரைக்காரரான விஜயகாந்த்தை, விருத்தாசலத்திலும், ரிஷிவந்தியத்திலும் போட்டியிடும் துணிச்சலைக் கொடுத்தது. குறிப்பாக 2021ம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் அமமுக, தேமுதிக கூட்டணி வேட்பாளர்கள் 20க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வாக்குகளைப் பிரித்து அதிமுகவுக்குத் தலைவலி கொடுத்ததை மறக்க முடியாது.
அடிப்படையில், தமிழ்நாட்டில் குறைவான வாக்குவங்கியைக் கொண்ட பாஜகவின் தலைமையை ஏற்றுக் கூட்டணியில் இணைந்திருக்கிறது பாமக. 2019 தேர்தலில் பாஜகவைக் காட்டிலும் அதிக தொகுதிகளில் பா.ம.க. போட்டியிட்டிருந்தாலும், தற்போது பாஜகவைக் காட்டிலும் குறைவான அல்லது இணையான தொகுதிகளில் போட்டியிட முன்வந்துள்ளது. 2019ம் ஆண்டு தேர்தலிலும் 2024 தேர்தலிலும் அப்படி என்ன மாறிவிட்டது? தமிழ்நாட்டில் மூன்றாவது அணி அமைக்கும் சூழல் இருப்பதாக பாஜக எப்படி கருதுகிறது? என ஆராய்ந்தால் ஒரே ஒரு வித்தியாசம்தான். தமிழ்நாடு பாஜக தலைவராக இருக்கும் அண்ணாமலை 2020ம் ஆண்டில் பாஜகவில் இணைந்தார். இவரின் சுற்றுப்பயணம், டெல்லி தலைமைக்கு அண்ணாமலை அளிக்கும் நம்பிக்கை என எல்லாமும் சேர்ந்து, தமிழ்நாட்டில் தனது பலத்தைச் சோதித்துப் பார்க்கக் களம் இறங்கியிருக்கிறது பா.ஜ.க.. அண்ணாமலை பாஜகவின் துணைத் தலைவராக இருந்த போது நடைபெற்ற 2021 சட்டமன்றத் தேர்தலில் அண்ணாமலை தோல்வியடைந்ததோடு, பாஜகவின் வாக்கு வங்கியும் சற்றே குறைந்திருந்தது குறிப்பிடத்தக்கது.
ஆனாலும் பாஜகவின் தலைவராகப் பொறுப்பேற்ற பின்னர், "என் மண் என் மக்கள்" யாத்திரை உள்ளிட்ட நடவடிக்கைகள் மக்களிடம் சென்றடைய தனக்கு உதவியிருக்கும் என அண்ணாமலை நம்புகிறார். முதலில் அதிமுகவைப் புறக்கணித்திருந்தாலும் கூட ஓரிரு வாரங்கள் முன்பு வரையிலும் கூட ஜி.கே.வாசன் மூலம் அதிமுகவுக்குத் தேசிய தலைமை தூது அனுப்பியிருந்தது. ஆனாலும் எடப்பாடி பழனிசாமி, முன்வைத்த கடுமையான சில நிபந்தனைகள் கூட்டணி வேண்டாம் என்ற முடிவுக்கு பாஜகவைத் தள்ளியிருக்கிறது என்கின்றனர், இரு கட்சியிலும் உள்ள சில மூத்த தலைவர்கள்.
அண்ணாமலையா? அதிமுகவா? என்ற கேள்விக்கு அண்ணாமலை என்ற பதிலைத் துணிந்து கொடுத்திருக்கிறது பாஜக டெல்லி தலைமை. வரவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தல் இதற்கான பதிலைக் கொடுக்கும் என நம்பலாம். அதே நேரத்தில் தனித்துப் போட்டி என்பது அதிமுக என்ற கட்சிக்குப் புதிது இல்லை. ஜெயலலிதா இருந்த போது, 2014 நாடாளுமன்றத் தேர்தலில் தனித்துப் போட்டியிட்டு "மோடியா லேடியா" என அறைகூவல் விடுத்து 39ல் 37 தொகுதிகளை வென்று காட்டினார். ஜெயலலிதாவைப் போல பொதுச்செயலாளர் ஆகியிருக்கும் எடப்பாடி பழனிசாமி, ஜெயலலிதாவுக்கு இருக்கும் பலம் தனக்கும் உள்ளது என நிரூபிப்பாரா? அல்லது அண்ணாமலையின் கணக்கு பலிக்குமா? என்பதை ஜூன் 4ஆம் தேதி வரும் தேர்தல் முடிவுகளில் காணலாம்.
இதையும் படிங்க:"பெண்களே பாஜகவின் பாதுகாப்புக் கவசம்”.. மீண்டும் ஜெயலலிதாவை மேற்கோள் காட்டிய மோடி!