தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

புதைந்த வீட்டில் சடலம் மீட்பு! அதிர்ச்சியில் உறைந்த திருவண்ணாமலை - STONE ROLLED IN TIRUVANNAMALAI

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலின் பின்புறம் நிலச்சரிவு ஏற்பட்ட இடத்திலிருந்து சிறுவனின் உடல் மீட்கப்பட்டதாக மீட்புக்குழு அறிவித்துள்ளது.

பாறை உருண்டு விழுந்ததில் சிக்கிய வீடுகள்
பாறை உருண்டு விழுந்ததில் சிக்கிய வீடுகள் (Credits - ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 1, 2024, 11:02 PM IST

Updated : Dec 2, 2024, 12:29 PM IST

திருவண்ணாமலை :பெஞ்சல் புயல் காரணமாக, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் கனமழையானது வெளுத்து வாங்கியது. திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலின் பின்புறம் உள்ள மலையின் அடிவாரப் பகுதியில் கனமழை காரணமாக ஞாயிற்றுக்கிழமை மண்சரிவு ஏற்பட்டது . குறிப்பாக, மலையின் அடிவாரப் பகுதியான வ.உ.சி பகுதிகளில் மண் சரிவு மற்றும் பாறைகள் உருண்டு விழுந்ததில், அப்பகுதியில் உள்ள இரண்டு வீடுகள் இடிபாடுகளில் சிக்கின. இந்த இடிபாடுகளில் ஏழு பேர் சிக்கி இருக்கலாம் என அக்கம் பக்கத்தினர் தகவல் தெரிவிக்கின்றனர்.

பாறைகள் உருண்டு விழுந்த சம்பவம் குறித்து தீயணைப்புத்துறைக்கு அக்கம்பக்கத்தினர் தகவல் தெரிவித்ததால், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புத்துறையினர் மீட்புப் பணியில் ஈடுபட்டனர். மேலும் மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியனும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மீட்புப்பணிகளை பார்வையிட்டு மீட்புப் பணிகளை துரிதப்படுத்த அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.

பாறை உருண்டு விழும் காட்சி (Credits - ETV Bharat Tamil Nadu)

தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் - 35 வீரர்களும், திருவண்ணாமலை மாவட்ட காவல் கமாண்டோ குழுவினர் - 50 வீரர்களும், மாநில மீட்பு படையினர் - 20 வீரர்களும், திருவண்ணாமலை ஆயுதப்படை காவலர்கள் - 40 நபர்கள் மற்றும் காவல்துறை சார்பாக 60 நபர்களும் என மொத்தம் 170 பேர் மீட்டு மற்றும் பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். ஆனால், இடர்பாடுகளில் சிக்கிய நபர்களின் விவரம் தற்போது வரை தெரியவில்லை எனக் போலீசார் தரப்பில் கூறப்பட்டுள்ளது.

மீட்புப் பணியில் இடத்தில் அமைச்சர் எ.வ.வேலு (ETV Bharat Tamil Nadu)

மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன், மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் சுதாகரன், தேசிய பேரிடர் மீட்பு குழுவின் உதவி கமாண்டர் ஸ்ரீதர் ஆகியோர் பணிகளை தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். மண்சரிவில் சிக்கியவர்களை மீட்க இந்திய தொழில் நுட்ப போரசிரியர்களும் ,பாறையை உடைத்து எடுக்கும் நிபுணர்கள் குழு ஏற்காட்டிலிருந்து வரவைக்கப்படுவதாக பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்துள்ளார்.

மீட்புப் பணியில் இடத்தில் அமைச்சர் எ.வ.வேலு (ETV Bharat Tamil Nadu)

மண் சரிவில் சிக்கி கொண்டவர்களை மீட்டெடுக்கும் பணிகள் இரண்டாவது நாளாக திங்கட் கிழமையும் தொடரும் நிலையில் மாநில பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு நேரில் பார்வையிட்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் , திருவண்ணாமலை மாவட்டத்தில் கடந்த 1965 ஆம் ஆண்டிற்கு பிறகு தற்போது தான் பெரிய மழையை எதிர் கொண்டிருப்பதாகக் கூறினார். மண் சரிவு காரணமாக பாறை உருண்டதில் ஒரு வீட்டில் இருந்தவர்கள் 4 பெண் குழந்தைகளும் 1 ஆண் குழந்தை மற்றும் கணவன் ,மனைவி என 7 பேர் சிக்கியிருக்கலாம் என அதிகாரிகள் தமக்கு தகவல் அளித்துள்ளதாகவும் அமைச்சர் கூறினார்.

மீட்புப் பணியில் ஈடுபடும் காட்சிகள் (ETV Bharat Tamil Nadu)

மீட்புப் பணிகளுக்கு இடையே மேலும் ஒரு பெரிய பாறை ஒன்று உருண்டு விழும் நிலையில் உள்ளதால் அதனை உடைத்து எடுக்கவும் ,மண் சரிவை தடுக்கவும் சென்னையில் உள்ள இந்தியதொழில் நுட்ப நிறுவன பேராசிரியர்களும்,பாறையை உடைத்து எடுக்கும் வல்லுநர் குழுவும் இன்று நண்பகலுக்குள் வருவார்கள் எனவும் அமைச்சர் கூறினார்.

திருவண்ணாமலை மாவட்டத்தில் கடந்த இரண்டு நாட்களாக பெய்த கனமழையில் பாதிக்கப்பட்டவர்கள் 36 முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். திருவண்ணாமலை நகரை தவிர்த்து போளூர் ,கலசப்பாக்கம் பகுதியில் 2 பெண் குழந்தைகள் மழை சார்ந்த இடர்பாடுகளால் உயிரிழந்துள்ளதாகவும் மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

மீட்புப் பணியில் ஈடுபடும் காட்சிகள் (ETV Bharat Tamil Nadu)

மீட்புப் பணியில் சிக்கல் :

மண்சரிவு ஏற்பட்டுள்ள பகுதி குறுகலான பாதை என்பதாலும் பெரிய கனரக வாகனங்கள் உள்ளே வர முடியாத காரணத்தினாலும் மீட்பு பணி மிகவும் மெதுவாகவே நடைபெற்று வருகிறது. "ஜேசிபி போன்ற வாகனங்களோ பாறைகளை உடைக்கக்கூடிய பெரிய உபகரணங்களோ கொண்டு செல்ல முடியாத காரணத்தினால் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ள வீரர்கள் கைகளாலேயே பாறைகளை உடைத்தும் அப்புறப்படுத்தியும் வருகின்றனர் இதன் காரணமாக மீட்பு பணி சவாலான ஒன்றாக உள்ளது" என அப்பகுதியைச் சேர்ந்த பாலமுருகன் தெரிவித்துள்ளார்.

இடர்பாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் மீட்பு படையினர் (ETV Bharat Tamil Nadu)

மூன்றாவது இடத்தில் மண் சரிவு:ஏற்கனவே வ.உ.சி.நகர் மலைப்பகுதியில் இரண்டு இடங்களில் மண்சரிவு ஏற்பட்ட நிலையில் மலை மீது குகை நமச்சிவாய திருக்கோவில் சுற்றுச்சூழல் சரிந்து விழுந்தது. இந்த கோயிலில் பதிவான சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளன. இந்த நிகழ்வின் போது கோயிலில் பக்தர்கள் இருந்த போதிலும் யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை. இதே போன்று திருவண்ணாமலை அண்ணாமலை தென்கிழக்கு பகுதியில் சுமார் ஆயிரம் அடி அளவிற்கு மலையின் உச்சியில் மண்சரிவு ஏற்பட்டுள்ளதாக வருவாய்த்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பகுதிவாசிகள் கூறுவதென்ன?:முன்னதாக, இத்துயர சம்பவம் குறித்து அப்பகுதியை சேர்ந்த பாலமுருகன் என்பவர் ஈடிவி பாரத் தமிழ் ஊடகத்திற்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில், "திருவண்ணாமலையில் கடந்த இரண்டு நாட்களாக கடுமையான மழை பெய்தது. நேற்று மாலை 4 மணி அளவில் நிலச்சரிவு ஏற்பட்டது இதனால் எந்த வேலையும் செய்ய முடியவில்லை. இன்று காலை மத்திய பேரிடர் குழு போலீசார், வருவாய்த் துறையினர் நெடுஞ்சாலைத் துறையினர் வந்து மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மழை அதிகமாக பெய்துள்ளதால் மணல் நன்றாக ஊறி எடுக்க எடுக்க மண் சரிவு ஏற்பட்டு கொண்டே இருக்கிறது. இங்கிருந்து அரை கிலோ மீட்டர் தொலைவில் காலையில் ஒரு நிலச்சரிவு ஏற்பட்டது. அதில் எந்த உயிர் சேதமும் இல்லை" என்றார்.

Last Updated : Dec 2, 2024, 12:29 PM IST

ABOUT THE AUTHOR

...view details