கோயம்புத்தூர்: கோயில் திருவிழாக்கள் மற்றும் பொது நிகழ்ச்சிகளில் மேடைக்கலைஞர்களின் கலை நிகழ்ச்சிகள் நடைபெறுவது வழக்கம். அதேசமயம், இதுபோன்ற நிகழ்ச்சிகளில் ஆபாச நடனம் உள்ளிட்டவை நடத்தப்பட்டால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
இந்நிலையில் கோவை மாவட்டத்தின் புறநகர் பகுதிகளில் நடக்கும் ஒரு சில பொது நிகழ்வுகளில், சிலர் ஆபாச நடன நிகழ்சிகளை நடத்தி வருவதாக குற்றச்சாடு எழுந்துள்ளது. இந்நிலையில், கோவை மாவட்ட மேடை நடனக் கலைஞர் சங்கத்தினர் இன்று (புதன்கிழமை) கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளனர்.
அப்போது எம்ஜிஆர், விஜயகாந்த், எம்.ஆர்.ராதா உள்ளிட்ட மறைந்த நடிகர்களை போல் வேடம் அணிந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்திருந்த அவர்கள் மனு அளித்தனர். மேலும், தங்கள் துறைக்கு சம்பந்தமில்லாத ஒரு சிலர், மேடை கலைஞர்களுக்கு களங்கம் ஏற்படுத்தும் விதமாகவும், கலாச்சார சீர்கேடு ஏற்படும் வகையிலும் நீதிமன்ற உத்தரவை மீறி ஆபாச நிகழ்ச்சிகளை நடத்துவதாக அவர்கள்குற்றம்சாட்டினர்.
இதுகுறித்து எம்ஜிஆர் போல் வேடம் அணிந்து வந்த கலைஞர் கூறுகையில், "கலாச்சார பாரம்பரியமிக்க கோவையில், அதன் நற்பெயரை கெடுக்கும் விதமாக வெளி மாநிலங்களில் இருந்து நடனக்கலைஞர்களை அழைத்து வந்து, நீதிமன்ற உத்தரவை மீறி ஆபாச நடன நிகழ்ச்சிகள் நடத்துகின்றனர்.