சென்னை:கொக்கைன் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டதாக 3 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைத்துள்ள நிலையில், இச்சம்பவம் குறித்து புனித தோமையார் மலை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சென்னை உட்பட தமிழ்நாடு முழுவதும் போதைப் பொருள்களுக்கு எதிராக போலீசார் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில், சென்னை புனித தோமையார் மலை காவல் மாவட்ட எல்லைக்குப்பட்ட பகுதிகளில், கொக்கைன் போதைப்பொருள் விற்பனை செய்வதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இந்தத் தகவலின் அடிப்படையில் போலீசார், தனிப்படை அமைத்து தீவிரமாக கண்காணித்து வந்துள்ளனர். இந்த நிலையில், சென்னை அண்ணா நகர் அருகே சிலர் சந்தேகத்திற்கு இடமாக இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது.
இதையும் படிங்க:மெத்தபெட்டமைன் விற்ற 2 பேர் கைது.. ராமநாதபுரம் எஸ்பி கொடுத்த வார்னிங்!
தகவலின் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்குச் சென்று, அங்கிருந்தவர்களை சுற்றி வளைத்துப் பிடித்துள்ளனர். இதில், அவர்கள் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டது தெரியவந்தது. இதனையடுத்து, அவர்களை காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். விசாரணையில், நைஜீரியா நாட்டைச் சேர்ந்த ஈஸ் ஜான் (39), சென்னை செனாய் நகரைச் சேர்ந்த அருண் (40), கொரட்டூரைச் சேர்ந்த மெக்கலன் ட்ரெவர் (42), புரசைவாக்கத்தைச் சேர்ந்த ரூபி மாசிலாமணி (47) என்பது தெரியவந்துள்ளது.
இதையடுத்து, இவர்களிடமிருந்து 3 கிராம் கொக்கைன் போதைப்பொருள், 5 செல்போன்கள், ரூ.1 லட்சம் பணம், பாஸ்போர்ட் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். அதனைத் தொடர்ந்து, மூன்று பேர் மீது வழக்குப் பதிவு செய்த போலீசார், அவர்களை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். தொடர்ந்து, போதைப்பொருள் விற்பனையில் யார் ஈடுபட்டிருந்தாலும் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறையினர் எச்சரித்துள்ளனர்.
ஈடிவி பாரத் தமிழ்நாடு (Credits - ETV Bharat Tamil Nadu) ஈடிவி பாரத் வாட்ஸ்அப் சேனலில் இணையஇங்கே கிளிக் செய்யவும்