சென்னை: சென்னை புதுப்பேட்டை சியாளி தெருவச் சேர்ந்தவர் சித்திக் (50). இவர் கடந்த ஏழு வருடமாக தயிர் வியாபாரம் செய்து வருகிறார். இந்த நிலையில், கடந்த மே 9ஆம் தேதி இரவு 8.45 மணியளவில், கீழ்பாக்கம் ஈவிஆர் சாலையில் உள்ள கனரா வங்கி ஏடிஎம்மில் பணம் செலுத்துவதற்கு சித்திக் நின்று கொண்டிருந்துள்ளார்.
அப்போது அங்கு தலையில் ஹெல்மெட்டுடன், வெள்ளை சட்டை, காக்கி பேண்ட் அணிந்தபடி, கையில் வாக்கி டாக்கியுடன் வந்த மர்ம நபர் ஒருவர், ஏடிஎம் அறையில் இருந்த சித்திக்கை வெளியே வரும்படி கூறியுள்ளார். இதனால் சித்திக், தான் கொண்டு வந்த பணத்தை ஏடிஎம்மில் டெபாசிட் செய்யாமல் வெளியே வந்து என்னவென்று கேட்டுள்ளார்.
ஏடிஎம் முன்பே துணிகரம்: அதற்கு அந்த நபர், ''நான் கீழ்பாக்கம் காவல் நிலையத்தில் பணியாற்றும் போலீஸ். நீங்கள் ஏடிஎம்மில் வெகுநேரமாக என்ன செய்கிறீர்கள்? உங்களைப் பார்த்தால் சந்தேகமாக உள்ளது. கையில் என்ன இவ்வளவு பணம்? அதை கொடு'' எனக் கூறி சித்திக்கிடம் இருந்த பணத்தை பிடுங்கியுள்ளார்.
பின்னர் ''வண்டியில் ஏறு, உன் மீது நிறைய வழக்கினைச் சேர்த்து விடுவேன்'' என மிரட்டி, இங்கிருந்து ஓடிவிடு எனக் கூறிவிட்டு சித்திக்கிடம் பிடுங்கிய 34 ஆயிரத்து 500 ரூபாயைக் கொண்டு சென்றுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த சித்திக், இது குறித்து கீழ்பாக்கம் காவல் நிலைய குற்றப்பிரிவில் புகார் அளித்துள்ளார். புகாரின் அடிப்படையில் சம்பவ இடத்திற்குச் சென்ற போலீசார், அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளைக் கைப்பற்றி விசாரணை நடத்தி உள்ளனர்.